பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், “இந்தியா-இஸ்ரேல் தொழில் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க நிதியம் (I4F) அமைப்பதற்காக இந்தியா-இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜூலை 2017-ல் இறுதிசெய்யப்பட்டது.
இந்த நிதியத்துக்கு, இந்தியாவும், இஸ்ரேலும் தங்களது பங்களிப்பாக ஆண்டுக்கு தலா 4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான தொகையை 5 ஆண்டுகளுக்கு வழங்கும். இந்தப் புத்தாக்க நிதியை, கூட்டு வாரியம் நிர்வகிக்கும். இந்த வாரியத்தில் ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த 4 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், இருதரப்பு தொழில் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். இதற்காக புத்தாக்க அல்லது தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட பொருட்கள், சேவைகள் அல்லது நடவடிக்கைகளுக்கான கூட்டுத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். இந்தத் திட்டங்கள் மூலம், நீர், வேளாண்மை, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற பரஸ்பரம் பயனளிக்கக் கூடிய பிரிவுகளில் தொழில்நுட்ப புத்தாக்க நடவடிக்கைகளுக்கு வழிவகை ஏற்படும். இந்த ஒருங்கிணைந்த திட்டங்கள் மூலம், தனியார் தொழில் துறை, நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அமைப்புரீதியான ஆதரவு அளிக்கப்படும்.
கூட்டு நிதியத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப-பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கும். இதற்காக கூட்டாக உருவாக்கப்படும் தொழில்நுட்ப திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க அடிப்படையிலான ஒத்துழைப்பில் முதலீடு செய்யப்படும். இது தேசிய மற்றும் சர்வதேச சந்தையைப் பயன்படுத்திக் கொள்ள இஸ்ரேல்-இந்திய கூட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக இஸ்ரேல் மற்றும் இந்தியாவின் பலத்தை சமநிலைப்படுத்தும். இது கூட்டுத் திட்டங்களை செயல்முறை திறன் (“know-how”) என்ற நிலையிலிருந்து தொழில்நுட்ப திறன் வெளிப்பாடு (“show-how”) என்ற நிலைக்கு மாற்றி, அதனை ஊக்குவிப்பதற்கான ஒருங்கிணைந்த ஆதரவை அளிக்கும். இது இந்தியாவில் சுற்றுச்சூழல் அடிப்படையிலான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப-தொழில்முனைவோர் திறனை வலுப்படுத்தவும், ஊக்கவும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் தொடங்குவோம் திட்டத்துக்கு நேரடியாக பங்களிப்பை வழங்கும்.