பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு, அலுவல் ரீதியான வளர்ச்சிக்காக உதவி செய்யும் கொள்கை விதிகளில் மாறுதல் செய்ய ஒப்புதல் அளித்தது.
மாற்றம் செய்ப்பட்ட விதிகள் பின்வருமாறு.
பிரதமரின் ஒப்புதலோடு நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர், தற்போது உள்ள இருதரப்பு பங்கு நாடுகளான, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, ப்ரான்ஸ், இத்தாலி, கனடா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கமிஷன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் அல்லாமல் இதர நாடுகளில் இருந்து பரஸ்பர உதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புதல் அளிக்கலாம்.
முதலீடு சார்ந்த திட்டங்களுக்கும், சிறப்பு வாய்ந்த இதர திட்டங்களுக்கும் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிறப்பு கடன் பெறலாம்.
1) பிற நாடுகளில் இருந்து பெறப்படும் கடன் குறைந்த பட்சம் 1 பில்லியன் டாலர்களாக இருக்க வேண்டும். இதில் 50 சதவீதம் சாதாரண கடனாக இருக்கும் (சிறப்புக் கடன் அல்ல)
2) எல்லா ஒப்பந்தங்களுக்குமான (பொருட்கள், சேவைகள், ஆலோசனைகள் உட்பட) வரையறை கடன் வழங்கும் நாட்டின் நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களோடு முடிக்கப்பட வேண்டும். இரு நாட்டு கூட்டணியில் உள்ள நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் / இந்தியர்களின் பங்கு 50 சதவீதத்துக்கும் அதிகம் இருக்க வேண்டும்.
3) மேலே கூறப்பட்ட நிபந்தனை 2ல் உள்ளபடி போதுமான விண்ணப்பங்கள் வராவிட்டால், நிபந்தனைகளைத் தளர்த்தி, சர்வதேச டெண்டருக்கு செல்ல இயலும்.
4) நிதி தரும் நாட்டில் இருந்து பெறப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் அளவு 30 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
5) ஆண்டு வட்டி விகிதம் 0.3 சதவிகிதத்துக்கு (அனைத்து கட்டணங்களையும் சேர்த்து) மிகாமல் இருக்க வேண்டும். கடனுக்கான கால அளவு 40 ஆண்டுக்கு குறைவாக (திருப்பிச் செலுத்த 10 ஆண்டு கால தடை உட்பட) இருக்கக் கூடாது.
6) 250 மில்லியன் டாலர்களுக்கு குறையாத மதிப்பில் இருக்கும் தனிப்பட்ட திட்டங்களே, இந்த சிறப்புக் கடனுக்கு தகுதி பெறும்.
7) மாநில அரசால் (தனியாகவோ கூட்டாகவோ) செயல்படுத்தப்படும் திட்டங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இந்த திருத்தப்பட்ட விதிகளில் தேவையான விதிவிலக்குகளை அளிக்கவும், விதிகளை தளர்த்தவும், நிதி அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும், இதர முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்காகவும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டபடி, பெறப்படும் இது போன்ற சிறப்புக் கடன்கள், இந்த திட்டங்களுக்கான முதலீட்டுத் தேவைகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, உள்கட்டமைப்பு மற்றும் இதர முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானத் திட்டங்களுக்கான முதலீட்டை சேகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்தகைய பொருளாதார நடவடிக்கைகள் வேலைவாய்ப்பை அதிகரித்து, உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும். எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்யப்பட்டு, மேக் இன் இந்தியாவை எங்கெல்லாம் சாத்தியமோ அங்கு அமல்படுத்த வேண்டும்.