Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம்


எனது பிரியமான நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். மீண்டும் ஒரு முறை என் மனதின் குரலை உங்களுக்குத் தெரியப்படுத்த ஒரு நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. நாட்டின் தெற்குப் பகுதியில் மக்கள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள். நேற்று நாடு முழுவதிலும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்திய அரசு சமுதாய பாதுகாப்புக்காக வேண்டி, பல புதிய புதிய திட்டங்களை மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமல் படுத்தி இருக்கிறது. மிகவும் குறைவான நேரத்தில், பரவலான வகையில் அனைவரும் இந்தத் திட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. ரக்ஷா பந்தன் நாளை ஒட்டி, நாம் நமது சகோதரிகளுக்கு இந்த பாதுகாப்புத் திட்டங்களின் நன்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சிறியதொரு விண்ணப்பம் விடுத்திருந்தேன். திட்டம் தொடங்கப்பட்டு சில காலத்திலேயே சுமார் 11 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயனாளிகளில் பாதி பங்குப் பேர்கள் தாய்மார்கள், சகோதரிகள் என்ற வகையில் இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இதை நான் ஒரு நல்ல அறிகுறியாக கருதுகிறேன். அனைத்துத் தாய்மார்கள், சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் புனித நன்னாளில் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுமார் ஓராண்டு முன்பாக, ஜன் தன் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தத் தொடங்கினோம். 60 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட முடியாத ஒரு திட்டம் இத்தனை குறைவான காலத்திற்குள்ளாக செயல்படுத்த முடியுமா, என பல கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தொடர்பு கொண்ட அனைத்துத் துறைகளும், வங்கிகளின் அனைத்துக் கிளைகளும், முழு சக்தியோடும், மனதோடும் இதில் ஈடுபட்டன என்பது சந்தோஷம் அளிக்கும் விஷயம். இதில் வெற்றி அடைந்திருக்கிறோம், இது வரை எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் சுமார் 17.75 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் விஷயத்தில், ஏழைகளின் தாராளத் தன்மையை நான் பார்த்தேன். பூஜ்யம் இருப்புக் கணக்கைக் கூடத் துவக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்த போதும் கூட, அதில் 22000 கோடி ரூபாய்களை அவர்கள் சேமித்திருக்கிறார்கள். பொருளாதாரத்தின் முக்கிய ஊற்றுக்கண்களில் ஒன்றாக வங்கித் துறையும் விளங்குகிறது. இந்த அமைப்பு ஏழைகளின் இல்லங்களையும் சென்று அடைந்திருக்கிறது. அந்த வகையில் வங்கிகளின் தோழன் திட்டத்துக்கு பெரும் ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று 1.25 லட்சம் வங்கித் தோழர்கள் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். இதன் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த இந்த ஓராண்டுக்காலத்தில் வங்கித் துறை, பொருளாதாரம், ஏழைகள் ஆகியோரை இணைக்க ஒரு லட்சத்து முப்பத்தோராயிரம் நிதிசார் கல்வி அளித்தல் தொடர்பான முகாம்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏதோ வங்கிக் கணக்குகளைத் தொடங்கி விட்டு சும்மா இருப்பதோடு இந்த செயல்பாடு நின்று போகக் கூடாது. இப்போது பல்லாயிரம் பேர்கள் இந்த ஜன் தன் திட்டம் காரணமாக overdraft எடுக்கும் அதிகாரம் உடையவர்களாக ஆகி இருக்கிறார்கள், எடுத்தும் இருக்கிறார்கள். ஏழைகளுக்கும் வங்கிக் கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மீண்டும் ஒரு முறை நான் இதோடு தொடர்புடைய அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன். வங்கிகளோடு உங்களுக்கு இருக்கும் தொடர்பினை எக்காலத்திலும் துண்டித்துக் கொள்ள வேண்டாம் என்று ஏழைகள் அனைவரிடத்திலும் நான் விண்ணப்பிக்கிறேன். வங்கிகள் உங்களுடையவை, நீங்களை எந்த வகையிலும் இதிலிருந்து விலக வேண்டாம். வங்கிகளை உங்கள் இல்லங்களின் வாயிற்படிகளுக்கு நாங்கள் கொண்டு சேர்த்திருக்கிறோம், இதை விட்டு விடாதீர்கள், கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நம் அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் பணப் புழக்கம் இருக்க வேண்டும். நீங்கள் இதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் என்று எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

கடந்த சில நாட்கள் முன்பாக, குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களும், வன்முறை வெறியாட்டமும் ஒட்டு மொத்த நாட்டையும் அமைதி இழக்கச் செய்தன, இது இயல்பான ஒரு உணர்வு தான். காந்தி, சர்தார் ஆகியோர் பிறந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு கோர சம்பவம் நிகழ்ந்திருப்பது, நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது, வலிக்கிறது. ஆனால் மிகவும் குறைவான காலத்துக்கு உள்ளாக, குஜராத்தின் விவரம் அறிந்தோர், என் குஜராத்தின் அனைத்துக் குடிமக்கள், சகோதர சகோதரிகள் ஆகியோர் இந்த அவல நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள், நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க ஆக்கபூர்வமான வழிமுறைகளை மேற்கொண்டார்கள். மீண்டும் ஒரு முறை அமைதிப் பாதையில் குஜராத் பயணிக்கத் தொடங்கி விட்டது. அமைதி, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் – இந்தப் பாதை தான் சரியானது; முன்னேற்றப் பாதையில், அனைவரும் தோளோடு தோள் நின்று நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். முன்னேற்றம் மட்டுமே நமது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைய முடியும்.

கடந்த நாட்களில், சூஃபி பாரம்பர்யத்தைச் சேர்ந்த சான்றோர்கள் சிலரை சந்திக்கக் கூடிய நல்வாய்ப்புக் கிட்டியது. அவர்கள் நல்லுரைகளைக் கேட்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்களின் பொன்மொழிகளைக் கேட்ட போது, ஏதோ ஒரு மதுரமான இசையைக் கேட்பது போலிருந்தது. அவர்கள் கூறிய சொற்களின் பொருள், உரையாற்றும் முறை ஆகியன என மனத்தைக் கொள்ளை கொண்டன. சூஃபி பாரம்பரியத்தில் இருக்கும் விசாலமான நோக்கு, இனிமை, இசையின் லயம் இவை அனைத்தின் அனுபவம் ஆகியன இந்த சான்றோர்களின் மத்தியில் இருக்கும் போது நான் உணர்ந்தேன். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இஸ்லாத்தை சரியான முறையில், சரியான கண்ணோட்டத்தில் உலக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியாமான ஒன்றாக இருக்கிறது. அன்பு, தாராளத் தன்மை ஆகியவை நிறைந்த சூஃபி பாரம்பர்யம், இந்த செய்தியை அனைத்து மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சேர்க்கும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. இது மனித சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும், இஸ்லாத்துக்கும் நலன்கள் சேர்க்கும். நாம் வேறு வேறு வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம், ஆனாலும் கூட சூஃபி பாரம்பரியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

இனி வரும் காலத்தில் எனக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் உலகின் பல நாடுகளில் இருக்கும் பௌத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த சான்றோர்கள் புத்த கயாவுக்கு வருகை தர இருக்கிறார்கள். மனித சமுதாயத்தோடு தொடர்புடைய உலகம் தழுவிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். என்னையும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்கள். புத்த கயாவுக்கு வருமாறு என்னை அழைத்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நெஹ்ரு அவர்கள் புத்த கயா சென்றிருக்கிறார். உலகம் முழுவதிலிமிருந்தும் பௌத்த மத சான்றோர்கள் பங்கெடுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

எனது பிரியமான விவசாய சகோதர சகோதரிகளே, மீண்டும் ஒரு முறை நான் உங்களோடு என் மனதின் குரலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் முன்னரே கூட என் மனதின் குரலை இந்த விஷயம் தொடர்பாக உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மனதின் குரலாகட்டும், பொது மேடைகளாகட்டும், நாடாளுமன்றமாகட்டும் எனது கருத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். நிலம் கையகப்படுத்தும் சட்டம் தொடர்பாக நடைபெறும் விவாதங்களில், அரசு திறந்த மனதோடு இருக்கிறது. விவசாயிகள் நலன் தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையையும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன், இதை நான் பல முறைகள் கூறியும் வந்திருக்கிறேன். கிராமங்களுக்கும், விவசாய சகோதர சகோதரிக்குக்கும் நன்மை சென்று சேர வேண்டுமென்றால், வயல்வெளிகளுக்கு நீரைக் கொண்டு சேர்க்க கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டுமென்றால், கிராமங்களில் மின்சாரம் கொண்டு சேர்க்க மின் கம்பங்களை நட வேண்டுமென்றால், கிராமங்களில் சாலைகள் அமைக்கப் பட வேண்டுமென்றால், கிராமங்களில் வாழ் ஏழைகளுக்கு குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றால், கிராமங்களைச் சேர்ந்த ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டுமென்றால், நாம் நிர்வாகச் சிக்கல்கள், தாமதங்களிலிருந்து சட்டத்தை மீட்டெடுத்தாக வேண்டும். இவற்றின் அடிப்படையிலேயே அனைத்து ஆலோசனைகளும் எங்களுக்கு மாநிலங்களிலிருந்து வந்திருக்கின்றன, கோரிக்கைகளாக முன் வைக்கப் பட்டிருக்கின்றன என்பதை நான் என் விவசாய சகோதர சகோதரிகளுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஏகப்பட்ட தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டிருக்கின்றன., விவசாயிகள் மனதில் பீதி கிளப்பப்பட்டிருக்கிறது.

எனது விவசாய சகோதர சகோதரிகளே, எனதருமை விவசாயிகள் மருள வேண்டாம், கண்டிப்பாக பீதியடைய வேண்டாம். உங்களை மருளச் செய்யும் வகையில், உங்களுக்கு பீதி ஏற்படுத்தும் விதத்தில் யாரும் உங்களைத் தவறான பாதையில் வழிநடத்த முயன்றால், அதற்கு இடமளிக்கும் வகையில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் பொறுத்த வரையில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்துக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. ஆனால், விவசாயிகளின் கருத்துக்களுக்கும் குரல்களுக்கும் தனிச்சிறப்பு மிக்க மகத்துவம் இருக்கிறது. நாங்கள் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தோம். நாளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடன் இந்த அவசர சட்டத்தின் கால வரையறை முடிவடைகிறது. இதை காலாவதியாக விட்டு விடலாம் என்று நாங்கள் முடிவாக தீர்மானித்திருக்கிறோம். இதனால் என்ன ஆகும்? நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இருந்த அதே நிலைமை இப்போதும் தொடரப் போகிறது. நிறைவேற்றப்படாத அதில் 13 விஷயங்கள் ஓராண்டிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால், நாங்கள் அவசரச் சட்டம் இயற்றினோம்; ஆனால் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டதன் காரணமாக, அது நிறைவேற முடியாமல் சிக்கிக் கொண்டது. அவசரச் சட்டம் காலாவதியாக இருக்கிறது; ஆனால் விவசாயப் பெருமக்களுக்கு நேரடிப் பயன், நேரடி பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய அந்த 13 கூறுகளை நாங்கள் விதிமுறைகளாக வடிவமைத்து இன்றே அதை அமல் படுத்த இருக்கிறோம். இதன் மூலமாக விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக நஷ்டம் ஏற்படாமல் உறுதி செய்யப்படும். எங்களைப் பொறுத்த மட்டில் ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்ற சொற்கள் வெறும் கோஷச் சொற்கள் அல்ல, இது ஒரு மந்திரம் என்பதை நான் என் விவசாய சகோதர சகோதரிகளுக்கு உறுதியாகத் தெரிவிக்கிறேன். கிராமங்களில் வாழ் ஏழை விவசாயிகளின் நலன்கள் தாம் எங்கள் மனங்களில் இருக்கின்றன. ஆகையால் தான் வெறும் விவசாயத் துறை என்று இல்லாமல், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் துறை என்ற கருத்தில் அமைச்சகம் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி நான் என் சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தேன். இந்த தீர்மானத்தை நாங்கள் விரைவாக முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எனது விவசாய சகோதர சகோதரிகளே, நீங்கள் மருட்சி அடைய வேண்டாம்; மற்றவர்கள் உங்களை பீதியடையச் செய்ய முயற்சி செய்தால், அதில் சிக்கி, நீங்கள் பீதியடையவும் வேண்டாம்.

நான் மேலும் ஒரு விஷயம் பற்றிப் பேச விரும்புகிறேன். 2 நாட்கள் முன்னதாக, 1965ம் ஆண்டுப் போர் முடிவடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. 1965ம் ஆண்டுப் போர் பற்றி நாம் பேசும் போதெல்லாம், லால் பஹாதுர் சாஸ்த்ரி அவர்களைப் பற்றி நினைவு கூர்வது என்பது இயல்பான ஒரு விஷயம். அதே போல ஜெய் ஜவான், ஜெய் கிஸான் என்ற மந்திரச் சொற்களும் நம் நினைவுக்கும் வரும். இந்தியாவின் மூவண்ணக் கொடியின் கௌரவத்தைப் பாதுகாக்கத் தங்கள் இன்னுயிரை பலி கொடுத்த தியாகிகள் பற்றிய நினைவலைகளும் நம் மனங்களில் உதிக்கும். 1965ம் ஆண்டுப் போர் வெற்றிக்குப் பங்களித்த அனைவருக்கும் நான் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வீரர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். இது போன்ற வரலாற்று நிகழ்வுகளிலிருந்து நமக்கு கருத்தூக்கம் தொடர்ந்து கிடைத்து வர வேண்டும்.

எப்படி கடந்த நாட்களில் சூஃபி பாரம்பர்யத்தைச் சேர்ந்தவர்களை சந்திக்கும் பேறு கிட்டியதோ, நாட்டின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளோடு பல மணித் துணிகள் கழித்த போதும் ஒரு இனிமையான அனுபவம் ஏற்பட்டது. அவர்கள் கூறுவதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அறிவியல் துறையில் இந்தியா பல வகைகளில் உன்னதமான வளர்ச்சி கண்டு வருகிறது. நமது விஞ்ஞானிகள் உண்மையிலேயே சிறப்பான முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்புக்களை எப்படி வெகு ஜனங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திசையில் நாம் முயற்சிகள் மேற்கொண்டாக வேண்டும். அறிவியல் கோட்பாடுகளுக்கு எப்படி செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும், பரிசோதனைக் கூடங்களின் கண்டுபிடிப்புக்களைக் களத்தில் எவ்வாறு அமல் படுத்த வேண்டும் என்பதை நாம் ஒரு வாய்ப்பாக மாற்றி முன்னேற்றம் காண வேண்டும். பல புதிய தகவல்கள் எனக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. இது என்னைப் பொறுத்த மட்டில் கருத்தூக்கம் அளிப்பதாகவும், கல்வி அளிக்கக் கூடியதாகவும் அமைந்தது. பல இளைய விஞ்ஞானிகள் மிகவும் துடிப்போடு விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் கண்களில் நான் பல கனவுகளைக் கண்டேன். கடந்த மனதின் குரலில் கூட நான் நம் மாணவச் செல்வங்களை அறிவியலை நோக்கி வழிநடத்த வேண்டும் என்று கூறி இருந்தேன். இந்த சந்திப்புக்குப் பிறகு, அப்படி வழிநடத்த பல வாய்ப்புக்களும், சந்தர்ப்பங்களும் இருக்கின்றன என்பது தெளிவாகப் புலனாகியது. நான் மீண்டும் அதை உரைக்க விரும்புகிறேன். எனது அனைத்து மாணவ நண்பர்களும் அறிவியல் தொடர்பான நாட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது கல்வி அமைப்புக்களும் இந்த திசையில் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

குடிமக்களிடமிருந்து எனக்குப் பல கடிதங்கள் வந்திருக்கின்றன. டாணேயைச் சேர்ந்த பரிமல் ஷா அவர்கள் mygov.in இணைய தளத்தில் கல்வித் துறை சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு தொடர்பாக தன் கருத்துக்களை எழுதி இருக்கிறார். தமிழ்நாட்டின் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ப்ரகாஷ் த்ரிபாடி அவர்கள் முதன்மைக் கல்வி அளிப்பதில் நல்ல ஆசிரியர்களின் தேவை குறித்தும், கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் பற்றியும் எனக்கு எழுதியிருக்கிறார். கீழ்நிலைப் பணிகளில் நேர்முகத் தேர்வுக்கு என்ன அவசியம் இருக்கிறது என்பது குறித்து நான் என் சுதந்திர தின உரையின் போதே கூட பேசியிருந்தேன். நேர்முகத் தேர்வு அழைப்பு வரும் போது, ஒவ்வொரு ஏழைக் குடும்பமும், விதவைத் தாய்மார்களும் சிபாரிசு கடிதம் பெறுவது, வேலை கிடைக்க யாருடைய உதவியை நாடுவது, போன்றவை தொடர்பான விஷயங்களில் அலைய வேண்டியிருக்கிறது. அடிமட்டத்தில் ஊழல் நிலவுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குக் கீழ் நேர்முகத் தேர்வு என்பது இருக்க கூடாது என்று நான் கூறியிருந்தேன். அப்படி நான் கூறி 15 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், அரசு இந்த திசையில் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது, ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன, இந்த தீர்மானம் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டு விடும், அடிமட்ட நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு என்ற முறை களையப்பட்டு விடும் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இனி ஏழைகள் சிபாரிசு தேடி ஓட வேண்டாம், சுரண்டல் நீங்கும், ஊழல் அகலும்.

இன்றைய நாட்களில் இந்தியாவுக்கு பன்னாட்டு பிரமுகர்கள் வந்த வண்ணம் இருக்கின்றார்கள். தாய்-சேய் இறப்பு வீதம் குறைக்கப்படும் வகையில் call to action செயல்திட்டங்களை அமல் படுத்த உலகின் 24 நாடுகள் ஒருங்கிணைந்து இந்தியாவில் ஒரு மாநாடு நடத்தினார்கள். அமெரிக்காவுக்கு வெளியே முதன் முறையாக இந்த சிந்தனைக் கூட்டம் இந்தியாவில் தான் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சுமார் 50000 தாய்மார்களும், 13 லட்சம் சேய்களும் பிரசவத்தின் போதோ, அதற்குப் பின்னரோ இறக்க நேர்கிறது. இது கவலையளிப்பது, அச்சம் தருவது. இந்த நிலையில் மேம்பாடு என்னவோ காணப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியா பாராட்டுக்களும் பெற்று வருகிறது. இருந்தாலும் கூட, இந்தப் புள்ளிவிபரம் ஆறுதல் அளிக்கக் கூடியதாக இல்லை. எப்படி நாம் போலியோவிலிருந்து விடுதலை பெற்றோமோ, அதே போல தாய்-சேய் இறப்புக்களுக்கு ஒரு காரணமான டெடனஸிலிருந்தும் விடுதலை அடைந்திருக்கிறோம். இதை உலகம் ஏற்றுக் கொண்டும் இருக்கிறது. ஆனால் இன்றும் கூட நாம் நமது தாய்மார்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும், நமது பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும்.

சகோதர சகோதரிகளே, இன்றைய வேளையில், டெங்குகாய்ச்சல் பரவிக் காணப்படுகிறது. டெங்கு காய்ச்சல் அபாயகரமானது என்பது உண்மை தான். ஆனால், இதிலிருந்து தப்புவது என்பது மிகவும் எளிய ஒன்று. தூய்மையான இந்தியா பற்றிய எனது வேண்டுகோள் இதனோடு தொடர்புடையது தான். தொலைக்காட்சிகளில் நாம் விளம்பரங்களைப் பார்த்தாலும் கூட, நமது கவனம் அவற்றின் மீது செல்வதில்லை. செய்தித் தாள்களில் விளம்பரங்கள் அளிக்கப்பட்டாலும், நம் சிந்தை அவற்றில் செலுத்தப்படுவதில்லை. வீடுகளில் சின்னச் சின்ன விஷயங்களிலும் தூய்மை, சுத்தமான குடிநீரைப் பாதுகாப்பதன் வழிமுறைகள் ஆகிய விஷயங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது; இருந்தாலும் கூட அதில் நாம் அக்கறை காட்டுவதில்லை. நாம் நல்ல வீடுகளில் வசிக்கிறோம், அதில் பல வசதிகள் இருக்கின்றன, ஆனால் சில வேளைகளில் நம்மைச் சுற்றியே நீர் தேங்கி இருப்பது பற்றி நமக்குத் தெரிவதில்லை. இது டெங்கு காய்ச்சலுக்கு விடுக்கப்படும் அழைப்பு போன்றது. மரணத்துக்கு இத்தனை எளிய முறையில் பட்டுக் கம்பளம் விரிக்கக் கூடாது என்று நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். வாழ்கை என்பது மிகவும் மதிப்பு நிறைந்த ஒன்று. நீர் தேக்கம் பற்றிய கவனக் குறைவு, தூய்மை புறக்கணிப்பு இவை தான் மரணத்துக்கு விடுக்கப்படும் அழைப்புக்கள், இது சரியல்ல. நாடு முழுவதிலும் சுமார் 514 டெங்கு காய்ச்சல் கண்டறியும் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன, இங்கே இலவச பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலத்தில் பரிசோதனை செய்து, சிகிச்சை பெறுவது தான் உயிர் காத்தலுக்கு உகந்த ஒன்று. இந்த விஷயத்தில் உங்களின் மேலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது. தூய்மை மீது அதிக கவனம் செலுத்த வேண்டுவது மிகவும் முக்கியமானது. ரக்ஷா பந்தன் தொடங்கி தீபாவளி வரை நம் நாட்டில் இனி வரும் காலங்களில் கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் நிரம்பி இருக்கும். ஏன் நாம் நமது அனைத்துப் பண்டிகைகளையும் தூய்மையோடு இணைக்கக் கூடாது? நல்ல பதிவுகள் பழக்கமாகவே ஆகி விடும், இல்லையா?

எனது பிரியமான நாட்டு மக்களே, நான் உங்களிடம் ஒரு சந்தோஷமான தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நாட்டுக்காக உயிர் துறக்கும் பேறு என்பது என்னவோ கிடைக்காது; ஆனால், நாட்டுக்காக உயிர் வாழக் கூடிய பேறு என்னவோ கிடைத்திருக்கிறது, நம் நாட்டின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாசிக் பகுதியைச் சேர்ந்த 2 சகோதரர்கள், இளைஞர்கள், டா. ஹிதேந்த்ர மஹாஜன், டா. மஹேந்த்ர மஹாஜன் ஆகியோரின் மனங்களில் நம் நாட்டு பழங்குடி மக்களின் நலன்களே மேலோங்கி இருக்கிறது. இந்த இரண்டு சகோதரர்களும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். அமெரிக்காவில் race across America என்ற பெயரிலான, சுமார் 4800 கி.மீ. அளவிலான, கடினமான ஒரு சைக்கிள் பந்தயம் நடக்கும். இந்த ஆண்டு, இந்த இரண்டு சகோதரர்களும் இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள், இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த இரண்டு சகோதரர்களுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த ஒட்டு மொத்த முயற்சிகளிலும் team india, vision for tribals-பழங்குடி இனத்தவர்களின் நலனை மனதில் கொண்டு ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டை முன்னேற்ற எப்படி ஒவ்வொருவரும் தத்தம் பங்களிப்பை அளித்து வருகிறார்கள், பாருங்கள்! இது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்படும் போது, நெஞ்சம் பெருமிதத்தில் விம்முகிறது. சில நேரங்களில் நாம் கண்ணோட்டத்தின் காரணமாக நம் இளைய சமுதாயத்தினரிடத்தில் கொடுமையான அநீதிகளை இழைக்கிறோம். புதிய தலைமுறைக்கு எதுவுமே தெரியாது என்ற ஒரு கருத்து பழைய தலைமுறையினரிடம் நிலவுகிறது. இந்தப் போக்கு பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது என்றே நான் கருதுகிறேன். ஆனால் இளைய சமுதாயத்தினரிடம் என்னுடைய அனுபவம் மாறுபட்டது. சில வேளைகளில் இளைஞர்களிடம் பேசும் போது, நமக்கே கூட பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. Sunday on cycle-ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் சவாரி செய்வது என்று தீர்மானம் செய்து செயல்படுத்தும் பல இளைஞர்களை நான் சந்தித்து இருக்கிறேன். சில பேர்கள் வாரத்தில் ஒரு நாள் நான் சைக்கிளில் தான் பயணிப்பேன் என்று அதை cycle dayயாக கடைபிடித்து வருகிறார்கள். இதனால் என் உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை, சுற்றுச் சூழலுக்கும் நன்மை, இளமையினால் உண்டாகும் சந்தோஷமும் எனக்கு இதில் கிடைக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இப்போதெல்லாம் நம் நாட்டின் பல நகரங்களில் cycle clubகள் இயங்கி வருகின்றன. சைக்கிள் பயணத்துக்கு ஊக்கமளிக்கவும் பலர் இருக்கிறார்கள். இது உடல் நலத்துக்கும், சுற்றுச் சூழல் நலத்துக்கும் உகந்த நல்லதொரு முயற்சி. இந்தியாவின் இரண்டு இளைஞர்கள் புரிந்த சாதனை நாட்டுக்கு கௌரவத்தை ஏற்படுத்தி இருப்பதைப் போல, நாட்டின் இளைஞர்களின் கண்ணோட்டமும் குறிப்பிடத் தக்கதாக இருக்கிறது. சிறப்பாக, நான் மஹாராஷ்ட்ரா அரசுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

மும்பையின் இந்து மில்ஸ் நிலத்தில் பாபா சாஹேப் அம்பேட்கரின் நினைவுச் சின்னத்தை எழுப்புவது பல காலமாகவே இழுபறியில் இருந்து வந்திருக்கிறது. இந்தப் பணியை மஹாராஷ்ட்ராவின் புதிய அரசு நிறைவேற்றி இருக்கிறது. அந்த இடத்தில் பாபா சாஹேப் அம்பேட்கருக்கு என ஒரு சிறப்பான, அழகான, கருத்தூக்கம் அளிக்கும் நினைவுச் சின்னம் எழுப்பப்படும்; இது தாழ்த்தப்பட்ட, பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மக்களுக்காக பணிகளில் ஈடுபட செயலூக்கம் அளிக்கும். இது மட்டுமல்ல, லண்டன் மாநகரில், 10, கிங் ஹென்ரி ரோட்டில் பாபா சாஹேப் அம்பேட்கர் வசித்த வீடும் இப்போது விலைக்கு வாங்கப் பட்டு விட்டது. உலகம் சுற்றும் இந்தியர்கள் லண்டன் செல்லும் போது, அங்கே மஹாராஷ்ட்ர அரசு அமைக்க இருக்கும் பாபா சாஹேப் அம்பேட்கரின் நினைவுச் சின்னம் கருத்தூக்கம் அளிக்கும். பாபா சாஹேப் அம்பேட்கருக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைக்கப்படவிருக்கும் இந்த இரண்டு நினைவுச் சின்னங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மஹாராஷ்ட்ர மாநில அரசுக்கு என் மனப் பூர்வமான பிரார்த்தனைகளையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்கிறேன்.

எனது பிரியமான சகோதர சகோதரிகளே, அடுத்த மனதின் குரல் ஒலிக்கும் முன்பாக, நீங்கள் உங்கள் கருத்துக்களை எனக்குக் கண்டிப்பாகத் தெரிவியுங்கள். ஜனநாயகம் என்பது மக்களின் பங்களிப்பைக் கொண்டே இயங்கும், அனைவரும் தோளோடு தோள் இணைந்து பணியாற்றும் போது தான் நாடு வளர்ச்சி காணும் என்பதில் எனக்கு விடாப்பிடியான நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு என்னுடைய நிறைவான நல்வாழ்த்துக்கள், மிக்க நன்றி.