Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திரப்பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா-வில் அமைக்கப்படும் 3 புதிய எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு மூன்று இயக்குநர்கள் பணியிடங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் குண்டூர் அருகே உள்ள மங்களகிரி, மேற்குவங்கத்தில் கல்யாணி, மகாராஷ்டிராவில் நாக்பூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 3 புதிய இயக்குநர்கள் பணியிடங்களை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இயக்குநர்களின் சம்பளம், ரூ.80,000 (நிலையானது) (கூடுதலாக, வெளியில் மருத்துவம் பார்க்காமல் இருப்பதற்கான படி (NPA) அதிகபட்சம் ரூ.85.000).

 

எய்ம்ஸ் சட்டம் 1956-ல் திருத்தம் செய்து கொண்டுவரப்பட்ட, எய்ம்ஸ் (திருத்த) சட்டம், 2012-ன்படி, இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி இருக்க வேண்டும். அவரை மையத்தின் இயக்குநர் என்று அழைக்க வேண்டும். இதன் இயக்குநரை எய்ம்ஸ் மையம் நியமிக்கலாம். முதலாவது இயக்குநரை மத்திய அரசு நியமிக்க வேண்டும். இந்த இயக்குநர், எய்ம்ஸ் மையத்தின் செயலாளராகவும், ஆட்சிமன்றக் குழுவாகவும் செயல்படுவார். மூன்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் ஆளுமைக்கும், உரிய முறையில் செயல்படவும் உரிய ஆதரவை தருவார்.

 

உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தப் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். இயக்குநர் பணியிடத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் ரூ.80,000 (நிலையானது) (வெளியில் மருத்துவம் பார்க்காமல் இருப்பதற்கான படி அதிகபட்சம் ரூ.85,000). 6-வது மத்திய ஊதியக் குழுவின் அறிக்கைப்படி, ஒவ்வொரு இயக்குநர் பணியிடத்துக்கும் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் நிதிச்சுமை ஏற்படும்.

பின்னணி

கடந்த 2014-15-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்த மத்திய நிதியமைச்சர், ஆந்திரப்பிரதேசம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக 4 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூர் அருகே உள்ள மங்களகிரி, மேற்குவங்கத்தின் கல்யாணி, மகாராஷ்டிராவின் நாக்பூர் ஆகிய இடங்களில் ரூ.4,949 கோடி ரூபாய் செலவில் புதிய எய்ம்ஸ்-களை அமைக்க மத்திய அமைச்சரவை அக்டோபர் 7, 2015-ல் ஒப்புதல் அளித்தது. பிரதம மந்திரியின் சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக மூன்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

பிரதம மந்திரியின் சுகாதார பாதுகாப்புத் திட்டம், கடந்த 2003-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதன் நோக்கம், நாட்டில் தரமான மருத்துவக் கல்வியை அளிப்பதும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான சுகாதார சேவைகள் கிடைப்பதில் பிராந்திய அளவில் நிலவும் சமநிலையற்ற தன்மையை சரிசெய்வதும் ஆகும். பிரதம மந்திரியின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம், இரண்டு செயல்பாடுகளைக் கொண்டது. 1. எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்குவது, 2. அரசு மருத்துவக் கல்லூரிகள்/நிறுவனங்களை தரம் உயர்த்துவது. இந்தத் திட்டத்தின்கீழ், புவனேஷ்வர், போபால், ராய்ப்பூர், ஜோத்பூர், ரிஷிகேஷ், பாட்னா ஆகிய இடங்களில் எய்ம்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. ரே பரேலி-யில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நாக்பூர் (மகாராஷ்டிரா), கல்யாணி (மேற்கு வங்கம்), குண்டூரில் உள்ள மங்களகிரி (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய பகுதிகளில் மூன்று எய்ம்ஸ் மருத்துவ மனைகளை அமைக்க 2015-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பதிண்டா, கோரக்பூர் ஆகிய பகுதிகளில் இரண்டு எய்ம்ஸ்களை அமைக்க 2016-ம் ஆண்டிலும், அசாமில் அமைக்க 2017-லிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாக்பூர் (மகாராஷ்டிரா), கல்யாணி (மேற்குவங்கம்), குண்டூரில் உள்ள மங்களகிரி (ஆந்திரப்பிரதேசம்) ஆகிய பகுதிகளில் மூன்று எய்ம்ஸ்களை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது, பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் அல்லாத பணியிடங்களை உருவாக்குதல் ஆகிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அமைச்சரவையின் முடிவின்படி, சர்வதேச ஏலம் மூலம், மூன்று எய்ம்ஸ்-களுக்கும் வடிவமைப்பு ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த எய்ம்ஸ்-களுக்கான கட்டிட வடிவமைப்புத் திட்டமும் இறுதிசெய்யப்பட்டுள்ளது. விரிவான வடிவமைப்புத் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் அல்லாத பணியிடங்களை உருவாக்குவது குறித்து செலவினத் துறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 

***