Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இதர நிதிச்சேவைகள் துறையில் அந்நிய முதலீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் அந்நிய முதலீடு செய்வதற்கான கட்டுப்பாடுகளை திருத்துவதற்கு தனது ஒப்புதலை அளித்தது.
வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மீது தற்போதுள்ள அந்நிய நிதி பரிமாற்ற நிர்வாகம் (இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் நபரால் நிதி பரிமாற்றம் அல்லது நிதிக்கான உத்தரவாதம் வழங்குவது) குறித்த கட்டுப்பாடுகளில் கொண்டு வரப்படும் இத்திருத்தமானது இதர நிதிச் சேவைகள் துறையில் அந்நிய முதலீடு அதிகரிக்க உதவி புரியும். எனினும் (ரிசர்வ் வங்கி, செபி, ஓய்வூதிய நிதிக் கட்டுப்பாட்டு ஆணையம் போன்ற) நிதித் துறைக்கான கட்டுப்பாட்டு அமைப்புகளால் ஒழுங்குபடுத்தப்படும் இத்தகைய நிதிச் சேவை நிறுவனங்கள் மட்டுமே நேரடியாக அந்நிய முதலீட்டை பெற முடியும். இத்தகைய கட்டுப்பாட்டு அமைப்புகள் அல்லது அரசு முகமை ஆகியவற்றால் ஒழுங்கப்படுத்தப்படாத ”இதர நிதிச் சேவை” அமைப்புகள் அந்நிய முதலீட்டைப் பெற அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்.

இந்த கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்கனவே குறைந்தபட்ச மூலதன மயமாக்கல் குறித்த விதிமுறைகளை நிர்ணயித்துள்ள நிலையில், அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்த குறைந்தபட்ச மூலதன மயமாக்கல் குறித்த விதிமுறைகள் இதன் மூலம் இத்துறைக்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இது அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்க உதவுவதோடு, இதர பொருளாதார நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த உதவும். குறிப்பிட்டதொரு மாவட்டம்/மாநிலம் என்பதற்கு மாறாக, இந்தியா முழுமைக்குமே இந்த ஏற்பாடு பொருந்தும்.

பின்னணி

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் தனது 2016-17 நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், ”ஏற்கனவே 18 குறிப்பிட்ட வங்கியல்லாத நிதிச்சேவை நிறுவனங்கள் மட்டுமின்றி, நிதித்துறை கட்டுப்பாட்டு அமைப்புகளால் ஒழுங்குபடுத்தப்படும் இதர நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களிலும் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். தற்போதுள்ள ”வங்கியல்லாத நிதி நிறுவனங்கள்” குறித்த விதிமுறைகள் குறிப்பிட்ட 18 வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு மட்டுமே, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச மூலதன மயமாக்கல் வழிமுறைகளை அமல்படுத்திய பிறகு நேரடியாக அந்நிய முதலீட்டை பெற அனுமதிக்கப்படும் என வரையறுத்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்கனவே குறைந்தபட்ச மூலதன மயமாக்கல் குறித்த விதிமுறைகளை நிர்ணயித்துள்ள நிலையில் தற்போது அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் கீழ் குறிப்பிடப்பட்டிருந்த குறைந்தபட்ச மூலதன மயமாக்கல் குறித்த விதிமுறைகள் இத்திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது.

******