பி.எம்.இந்தியா
இந்தியாவுக்கும் சோமாலியாவுக்கும் இடையே தண்டனை பெற்ற நபர்களை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் தொடர்ந்து அதனை உறுதி செய்வதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்போது சோமாலியாவில் உள்ள இந்திய கைதிகள் இந்தியாவுக்கு வரவும் அதேபோல இந்தியாவில் உள்ள சோமாலி நாட்டு கைதிகள் அந்த நாட்டிற்கு செல்லவும் வசதி ஏற்படுகிறது. இதனை அடுத்து இந்த கைதிகள் தங்கள் குடும்பத்தினருக்கு அருகில் இருந்து தண்டனை காலத்தின் எஞ்சிய பகுதியைக் கழிக்கவும் பின்னர் அவர்கள் விடுதலையாகும்போது அவர்களது சமூக மறுவாழ்வுக்கும் வசதி ஏற்படுகிறது.
இதே போன்று தண்டனை பெற்றவர்களை பரிமாறிக்கொள்ளும் இருதரப்பு ஒப்பந்தங்களை இந்திய அரசு இங்கிலாந்து, மொரீஷியஸ், பல்கேரியா, பிரான்ஸ், எகிப்து, இலங்கை, கம்போடியா, தென்கொரியா, சவுதி அரேபியா, ஈரான், வங்காளதேசம், பிரேசில், இஸ்ரேல், போஸ்னியா மற்றும் ஹெக்ஸகோவினா, ஐக்கிய அரபு எமிரேட், இத்தாலி, துருக்கி, மாலத்தீவு, தாய்லாந்து, ரஷ்யா, குவைத், வியட்நாம், ஆஸ்திரேலியா, ஹாங்காங், கட்டார், மங்கோலியா, கஜகிஸ்தான், பஹ்ரைன், எஸ்டோனியா ஆகிய நாடுகளுடன் செய்து கொண்டுள்ளது.
பின்னணி:
2004ம் ஆண்டுக்கு முன்னதாக வெளிநாட்டு கைதிகளை அவர்களது சொந்த நாட்டுக்கு மாற்றி எஞ்சியுள்ள தண்டனை காலத்தை அங்கேயே அனுபவிக்க எவ்வித உள்நாட்டு சட்டங்களும் இல்லை. அதேபோல வெளிநாட்டு நீதிமன்றங்களில் சிறைதண்டனை பெற்ற இந்திய வம்சாவளியினரை இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டனை அனுபவிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளும் இல்லை. இத்தகைய கைதிகளை தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி அவர்களது சமூக மறுவாழ்வுக்கும் இந்த பரிமாற்றம் உதவுகிறது,
எனவே 2003ம் ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர்களை சொந்த நாட்டுக்கு குடி பெயரச்செய்யும் சட்டம் இதற்கென இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற நமது நாட்டுடன் இந்த விஷயத்தில் ஒத்துழைக்க விரும்பும் நாடுகளுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது அவசியமாகிறது. இத்தகைய ஒப்பந்தங்கள் அரசிதழ்களில் அறிவிக்கையாக வெளியிடப்படுவது அவசியம்.