பி.எம்.இந்தியா
உங்கள் அனைவருக்கும் எனது அன்புநிறைந்த வாழ்த்துகள்.
இந்தப் பெரியோர்கள் அவையின் நடுவே இருப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்த பெருமையே ஆகும்.
அதுவும் கூட மகா சிவராத்திரி என்ற புனிதமான தருணத்தில்.
திருவிழாக்கள் என பலவும் உள்ளன. ஆனால் இந்தத் திருவிழா மட்டுமே ‘மகா’ என்ற அடைமொழியோடு இருப்பதாகும்.
உண்மையில் பல தேவர்கள் இருந்தாலும் கூட, ஒரே ஒருவரைத்தான் நாம் மகாதேவன் என்று அழைக்கிறோம்.
மந்திரங்களும் ஆயிரம் உண்டு; ஆனால் அந்த மகாதேவரோடு ஐக்கியமாகியுள்ள ஒரே மந்திரம் என்பது மகாம்ருத்யுஞ்சயி மந்திரம் என்று அழைக்கப்படுவதே ஆகும்.
அத்தகைய பெருமை பெற்றவரே சிவபெருமான்.
குறிப்பிட்டதொரு நோக்கத்திற்காக, இருளையும் அநீதியையும் அழித்தொழிப்பதற்காக, தெய்வீகத்தின் சேர்க்கையை வெளிப்படுத்துவதாகவே மகாசிவராத்திரி அமைகிறது.
அது நல்லதற்காகவே போராடும் துணிவை நமக்குத் தருவதாய் அமைகிறது.
இருளும் குளிரும் நிரம்பிய காலத்திலிருந்து வசந்தமும் வெளிச்சமும் நிரம்பிய காலத்திற்கு பருவம் மாறிச் செல்வதைக் குறிப்பதாகவும் அது அமைகிறது.
மகாசிவராத்திரி என்பது இரவு முழுவதும் கொண்டாட்டங்கள் நிரம்பியதாக அமைகிறது. நம்மைச் சுற்றியுள்ள இயற்கையைப் பாதுகாக்கவும், நம் சுற்றுப்புறச் சூழலுக்கு இயைந்த வகையிலும் நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நமக்குத் தெரிவிப்பதாகவும் அது அமைகிறது.
எனது சொந்த மாநிலமான குஜராத் சோமநாதர் குடியிருக்கும் இடமாகும். மக்களின் சேவைக்காக நான் சென்ற இடம் விசுவநாதர் குடியிருக்கும் காசியாகும்.
சோமநாதரில் இருந்து விஸ்வநாதர் வரை, கேதார்நாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து நாம் இப்போது கூடியிருக்கும் கோவை வரை, சிவபெருமான் எங்கும் நிறைந்தவராக இருக்கிறார்.
நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே, மகாசிவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாமனைவருமே ஆழ்கடலில் விழும் சிறு துளிகளைப் போன்றவர்கள்தான்.
பல நூற்றாண்டுகளாகவே ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு நேரத்திலும் எண்ணற்ற பக்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தே வந்திருக்கிறார்கள்.
அவர்கள் பல்வேறு வகையான இடங்களில் இருந்து வந்திருக்கிறார்கள்.
அவர்கள் பேசிய மொழிகளும் கூட வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் அவர்களது தெய்வீக நோக்கம் என்பது ஒரே மாதிரியானதுதான்.
ஒவ்வொரு மனிதனின் இதயத்தின் அடித்தளத்திலும் இந்த வேட்கை துடித்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த பூமி முழுவதுமே அவர்களின் கவிதைகள், அவர்களின் இசை, அவர்களின் அன்பு ஆகியவற்றால் மூழ்கியிருக்கிறது.
இங்குள்ள 112 அடி உயரமுள்ள ஆதியோகியின், யோகேஸ்வர லிங்கத்தின் முன்னால் நிற்கும்போது மகத்தான இருப்பு நம் அனைவரையும் அரவணைப்பதை நம்மால் உணர முடியும்.
வரவிருக்கும் நாட்களில், நாம் அனைவரும் ஒன்று திரண்டிருக்கும் இந்த இடம் அனைவருக்கும் ஊக்கம் தரக்கூடிய ஆதார சுருதியாக, தன்னைக் கரைத்துக் கொண்டு உண்மையைக் கண்டறியும் இடமாக மாறவிருக்கிறது.
அனைவரையும் தன்னுள் அடக்கிய சிவனை அது நமக்கு நினைவூட்டும்.
இன்று யோகா என்பது மிக நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளது.
இப்போது யோகா என்பது பல விளக்கங்களை, பல வகைகளை, பல பள்ளிகளைக் கொண்டதாக, பலவகைகளிலும் பயிற்சி செய்யக் கூடியதாக உருப்பெற்றுள்ளது.
இதுதான் யோகாவின் மகத்துவம். புராதனமாக இருந்த போதிலும் அது நவீனமானதாகவே இருக்கிறது. நிலையான ஒன்றாக இருந்தபோதிலும் அது தன்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளது.
எனினும் யோகாவின் சாரம் என்பது இன்னும் மாறவே இல்லை.
அதன் சாரத்தைப் பேணிக் காப்பது மிகவும் முக்கியம் என்பதற்காகவே நான் இதைக் கூறுகிறேன்.
இல்லையெனில், நமது ஆன்மாவை மீண்டும் கண்டெடுக்கவும். யோகாவின் சாரத்தைக் கண்டறியவும் புதியதொரு யோகாவை நாம் கண்டறிய வேண்டியிருக்கும்.
யோகா என்பது கிரியா ஊக்கி. ஜீவனிலிருந்து சிவத்திற்கு மாறிச் செல்ல அது உதவுகிறது.
யோகாவை நாம் செய்வதன் மூலம், ஒன்றுபட்ட உணர்வை நாம் உருவாக்குகிறோம். மனம், உடல், அறிவு ஆகியவற்றின் ஒன்றிய நிலையை நாம் அடைகிறோம்.
நமது குடும்பத்துடன், நாம் வாழுகின்ற சமூகத்துடன், நமது சக மனிதர்களுடன், பறவைகள், விலங்குகள், மரங்கள் என இந்தப் பூமியை பகிர்ந்து கொள்கின்ற அனைத்து உயிரினங்களுடன் நம்மை ஒன்றைச் செய்வதே யோகா.
யோகா என்பது நான் என்பதிலிருந்து நாம் என்பதை நோக்கிய பயணம் ஆகும்.
வேறெங்கும் கண்டிராத வேற்றுமைகள் நிரம்பியது இந்திய நாடு. இந்தியாவின் பன்முகத்தன்மையை நம்மால் காணவும், கேட்கவும், உணரவும், தொடவும், நுகரவும் முடியும்.
இந்தப் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் மகத்தான வலிமை. அதுதான் இந்தியாவை ஒன்றிணைத்து வருகிறது.
சிவனை நினையுங்கள். அவர் வீற்றிருக்கும் மகத்தான கைலாய மலையும், வலிமைமிக்க இமயமலையும் நம் மனக்கண் முன்னே வந்து நிற்கும். பார்வதி தேவியை நினையுங்கள். விரிந்து பரந்த முக்கடல்கள் சங்கமிக்கும் அழகிய கன்னியாகுமரி உங்கள் மனக்கண் முன்னே வந்து நிற்கும். சிவன் – பார்வதி ஆகிய இருவரின் சேர்க்கை என்பது இமயமலையும் கடல்களும் சங்கமிப்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும்.
சிவன் – பார்வதி – இதுதான் ஒன்றுகலப்பது பற்றிய செய்தியை நமக்குத் தெரிவிக்கிறது.
இந்த ஒன்றுகலப்பது என்பது என்ற செய்தி நமக்கு மேலும் எவற்றையெல்லாம் தெரிவிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
சிவனின் கழுத்தைச் சுற்றி பாம்பு இருக்கிறது. அவரது மகனான கணபதியின் வாகனமோ எலி. பாம்புக்கும் எலிக்கும் இடையே எத்தகைய பகையுணர்வு இருக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் அவர்கள் ஒன்றாகத்தான் வாழ்கின்றனர்.
அதைப் போலவே அவரது இன்னொரு மகனான கார்த்திகேயனின் வாகனமோ மயில். மயிலுக்கும் பாம்புக்கும் இடையே இருக்கும் பகையுணர்வு பற்றியும் நம் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் கூட அவர்கள் ஒன்றாகவே வாழ்கின்றனர்.
சிவனின் குடும்பத்திலேயே பல வகையான பண்புகளை நாம் காண்கிறோம். இருந்தபோதிலும் அங்கே இணக்கமும் ஒற்றுமையும் பட்டொளி வீசிப் பறப்பதை நாம் காண்கிறோம்.
இதுதான் நமது கலாச்சாரத்தின் தனித்தன்மை. எங்கெல்லாம் ஓர் இறைவனையோ, இறைவியையோ காண்கிறோமோ, அங்கெல்லாம் அவர்களோடு தொடர்பு படுத்தியதாக விலங்கையோ, பறவையையோ அல்லது மரத்தையோ நம்மால் காணமுடிகிறது.
அதுவும் அந்த விலங்கை, பறவையை, மரத்தையும் கூட நாம் இறைவனையோ அல்லது இறைவியையோ வணங்குவதைப் போலவேதான் நாம் வணங்கி வருகிறோம். இயற்கையைப் போற்றுவதற்கான உணர்வை நம்மிடையே வளர்த்துக் கொள்வதற்கு இதை விடச் சிறந்த வழி இருக்க முடியாது. இயற்கை என்பது இறைவனுக்குச் சமமானது என்ற உணர்வை நமது முன்னோர்கள் இவ்வாறுதான் உறுதியாக நம்மிடையே ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் கூர்ந்த மதிநுட்பத்தையே இது எடுத்துக் காட்டுகிறது.
நமது வேதங்கள் கூறுகின்றன:
உண்மை என்பது ஒன்றே; முனிவர்கள் அதை பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.
இத்தகைய பெருமைகளோடுதான் நாம் இளம்வயதிலிருந்தே வாழ்ந்து வருகிறோம். எனவேதான் கருணை, அன்பு, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகிய அனைத்துமே நம்மின் பகுதியாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
இத்தகைய பெருமைகள்தான் பல நூற்றாண்டுகளாக நமது இந்தியக் கலாச்சாரத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
அனைத்து திசைகளிலிருந்தும் புதிய சிந்தனைகளையும், கருத்துக்களையும் வரவேற்பதாக நம் மனம் திறந்த வகையில் இருக்க வேண்டும். எனினும் தங்களின் அறியாமையை மறைப்பதற்காக, நம்மில் ஒரு சிலர் மிகவும் குறுகிய பார்வையை மேற்கொண்டு, புதிய சிந்தனைகளையும் அனுபவங்களையும் வரவேற்பதற்கான வாய்ப்பை அழித்து விடுகின்றனர்.
புராதனமானது என்பதாலேயே ஒரு கருத்தை மறுதலிப்பது என்பதும் தீமை பயப்பதாகும். அதை ஆராய்ந்து, உணர்ந்து, புதிய தலைமுறையினர் சிறப்பாகப் புரிந்து கொள்ளும் வகையில் அதை எடுத்துச் செல்வதே அவசியமாகும்.
பெண்கள் வளம்பெறாமல் மனிதகுலத்தின் முன்னேற்றம் முழுமையடையாது. அது இனியும் பெண்களின் வளம் அல்ல; பெண்கள் தலைமையிலான வளர்ச்சியே ஆகும்.
நமது கலாச்சாரத்தில் பெண்களின் பங்கு என்பது மையமானதாகவே இருக்கிறது என்பது குறித்து நாம் மிகவும் பெருமை கொள்கிறேன்.
எண்ணற்ற இறைவிகளைப் போற்றுவதாகவே நமது கலாச்சாரம் இருந்து வந்துள்ளது.
இந்தியாவின் வடக்கோ, தெற்கோ, கிழக்கோ, மேற்கோ சமூக சீர்திருத்தங்களுக்கான இயக்கங்களை முன்னின்று நடத்திய பல பெண் முனிவர்களை கொண்டதாகவே இந்தியா இருந்து வந்துள்ளது.
வழக்கமானவற்றை உடைத்து நொறுக்கி, தடைகளை உடைத்தெறிந்து, புதிய பாதைகளை வகுப்பவர்களாகவும் அவர்கள் விளங்கினர்.
ஒரு விஷயம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். இந்தியாவில் நாம் வழக்கமாகச் சொல்வது இதுதான்: தெய்வீகத்தின் வெளிப்பாடே பெண்மை.
ஆண்களைப் பொறுத்தவரையில் அவர் நல்ல செயல்களைச் செய்யும்போதே தெய்வீகத்தை அடைய முடியும்.
இதிலுள்ள வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். பெண்களின் தெய்வீகத்திற்கு எவ்வித நிபந்தனையும் இல்லை; ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை அந்த தெய்வீக நிலையைப் பெற நிபந்தனை இருக்கிறது. நல்ல செயல்களைச் செய்வதன் மூலமே அவனால் அதை அடைய முடியும்.
எனவே தன்னை உலகத்தின் தாயாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சத்குரு வலியுறுத்துவதற்கும் இதுவே காரணமாக இருக்கக் கூடும். எவ்வித நிபந்தனையும் இன்றி அனைவரையும், அனைத்தையும் தன்னுள் இணைத்துக் கொள்வதே தாய்மை ஆகும்.
21ஆம் நூற்றாண்டின் மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கை நிலைமைகள் அதற்கேயுரிய சவால்களையும் தன்னோடு அழைத்து வந்துள்ளது.
வாழ்க்கை நிலைக்குத் தொடர்புடைய நோய்கள், மன அழுத்தத்தின் விளைவாக உருவாகும் நோய்கள் மிக மிகச் சாதாரணமாக ஆகிவிட்டன. ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தி விடலாம். ஆனால் அவ்வாறு தொடர்பு கொள்ளாததால் ஏற்படும் நோய்களை எப்படிப் போக்குவது?
போதைப் பொருட்களுக்கு, மதுவிற்கு மக்கள் அடிமையாவது குறித்து நான் படிக்கும்போது என்னுள் தோன்றுகின்ற ஆழமான துயரத்தை வார்த்தைகளால் வடிக்க இயலாது. ஏனெனில் தங்களோடு கூட இயைந்து வாழ முடியாத நிலையையே அது எடுத்துக் காட்டுகிறது.
இன்று உலகம் முழுவதுமே அமைதியையே விழைகிறது. இந்த அமைதி என்பது யுத்தங்களில் இருந்தும், மோதல்களில் இருந்தும் மட்டுமல்ல; மன அமைதியும் கூடத்தான்.
மன அழுத்தம் என்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய அழுத்தத்தை முறியடிப்பதற்கான கூர்மையான ஆயுதமாக விளங்குவது யோகாவே ஆகும்.
யோகாவை தொடர்ந்து செய்வது மன அழுத்தத்தை, நாட்பட்ட குறைபாடுகளைப் போக்க உதவும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. உடல் என்பது மனதின் கோயில் என்று விவரிப்போமானால், யோகா அதை அழகான கோவிலாக உருவாக்க உதவுகிறது.
எனவே உடல்நலத்தை உறுதி செய்வதற்கான கடவுச் சீட்டு என யோகாவை நான் அழைக்கிறேன். நோய்களைப் போக்குவதற்கு மட்டுமின்றி, நல்ல உடல் நலத்திற்கான சிறந்த வழியாகவும் அது அமைகிறது.
யோகா என்பது ரோக் முக்தி (நோய்களிலிருந்து விடுதலை பெறுவது) அதைப் போன்றே அது போக் முக்தியும் (உலகத்தின் பேராசைகளிலிருந்து விடுபடுவதற்கும்) கூட.
சிந்தனை, செயல், அறிவு, ஆர்வம் என அனைத்து வகையிலும் ஒருவரை சிறந்ததொரு மனிதனாக மாற்ற வல்லது யோகா.
உடலை நன்றாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சிகளே யோகா என்று கருதுவது சரியல்ல.
பலவகையிலும் உடலை வளைத்து, முறுக்கும் திறமை கொண்ட பலரையும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவருமே யோகிகள் அல்ல.
யோகா என்பது உடல் ரீதியான பயிற்சிகளுக்கும் மேம்பட்டது.
யோகாவின் மூலம் உங்களால் புதிய யுகத்தை உருவாக்க முடியும். அதாவது ஒன்றுபட்ட, இணக்கமான ஒரு யுகத்தை.
சர்வதேச யோகா தினம் பற்றிய கருத்தை இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்தபோது உலகம் அதை இருகரம் நீட்டி வரவேற்றது.
2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது.
கொரியாவோ, அல்லது கனடாவோ, ஸ்வீடனோ அல்லது தென் ஆப்ரிக்காவோ உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் சூரியனின் ரேகைகள் வந்து படிந்தபோது யோகாவை பயிற்றுவிப்பதில் ஈடுபட்டுள்ள யோகிகள் அதை முழுமனதோடு வரவேற்றனர்.
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி உலகின் பல்வேறு நாடுகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக வருவது என்பதே யோகாவின் உண்மையான சாரமான ஒருங்கிணைப்பை தெரிவிப்பதாக அமைகிறது.
ஒரு புதிய யுகத்தைக் கொண்டுவரும் வல்லமை படைத்ததாக யோகா அமைகிறது. அமைதி, கருணை, சகோதரத்துவம், மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே அந்த யுகம் அமையும்.
சத்குரு செய்தவற்றிலேயே மகத்தானதாகத் திகழ்வது சாதாரண மனிதர்களை யோகிகளாக அவர் மாற்றியதுதான். உலகத்தில் தங்கள் குடும்பத்தோடு, வேலையோடு பிணைந்து இருக்கும்போதே உச்சகட்ட மன நிம்மதியை தங்களுக்குள் பெற்று வாழ்பவர்களாக, தினம்தோறும் தீவிரமான, அற்புதமான அனுபவத்தைப் பெறுபவர்களாக, அவர்களை சத்குரு மாற்றியிருக்கிறார். எவர் ஒருவரும் அவர் எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அவரால் யோகியாக இருக்க முடியும்.
இங்கே ஏராளமான ஒளிபடைத்த, மகிழ்ச்சிகரமான முகங்களை என்னால் காண முடிகிறது. மிகுந்த அன்புடன், சின்னஞ் சிறு விஷயங்களைக் கூட கவனித்துச் செய்வதை நான் பார்க்கிறேன். முழு வேகத்துடன், உற்சாகத்துடன் பொது நன்மைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதையும் என்னால் பார்க்க முடிகிறது.
வரவிருக்கும் பல தலைமுறைகளையும் யோகாவை நோக்கி கவர்ந்திழுப்பவராக ஆதியோகி விளங்குவார். இதை நம்மிடையே கொண்டு வந்து சேர்த்த சத்குருவிற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. மிக்க நன்றி. வணக்கங்கள் பல.
On the special occasion of Mahashivratri, unveiled 112 feet face of 'Adiyogi' at the programme organised by @ishafoundation. @SadhguruJV pic.twitter.com/Dgr8XKnXtT
— Narendra Modi (@narendramodi) February 24, 2017
Highlighted the essence of Yoga, how practising Yoga creates a spirit of oneness & importance of Yoga to manage stress.
— Narendra Modi (@narendramodi) February 24, 2017
Yoga is a passport to health assurance. It is about 'Rog Mukti' and 'Bhog Mukti.' More than curing ailments, it is a means to wellness.
— Narendra Modi (@narendramodi) February 24, 2017
Through Yoga let us create a new 'Yuga' of togetherness and harmony. This will benefit the entire humankind. https://t.co/EdzQqpZuYW
— Narendra Modi (@narendramodi) February 24, 2017