பி.எம்.இந்தியா
இந்தியாவின் ஏற்றுமதி- இறக்குமதி வங்கிக்கும் கொரியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கிக்கும் இடையே 900 கோடி அமெரிக்க டாலர் ஏற்றுமதிக் கடனுக்கான உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மூன்றாம் நாடுகளின் திட்டங்களுக்கான சரக்கு மற்றும் சேவைகள் வழங்கும் வகையில் இந்திய அடிப்படை வசதி மேம்பாட்டுக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது.
ஆண்டு இருதரப்பு நிதி பேச்சு வார்த்தைக்கென 2017 ஜூன் மாதம் 14, 15 தேதிகளில் கொரியா நாட்டு தலைநகர் சியோலுக்கு மத்திய நிதி அமைச்சர் திரு அருண் ஜேட்லி பயணம் மேற்கொள்ளும் போது இந்த 2 வங்கிகளுக்கும் இடையே உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இந்த் முடிவு காரணமாக நாட்டின் சர்வதேச ஏற்றுமதிகள் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா, கொரியா ஆகியவற்றுக்கிடையே அரசியல், நிதி உறவுகள் வலுப்படும். கடன் வழங்கும் ஏற்றுமதி, இறக்குமதி வங்கி மூலம் கிடைக்கும் தொகை கொண்டு இந்தியாவின் முன் உரிமை துறைகளான அதிநவீன நகரங்கள், ரயில்வே, மின்சார உற்பத்தி போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும். மூன்றாவது உலக நாடுகளின் திட்டங்களில் ஒரு பகுதியாக சரக்கு மற்றும் சேவைகளை இந்தியா மற்றம் கொரியாவில் இருந்து வழங்கவும் இந்த ஒப்பந்தத்தால் வாய்ப்பு ஏற்படுகிறது.
அமலாக்க அணுகுமுறை
ஒப்பந்த அமலாக்க அணுகுமுறையின் படி சம்மந்தப்பட்ட தரப்பு பரஸ்பர ஆலோசனைகளின் மூலம் நிதி உதவியை அமைத்து தற்போதைய ஏற்பாடுகளையும் நடைமுறைகளையும் ஆய்வு செய்யும். ஏற்றுமதி இறக்குமதி வங்கி இந்தியாவில் லாபகரமான திட்டங்கைளை அடையாளம் காணும். மூன்றாம் நாடுகளின் திட்டங்களுக்கென இரு தரப்பம் கூட்டாக லாபகரமான திட்டங்களை அடையாளம் காணும். ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கான இந்த 900 கோடி அமெரிக்க டாலர் தொகை கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் மூலம் முதலீட்டு கடனாக வழங்கப்படும். (குறிப்பாக நிதி திட்டங்களுக்கான ஏற்றுமதி கடனாக இது அமையும். இதில் ஓரளவு கொரிய இறக்குமதியும் அடங்கியிருக்கும். இந்தக் கடன் வட்டி வீதங்கள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஏற்றுமதிக் கடன் நெறி முறைகளின்படி அமையும்). இந்தக் கடன் தொகையை நிதி அளிப்பவர் என்ற முறையில் கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் பங்கேற்பு இல்லாமலும் பயன்படுத்தலாம். ஆனால் அதற்கான நோக்கங்கள் திருப்திகரமாக இருக்க வேண்டும்.
மூன்றாம் நாடுகளில் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தியாவும் கொரியாவும் சரக்கு மற்றும் சேவைகள் வழங்குவது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்துள்ள கூடுதல் வாய்ப்பு ஆகும். இதன் மூலம் பரஸ்பர அனுபவப் பகிர்வு, நிதி சார்ந்த ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் குறித்த தகவல் பரிமாற்றம், திட்ட மதிப்பீடு, சம்மந்தப்பட்ட துறைச் செயல்பாடுகளில் கிடைத்த அறிவுப் பகிர்வு ஆகியன சாத்தியமாகின்றன.
பின்னணி
2015 – ம் ஆண்டு பிரதமர் கொரியக் குடியரசில் பயணம் மேற்கொண்டபோது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தியாவுக்கு அடிப்படை வசதி மேம்பாட்டுக்கென 1000 கோடி அமெரிக்க டாலர் வழங்க கொரியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடன் தொகையில் 100 கோடி அமெரிக்க டாலர் ஒரு அரசிலிருந்து மற்றொரு அரசுக்கு என்ற முறையில் தென்கொரியப் பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்பு நி
றுவனத்திடமிருந்து வழங்கப்படுகிறது. 900 கோடி அமெரிக்க டாலர் நிதி ஏற்றுமதிக் கடனாக கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிலிருந்து வழங்கப்படுகிறது. கொரிய ஏற்றுமதி இறக்குமதி வங்கி வழங்கும் 900 கோடி அமெரிக்க டாலர் கடன் இரு நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதி வங்கிகளுக்கிடையே கையெழுத்திடப்படும் முறைப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கிடைக்கும்.