Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சிலின் 40வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமரின் சிறப்புரை

அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சிலின் 40வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் பிரதமரின் சிறப்புரை


சகோதர, சகோதரிகளே!

மிகுந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரளான அரசியல், வர்த்தகத் துறைகளின் தலைவர்களிடையே மீண்டும் பங்கேற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இன்று காலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களை சந்தித்தபோது, நம் இரு நாடுகள் தொடர்பான பல விஷயங்கள் குறித்த எங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அமெரிக்காவுடனான இந்தியாவின் இருதரப்பு உறவு என்பது முன்னெப்போதையும் விட வலுவானதாக உள்ளது என்பதோடு எதிர்காலத்தில் அது மேலும் பிரகாசமானதாக இருக்கும் என்பதை நாங்கள் இருவருமே ஒப்புக் கொண்டோம்.

உலகப்பொருளாதாரமானது தொடர்ந்து பலவீனமாக இருக்கும் தருணத்தில்தான் நான் உங்களோடு உரையாற்றிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் பல பகுதிகளும் மிகவும் சிக்கலான நிலைமைகளை சந்தித்து வருகின்றன. இத்தகையதொரு தருணத்தில்தான் வளர்ச்சிக்கு வேகம் தரும் புதிய உந்துசக்திகள் உலகத்திற்குத் தேவைப்படுகின்றன. உலகத்தின் மிகப் பழமையான ஜனநாயக நாட்டின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது இத்தகைய புதிய உந்துசக்திகள் ஜனநாயகத் தன்மை கொண்டவையாக இருப்பது நல்லது. உலகளாவிய வளர்ச்சிக்கான புதியதொரு உந்துசக்தியாக தனது பங்களிப்பைச் செலுத்த இந்தியா தயாராக இருக்கிறது என்பதை இன்று உங்கள் மத்தியில் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மிகப்பெரிய இந்தியப் பொருளாதாரம் என்பது உலகத்திற்குப் பலவிதமான நன்மைகளைச் செய்வதாக இருக்கும். மிகப் பெரிய, வளர்ந்து கொண்டே போகும் சந்தையைக் கொண்டதாக இந்தியா இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் இந்தியா என்பது இத்தகைய சந்தையை விட மிகப் பெரியது. இந்தியா என்பது

• நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக
• உயர்தரமான அறிவியல், பொறியியல், நிர்வாகத் திறன்களுக்கான ஆதாரமாக
• கருத்துக்களையும் சோதனைகளையும் மேற்கொள்வதற்கான உலைக்களமாக
• மிகச் சிறப்பான, உயர்தரமான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆதாரமாக
• ஜனநாயகமும் துரிதமான வளர்ச்சியும் இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது.

வளர்ச்சிக்கான புதுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில், அமெரிக்காவின் நிறுவனத்திறன், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் பாரம்பரியமான திறமைகளிலிருந்து அது நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் எப்போதுமே முன்னணியில் உள்ள அமெரிக்காவானது

• வான்வழிக் கட்டுப்பாட்டிலிருந்து காற்றின் தூய்மைத் தன்மையை மேம்படுத்துவது வரை
• மருந்துகளிலிருந்து தொலைதூர ஏவுகணை வரை
• உயர்தர சீருந்துகளிலிருந்து நீரைப் பயன்படுத்தி கடலின் அடியாழத்திலிருந்து கச்சா எண்ணெய் போன்ற கரிமங்களை வெளிக்கொண்டுவருவது வரை

புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நாடாக விளங்குகிறது.

என்னைப் பொறுத்தவரையில் அமெரிக்கா பாரம்பரிய வரலாறு கொண்ட நாடு மட்டுமல்ல; உற்சாகம் தரும் எதிர்காலம் கொண்ட நாடும் ஆகும். எனவே நமது கூட்டுச் செயல்பாடு என்பது இரு நாடுகளுக்கும் பயன் தருவதாக இருக்கும் என்று நான் உறுதியாகவே நம்புகிறேன்.

இந்திய-அமெரிக்க உறவின் தனிச்சிறப்பான அம்சம் என்பது அமெரிக்க நாட்டின் பொருளாதாரத்தில் இந்திய-அமெரிக்கர்கள் வகிக்கும் மிக முக்கிய பங்காகும். ஒரு நாட்டிலிருந்து வெளியேறி, மற்றொரு நாட்டில் குடியேறிய ஒரு பிரிவினர் இந்த இருநாடுகளிலுமே உயர்ந்த மதிப்பையும் பெருமையையும் பெறுவதென்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். நம் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துகொண்டே வரும் பொருளாதார, கலாச்சார உறவுகளை இணைத்து உறுதிப்படுத்தும் வலுவான இணைப்பு சக்தியாக இந்திய-அமெரிக்கர்கள் விளங்குகிறார்கள்.

எனது அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்று இரண்டாண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 2014இல் உங்களிடையே நான் பேசிய தருணத்தில் அப்போதுதான் நாங்கள் பதவியில் வந்து அமர்ந்திருந்தோம். குறிப்பாக உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான சவால்களை நாங்கள் எதிர்நோக்கியிருந்த நேரம் அது. அப்போது முதலீட்டாளர்களின் நம்பிக்கை என்பது மிகக் குறைவாக இருந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தது. நாட்டின் நிலவிய செயலற்ற தன்மை, தேக்கநிலை ஆகியவை குறித்து வர்த்தகம் செய்வோர் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்த நேரம் அது. புராதனமான கொள்கைகள், மெதுவாக நகரும் அரசு இயந்திரம் ஆகியவை குறித்து அதிருப்தி நிலவியது. இந்த இரண்டாண்டுகளில் இத்தகைய தடைகளை வெற்றி கண்டதோடு கவனிக்கத்தக்க வகையில் பொருளாதாரச் செயல்பாட்டையும் எங்களால் நிறைவேற்ற முடிந்தது.

எங்களது கொள்கைகளின் முக்கியமான அம்சங்கள் பற்றி விளக்குவதற்கு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சீர்திருத்தங்களின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வருவதே எனது நோக்கம் என்று பல்வேறு தருணங்களில் நான் கூறியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கின்ற ஒன்றாகவே இந்த சீர்திருத்தங்கள் அமைகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மேலாக முழுமையான சீர்திருத்தங்கள் நிரம்பிய தொகுப்பை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். என்னால் அவற்றை நான்கு வகையாகப் பிரிக்க முடியும்.

முதலாவதாக, வலுவானதொரு அடித்தளத்தை உருவாக்கும்படியான நாடுதழுவிய அளவிலான பொருளாதாரக் கொள்கைகள்;

இரண்டாவதாக, முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கின்ற, திறமையையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கின்ற கொள்கைகள்;

மூன்றாவதாக, பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் நலிந்த பிரிவினர், ஏழைகள் ஆகியோரின் வளர்ச்சிக்கான பயன்களை உறுதிசெய்யும்படியான கொள்கைகள்;

நான்காவதாக, ஊழலுக்கு எதிரான நேரடியான தாக்குதல்.

நாடு தழுவிய பொருளாதார விஷயத்துடன் துவங்குகிறேன்.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, பணவீக்கம், நிதிப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணியில் நடப்புக் கணக்கிற்கான பற்றாக்குறை ஆகிய அனைத்துமே குறைந்துள்ளன. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு, பங்குச் சந்தை குறித்த மதிப்பீடுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவை அதிகரித்துள்ளன. நன்கு தீர்மானிக்கப்பட்ட தொடர்ச்சியான கொள்கைகளின் விளைவாகவே இந்த வெற்றியை அடைய முடிந்தது. பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட வகையில் நாணயமுறையிலான கட்டமைப்பிற்கான சட்டங்களை இயற்றியதோடு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கென சுயேச்சையான நாணயக் கொள்கைக்கான குழுவையும் நாங்கள் உருவாக்கினோம். நிதி நிலையை வலுப்படுத்துவதற்கான பாதையில் இறங்கியதன் விளைவாக இதுவரை எங்கள் அரசால் முன்வைக்கப்பட்ட மூன்று பட்ஜெட்டுகள் ஒவ்வொன்றிலுமே நிதிப் பற்றாக்குறையானது கணிசமான அளவிற்கு குறைந்தது. நிதிப்பற்றாக்குறையை வெட்டிக் குறைத்த அதே நேரத்தில் உற்பத்தியை நோக்கமாகக் கொண்ட அரசு முதலீட்டை பெருமளவிற்கு நாங்கள் அதிகரித்தோம்.

இரண்டு வழிகளில் இதை எங்களால் நிறைவேற்ற முடிந்தது. முதலாவதாக, நிலத்தடியிலிருந்து வெளிக்கொண்டுவரப்படும் எரிபொருளின் மீது கரிம வரியை நாங்கள் விதித்தோம். டீசல் விலைகளுக்கான கட்டுப்பாட்டை அகற்றுவது என்ற துணிவான நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் எரிபொருளுக்கான மானியம் வழங்குவதை முற்றிலுமாக நீக்கினோம். தூய்மையான சுற்றுச்சூழலுக்கான வரியை ஒரு டன்னுக்கு ரூ 50 என்பதிலிருந்து ரூ. 400 ஆக எட்டு மடங்கு அதிகரிக்கப்பட்டது. உலக அளவில் கரிம பயன்பாட்டிற்கான வரி விதிப்பது என்பது பற்றி பரவலாகவே பேசப்பட்டு வந்தது; எனினும் அது வெறும் பேச்சளவிலேயே இருந்தபோது நாங்கள் உண்மையில் செயலில் இறங்கினோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், புதிய புதிய முறைகளின் மூலம் வீணான செலவுகளைக் குறைத்தோம். தவறுகள் எதுவும் நிகழாத வகையில் உடற்கூற்றை அடிப்படையாகக் கொண்ட அடையாள முறையினைப் பயன்படுத்தி இதனால் பயன்பெறுவோரின் வங்கிக் கணக்குகளில் இந்த மானியங்கள் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன.

இப்போது வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கின்ற கொள்கைகள் பற்றிக் கூற விரும்புகிறேன். இங்கு குழுமியிருப்பவர்களில் பெரும்பாலோருக்கு நேரடி அந்நிய முதலீட்டினை ஊக்குவிக்க நாங்கள் மேற்கொண்ட பரவலான தாராளமய நடவடிக்கைகள் பற்றி தெரிந்திருக்கும். பெரும்பாலான துறைகளை உடனடியான ஒப்புதல்கள் வழங்குவதற்கு உகந்த வகையில் மாற்றி அமைத்துள்ளதோடு, பாதுகாப்பு, ரயில்வே ஆகிய துறைகளும் அந்நிய நேரடி முதலீட்டிற்குத் திறந்து விடப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த காப்பீட்டுச் சீர்திருத்த சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்டு காப்பீட்டு நிறுவனங்கள் பலவும் இந்திய காப்பீட்டுத் துறையில் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளன. வர்த்தகம் செய்வதற்கான வசதிகளை செய்து தருவதை அதிகரிக்க முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு, உலகளாவிய தரநிலையில் இந்தியா ஏற்கனவே வேகமாக உயரத் துவங்கியுள்ளது. உயர்தரமான, சிறப்பான உற்பத்தி நிறுவனங்களை நிறுவ உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாங்கள் ஊக்கமளித்து வருகிறோம். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் போன்றவற்றில் முதலீடுகளை பெருமளவிற்கு அதிகரித்துள்ளோம். சரக்குக் கப்பல்கள் துறைமுகங்களில் நுழைந்து வெளியேறும் நேரத்தை குறைக்கும் வகையில் செயல்பாடுகளில் பெரும் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். உங்கள் நாட்டில் நிலவும் புதிய தொழில்களை துவங்குவதற்கான சூழ்நிலையை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். எங்கள் நாட்டிலும் அத்தகைய நிலையை உருவாக்குவதற்கான வேலையைத் துவங்கியுள்ளோம். இந்தியாவில் தொழில் துவங்கு என்ற எங்களது திட்டமானது புதிய முன்முயற்சியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 2016ஆம் ஆண்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையங்களில் மிகவும் விரும்பப்படுகின்ற ஐந்தாவது இடமாக பெங்களூரு நகரம் உருவெடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டில் அந்த நகரம் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நமது பொருளாதாரம் வெற்றி பெற வேண்டுமெனில், வலுவானதொரு வங்கி அமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் நியமனங்கள், அவற்றின் செயல்பாட்டு முடிவுகளில் வேண்டியவர்களுக்கு உதவுவது, ஊழல் போன்றவை மலிந்த ஓர் அமைப்பையே நாங்கள் பெற்றிருந்தோம். வங்கித் துறையில் செயல்படுவோருடன் முதன் முதலாக சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்திய ஒரே பிரதமர் என்ற பெருமையும் எனக்குண்டு. தெளிவான செயல்பாட்டிற்கான அளவீடுகள், பொறுப்பிற்கான வழிவகைகள் ஆகியவற்றையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். வங்கிகளுக்கு போதுமான மூலதனத்தை உறுதிப்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். வங்கிச் செயல்பாடுகளில் தலையீடு என்பதற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. வங்கிகளின் இயக்குநர்கள் மையத்தின் கீழ் நியமனங்களை செய்வதற்கான புதியதொரு நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. நம்பிக்கையான, திறமையான வங்கி செயல்பாட்டாளர்கள் வங்கிகளுக்குத் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். 47 ஆண்டுகளுக்கு முன்னால் வங்கிகள் நாட்டுடமை ஆக்கப்பட்ட பிறகு முதன் முறையாக முக்கிய பொறுப்புகளில் தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வளர்ச்சியானது மக்களையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதிப்படுத்தும்படியான எங்களது கொள்கைகளைப் பற்றி இப்போது குறிப்பிட விரும்புகிறேன். ஜன் தன் திட்டத்தின் மூலம் இதுவரை வங்கிச் சேவை எதையும் பெற இயலாத நிலையில் இருந்த 20 கோடி பேரை இந்த வங்கி அமைப்பிற்குள் கொண்டு வந்துள்ளோம். உலகின் பெரும்பாலான நாடுகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும். இப்போது இந்த லட்சக்கணக்கானவர்கள் வங்கி அமைப்பின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர் என்பதோடு, ‘வட்டி விகிதம்’ போன்ற வார்த்தைகள் அவர்களுக்குப் பொருள் புரிவதாக மாறியுள்ளன. கோபுரத்தின் அடித்தளத்தில்தான் மகத்தான வலிமை அடங்கியுள்ளது என்பதை இந்த மக்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். உங்களால் நம்ப முடிகிறதோ, இல்லையோ, ஜன் தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இன்று திரண்டிருக்கும் தொகை கிட்டத்தட்ட ரூ. 6000 கோடியாகும்.

இந்த ஜன் தன் திட்டத்தின் மூலம் மின்னணு முறையில் பணத்தை செலுத்தவும், பெறவும் திறனுள்ளவர்களாக இந்த ஏழை மக்களை மாற்ற முடிந்துள்ளது. ஜன் தன் திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கினை துவக்கியுள்ள ஒவ்வொருவரும் ‘டெபிட் கார்ட்’ பெறத் தகுதியானவர்கள். இந்தியாவிலுள்ள வங்கிகளும் தபால் நிலையங்களும் ‘நடமாடும் ஏ.டி.எம்.’ முறையை செயல்படுத்த ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. கைக்கருவியின் மூலம் வங்கி தொடர்பான எளிய சேவைகளைப் பெறவும், நடமாடும் ஏ.டி.எம். மூலம் ரொக்கப் பணம் பெறவும் முடியும்.

புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் ஒரு பாதுகாப்பு வளையத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். மானியம் ஏதும் இல்லாத மிகக் குறைவான செலவிலான விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம் ஆகியவற்றுக்கென மூன்று காப்பீட்டுத் திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். பிரம்மாண்டமான வகையில் இவை செயல்படும் என்பதால் இதற்கான பிரிமியத் தொகை என்பது மிக மிகக் குறைவாக உள்ளது. சுமார் 12 கோடி பேர் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

பாலின அடிப்படையிலான நீதி மற்றும் பெண்களை தன்வலிமையுள்ளவர்களாக மாற்றுவது ஆகியவற்றுக்கு சிறப்பான கவனம் செலுத்தியுள்ளோம். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில் அதிக வட்டி விகிதம் தரும் புதிய சேமிப்புத் திட்டம் ஒன்றை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். கிராமப்புறங்களில் விறகின் மூலம் சமையல் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல ஆபத்துகளிலிருந்து கிராமப்புறப் பெண்களை பாதுகாக்க கிராமப்புற ஏழைகளுக்கென 5 கோடி புதிய எரிவாயு இணைப்புகள் வழங்கத் துவங்கியுள்ளோம். எமது சுய வேலைவாய்ப்பிற்கான நிதியுதவிக்கான முத்ரா திட்டத்தில் பயன்பெறுவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். பெண்கள் தலைமையில் 2 கோடியே 70 லட்சம் புதிய தொழில்கள் துவங்க உதவி செய்யப்பட்டுள்ளது. ராணுவப் படைகளில் போரிடும் கடமைகளில் பெண்களையும் அனுமதிக்கும் வகையில் கொள்கைகளை மாற்றி அமைத்திருக்கிறோம். வர்த்தக நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் பெண்களுக்கு பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைக்கான ஆதாரம் என்ற வகையில் இந்தியாவின் முக்கிய தொழிலாக இன்றும் விவசாயமே இருந்து வருகிறது. வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்வதற்கென மானிய வகையிலான உரத்தை இடமாற்றம் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதை தடை செய்யும் போக்கு இருந்து வந்தது. இந்த உரங்களுக்கு வேப்பிலை மேற்பூச்சு பூசுவது என்ற மிக எளிதான, எனினும் மிகச் சிறப்பான தீர்வின் மூலம் இத்தகைய இடமாற்றத்தால் எவ்வித பயனும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. யூரியாவிற்கு முற்றிலுமாக வேப்பிலை பூச்சு வழங்குவது என்ற நிலைக்கு இப்போது நாங்கள் நகர்ந்துள்ளோம். இதன் மூலம் விவசாயிகளுக்கான மானியத்தில் கோடிக் கணக்கான ரூபாயை சேமிக்க முடிந்துள்ளதோடு, விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதும் மேம்பட்டுள்ளது. மிக எளிமையான சீர்திருத்தமும் கூட எவ்வளவு சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு இது மிகச்சிறந்ததொரு உதாரணமாகும்.

விவசாயிகளுக்கு தங்களது நிலத்தின் மண்வளத்தை நாடுமுழுவதிலும் நிலத்தடி மண்வளத்தை தெரிவிப்பதற்கான அட்டைகளை நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் தங்களது நிலத்திற்கான மிகச் சிறந்த பயிர், அதற்கான இடுபொருட்களின் சரியான அளவு, கலவை ஆகியவை குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய ஏற்பாடானது இடுபொருட்களின் சேதாரத்தை பெருமளவிற்குக் குறைப்பதோடு, மண்வளத்தைப் பாதுகாத்து, பயிர் விளைச்சல் அளவையும் அதிகரிக்கும். தேவையற்ற வேதிப் பொருட்களை இடுபொருட்களாக பயன்படுத்துவதைக் குறைப்பதன் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களை நுகர்வோரின் உடல் நலத்திற்கும் இது நன்மை தருவதாகும். செலவைக் குறைப்பது, விளைச்சலை அதிகரிப்பது, சுற்றுச் சூழலை மேம்படுத்துவது, நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பது ஆகியவற்றிற்கு இது காரணமாக அமைகிறது. இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட நிலத்தடி மண்வள மாதிரிகளை சேகரித்து, நாடுமுழுவதிலும் கிட்டத்தட்ட 1500 பரிசோதனைக் கூடங்களின் வலைப்பின்னலின் மூலம் சோதிக்கப்பட்டு, 14 கோடி நிலத்தடி மண்வள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

எங்களை மோசமாக விமர்சிப்பவர்களும் கூட குறைகூற முடியாத ஒரு சாதனையை உங்களிடம் சொல்ல வேண்டியவனாகிறேன். ஊழலின் அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் அது. கடந்த பல ஆண்டுகளாகவே எந்தவொரு வளரும் நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான முட்டுக்கட்டைகளில் ஒன்றாக ஊழலே விளங்குகிறது என பொருளாதார நிபுணர்களும் மற்ற நிபுணர்களும் கூறி வந்துள்ளனர். ஊழலைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். பொதுத்துறை வங்கிகளில் என்ன நடைபெற்றது என்பதைப் பற்றி நான் ஏற்கனவே கூறியிருந்தேன். முக்கியமான ஆதார வளங்களை ஒதுக்கீடு செய்வதில் நிலவி வந்த விருப்புரிமையை நாங்கள் அகற்றிவிட்டோம். சுரங்கங்கள், அலைக்கற்றை, பண்பலை வானொலிகளுக்கான அனுமதி போன்றவற்றிற்கு வெளிப்படையான ஏல முறைக்கு நாங்கள் மாறினோம். பயனாளிகளுக்கு நேரடியாக பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவது போன்றவற்றின் சேதாரங்களை அடைத்து விட்டோம். நம்பகத் தன்மை கொண்டவர்களே உயர் பதவிகளில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் ஊழியர் நிர்வாக முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிரான எங்களால் துவங்கப்பட்ட இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊழலில் ஏற்படும் குறைவினால் ஏழைகளே பெரும் பயன் அடைகின்றனர்.

எதிர்காலம் பற்றிக் கருதும்போது, வரவிருக்கும் ஆண்டுகளில் நாங்கள் பின்பற்றவிருக்கின்ற பாதை குறித்துச் சொல்ல விழைகிறேன்.

முதலாவதாக, நாடுதழுவிய அளவில் ஒழுங்கமைந்த, செயல்திறன் மிக்க பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். நீண்ட நாள் நிலைக்கும் வகையிலான வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளமாக வலுவான நாடுதழுவிய அளவிலான பொருளாதார அடிப்படைக் கொள்கைகள்தான் அமைகின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இரண்டாவதாக, இதனோடு அனைவரையும் உள்ளடக்கிய வகையிலான, சமமான தன்மை கொண்ட செயல்முறைக்கு தொடர்ந்து அழுத்தம் தருவதை நாங்கள் இணைப்போம். வளர்ச்சியின் பயன்கள் குறிப்பிட்ட ஒரு சிலரை அல்லது பலரை மட்டுமே சென்றடைவதற்குப் பதிலாக இந்தியர்கள் அனைவரையும் சென்று சேர்வதை இது உறுதிப்படுத்தும். ஊழலின் மீதான எங்களது தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இதற்குப் பொருளாகும்.

மூன்றாவதாக, முதலீட்டிற்கான சூழ்நிலையை, தொழில் செய்வதற்கு ஏற்ற சூழலை மேம்படுத்துவது ஆகியவற்றில் முன்னேற்றமடைய நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். இந்தியாவானது வர்த்தக நிறுவனங்களை வரவேற்பது மட்டுமின்றி தொழில் செய்வதற்கு எளிதான இடம் என்ற பெயரை பெறவே விழைகிறோம். நேரடி அந்நிய முதலீட்டிற்கான கொள்கைகளை பெருமளவிற்குத் தளர்த்தியதன் மூலம் இந்த முதல் நோக்கத்தில் பெரும்பகுதியை நாங்கள் ஏற்கனவே எட்டியுள்ளோம். இரண்டாவது நோக்கத்திலும் நல்லதொரு துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என்பதோடு தொடர்ந்து அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் செய்வோம்.

‘இந்தியாவில் உற்பத்தி செய்’ என்ற முன்முயற்சியை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். இது உள்நாட்டு சந்தைக்கான பொருட்களை உற்பத்தி செய்வதற்காக அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை உற்பத்தி செய்வது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டதல்ல; உலகத்தரம் வாய்ந்த பொருட்களை செய்வது மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் தனது சேவையை நீட்டிப்பதற்காகவும் ஆகும். எனவே, எங்களைப் பொறுத்தவரை, சுதந்திரமான வர்த்தகத்தை நோக்கிய முன்னேற்றம் என்பது மிக முக்கியமானதாகும். வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியாவைப் போன்ற நாடுகளிலிருந்து வரும் பொருட்களுக்காக மட்டுமின்றி, சேவைகளுக்காகவும் தங்களது சந்தையை திறக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். அமெரிக்காவையும் இந்தியாவையும் பொறுத்தவரை, இது பரஸ்பர நலனுக்கான வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன். இளமையான, கடின உழைப்பிற்குத் தயாரான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில் உலகத்தின் மனித வளத்திற்கான எதிர்கால சேமிப்புக் கிடங்காக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவின் மூலதனம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் மனித வளம் மற்றும் நிறுவனத் திறன் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டணி என்பது மிகுந்த வலிமை கொண்டது என்பதே எனது கருத்தாக இருக்கிறது. இத்தகைய கூட்டணியின் மூலம் நம் இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

வரி குறித்த எங்களது கொள்கைகள் எதிர்பார்ப்புக்கு தகுந்த வகையில் இருப்பதை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். பல பொருட்களின் விலைக்கான முன்கூட்டிய ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் கையெழுத்திட்டதன் மூலம் இந்த முன்னறியும் தன்மையில் பெரும் முன்னேற்றத்தை நாம் அடைந்துள்ளோம். இதை மேலும் முன்னெடுத்துச் செல்லவும் உறுதிபூண்டுள்ளோம். அதே நேரத்தில் அமெரிக்காவைப் போலவே வரி ஏய்ப்பு, நியாயமற்ற வரி தவிர்ப்புகள் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் நாங்கள் இறங்கியுள்ளோம்.

எங்களது பாதுகாப்புத் துறையையும் தொடர்ந்து வெளிப்படையாக ஆக்குவோம். சில நேரங்களில் இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்வதில் அனுமதிக்கான செயல்முறைகள் வேகமிழந்து போய் விடுகின்றன. பாதுகாப்புத் துறைக்கென திட்ட அனுமதிக்கான அணுகுமுறையை மேலும் சிறப்பானதாகவும் எளிமையானதாகவும் செய்வதற்கும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். அணுஎரிசக்தித் துறையைப் பொறுத்தவரையில் வெஸ்டிங் ஹவுஸ் நிறுவனத்திடமிருந்து ஆறு அணு மின் உலைகளை நாங்கள் வாங்குகிறோம். அணுசக்தி மற்றும் அறிவியல் துறைகளில் நமது ஒத்துழைப்பில் புதியதொரு யுகத்தை தெரிவிப்பதாக இது அமையும். புதிதாக தாராளமயமாக்கப்பட்ட ரயில்வே துறையில் மிகப்பெரும் முதலீட்டை செய்ய முன்வந்த நிறுவனங்களில் ஒன்றாக ஜி.இ. நிறுவனமும் உள்ளது என்பதறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஒப்பீட்டளவில் வறியதொரு மாநிலமான பீகாரில் ரயில் என்ஜின் தயாரிப்பிற்கான ஆலை ஒன்றை அந்த நிறுவனம் திறக்கவுள்ளது. இதுபோன்று மேலும் பல முதலீடுகள் வரும் எனவும் நான் எதிர்பார்க்கிறேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை கங்கை நதியானது மிகச் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான ‘நமாமி கங்கா’ திட்டமானது விரைவில் துவங்கவுள்ளது. சுற்றுச்சூழல் பொறியியல், குடிநீர் மற்றும் கழிவுநீர் போன்ற சுத்திகரிப்பு நுட்பங்கள் ஆகியவற்றில் திறமையான அமெரிக்க நிறுவனங்களுக்கு இத்திட்டம் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. எனது அரசைப் பொறுத்தவரையில் இந்தத் திட்டமானது மிக அதிகமான முன்னுரிமை கொண்ட திட்டமாகும். அதன் தூய்மையான பெருமை மீட்டு எடுக்கும் வகையில் கங்கை நதியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.

சகோதர, சகோதரிகளே!

மாறியதொரு இந்தியாவை நோக்கிய பயணத்தை நாங்கள் துவங்கியுள்ளோம். உலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியான இந்தியா மாறிய இந்தியாவாக மாறுவதென்பது மாறிய உலகம் என்பதாகவே பொருள்படும். இந்தப் பயணம் மிக நீண்டதொரு பயணமாகும். எனினும் இதுவரையில் நாங்கள் அடைந்துள்ள முன்னேற்றமானது நமது இறுதி இலக்கை நாங்கள் நிச்சயமாக அடைவோம் என்பதையே எனக்கு உறுதிப்படுத்துகிறது. இந்தப் பயணமானது உங்களது நிறுவனத்திற்கு நல்லதொரு வரவு செலவுக் கணக்கை உருவாக்குவதற்கு மட்டுமின்றி மிகச் சிறந்த இந்தியாவை உருவாக்க, மிகச் சிறந்த அமெரிக்காவை உருவாக்க, மிகச் சிறந்த உலகை உருவாக்க வியப்புநிரம்பிய வாய்ப்பினை வழங்குவதாகவும் அமைகிறது.

நன்றி.