Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமைதி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

அமைதி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

அமைதி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை


அதிபர் பாராக் ஓபாமா அவர்களே

செயலர் பான் கி மூன் அவர்களே,

மேதகு அதிபர்களே,

இரண்டாம் உலகப்போரில் வீரமாக போரிட்ட வீரர்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1945ல், அது இரண்டரை மில்லியன் இந்திய ராணுவ வீரர்களை உள்ளடக்கியது. உலகிலேயே மிகப் பெரிய தன்னார்வ ராணுவ வீரர்களாவர். ஏறக்குறைய 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அதில் பாதிக்கும் மேல் உள்ள எண்ணிக்கையிலானோர் காணாமல் போயினர்.

இங்கே உள்ள மூன்று நாடுகள் அந்த தியாகத்தின் ஒளியை ஏந்தியுள்ளன. ஐக்கிய நாடுகளின் அமைதிப் படைக்கு அவர்கள்தான் மிகப்பெரிய உழைப்பை செலுத்தியுள்ளனர். மற்ற எல்லா நாடுகளிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் இருந்து 1,80,000க்கும் அதிகமானோர் ஐநாவின் அமைதிப் படைகளில் பங்கேற்றுள்ளனர். ஐநா சபையின் 69 அமைதிப் படைகளில் 48 படைகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 161 இந்தியர்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்துள்ளனர்.

லைபீரியா நாட்டில் செயல்பட்ட அமைதிப்படையில் இந்தியாதான் முதன் முதலாக பெண் வீரர்களை பங்கு பெறச் செய்தது. பல நாடுகளின் வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளித்து வருகிறது. இந்நாள் வரை 82 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது.

அமைதிக்கான இந்த மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்த அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது உரிய நேரத்தில் நடக்கும் நிகழ்வு. 70வது ஆண்டு நிறைவினால் உரிய நேரத்தில் நடக்கும் நிகழ்வல்ல. பாதுகாப்புக்கான சூழல் மாறிக் கொண்டு வருகிறது. அமைதியை நிலைநாட்டவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. அமைதிப் படையைச் சேர்ந்தவர்கள் அமைதியை நிலைநாட்டவதற்காக மட்டும் அல்ல. அவர்கள் மீது பல்வேறு பொறுப்புகள் உள்ளன. தீர்மானங்கள் ஆர்வமிகுதியாக இருக்கின்றன. ஆனால் அவற்றை நிறைவு செய்யும் வகையில் நம்மிடம் அதற்கான வளம் இல்லை. அமைதிப் படையைச் சேர்ந்தவர்களுக்கு சில சமயங்களில் ஏற்படும் சிக்கல், அவர்கள் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. இதற்கான காரணம் என்னவென்றால், அமைதிப் படைக்கு வீரர்களை அனுப்பும் நாடுகளுக்கு, முடிவெடுப்பதில் அதிகாரம் இல்லை. அந்த அமைதிப் படையை நிர்வகிப்பதிலும், தலைமையேற்பதிலும் அவர்களுக்கு எந்த பங்கும் வழங்கப்படுவதில்லை. அமைதிப் படைகள், அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப, அவர்களின் எல்லைகளை புரிந்து கொண்டு, செயல்படும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

அமைதிப் படை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரமான குழு, இந்த சிக்கல்களை விவாதிக்கும் என்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த குழுவின் பரிந்துரைகளின் மீது தன் அறிக்கையை வழங்கிய ஐநா செயலருக்கு எங்கள் நன்றி. இவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நம்புகிறோம். அமைதிப்படையில் பங்கெடுப்பது தொடர்பான இந்தியாவின் முடிவில் உறுதியாக இருக்கிறோம். இவ்வகையில் மேலும் எங்கள் பங்களிப்பை செலுத்த திட்டங்களை அறிவித்துள்ளோம். 850 வீரர்களை அனுப்பும் புதிய பட்டாலியன்களை உருவாக்கி உள்ளோம். பெண்கள் பங்களிப்போடு கூடுதலாக நான்கு போலீஸ் யூனிட்டுகளை உருவாக்கியுள்ளோம். தேவைப்படும் நேரத்தில் புதிய படைகளை அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளோம். ஐநா அமைதிப் படைக்கு தொழில்நுட்ப வல்லுனர்களை தயார் செய்துள்ளோம். அமைதிப்படையில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

அமைதிப்படையின் வெற்றி, அந்த ராணுவ வீரர்கள் ஏந்தும் ஆயுதங்களால் வராது. மாறாக, ஐக்கிய நாடுகள் அவையின் உறுதியான முடிவுகளால்தான் வரும். ஐக்கிய நாடுகள் அவையின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்த, அதன் பாதுகாப்புக் குழு சீரமைக்கப்பட வேண்டும்.

ஐநா சபையின் மேன்மையை காப்பதற்காக அமைதிப்படையில் பணியாற்றி தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வாறு உயிர்நீத்த வீரர்களுக்கென கட்டப்படும் நினைவு சுவரை வேகமாக முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த முயற்சிக்கு நிதி உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.

••••••