பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையில் அறிவியல்-தொழில்நுட்பக் கூட்டுறவிற்கான இந்திய-பிரெஞ்சு கூட்டுக் குழு ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாட்டிற்கு கையெழுத்திடுவது பற்றி இன்று எடுத்துரைக்கப்பட்டது. இந்த உயர்மட்ட கூட்டுக் குழுவை நிறுவுவதற்கான ஏற்பாட்டிற்கு இந்தியாவும் பிரான்சும் ஜனவரி 25 அன்று புதுதில்லியில் கையெழுத்திட்டிருந்தன.
இந்த ஏற்பாட்டின்படி, ஆராய்ச்சி, வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் மூலம் பொருளாதார, சமூக வளர்ச்சியை எட்டும் நோக்கத்துடன் அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் இந்திய-பிரெஞ்சு ஒத்துழைப்பிற்கான ஒருமித்த செயல்பாட்டைக் கண்டறிவது, முன்னுரிமைகளை வரையறுப்பது ஆகியவற்றை இந்தக் கூட்டுக் குழு கண்டறியும்.
இந்தக் கூட்டுக் குழுவானது இந்தியாவின் சார்பில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மற்றும் பிரான்ஸ் நாட்டின் சார்பில் வெளியுறவு மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான அமைச்சர் ஆகிய இருவராலும் தலைமை தாங்கப்படும். அல்லது அந்தந்த நாடுகளால் குறிப்பிடப்பட்ட வகையில் இந்தியாவின் செயலாளர் அந்தஸ்து பெற்ற ஓர் அலுவலர் மற்றும் பிரான்ஸ் நாட்டு அமைப்பின் டைரக்டர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஒருவர் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டுக் குழு செயல்படும்.
இந்த இரு நாடுகளுக்கிடையே அதிகரித்து வரும் அறிவியல்- தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் இந்த கூட்டுச் செயல்பாட்டை உருவாக்குவதற்காக இந்த இரு நாடுகளின் பல்வேறு தேசிய அறிவியல்-தொழில்நுட்ப அமைப்புகளின் ஆற்றிய பங்கு ஆகியவற்றின் பின்னணியில்தான் இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது.