பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-கென்யா இடையே வேளாண்மை மற்றும் அது தொடர்பான துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி இந்தத் துறைகளில், வேளாண்மை ஆய்வு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், கால்நடை பண்ணை மற்றும் மீன் வளர்ப்பு, இயற்கை வள மேலாண்மை, அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல், மண் மற்றும் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, நீர்ப்பாசன அமைப்புகளை உருவாக்குதல், ஒருங்கிணைந்த நீர் அமைப்பை உருவாக்குதல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, வேளாண் பண்ணை, இயந்திரங்கள் மற்றும் செயலாக்கம், சுகாதாரம் மற்றும் வேளாண் பயிர்களை பாதுகாப்பதில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது ஆகியவற்றில் ஒருங்கிணைப்பு ஏற்படும்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, இரு நாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டுப் பணிக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவினர், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான விரிவான திட்டங்களை வகுப்பார்கள். மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிப்பார்கள்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்தாகும் நாளில் செயல்பாட்டுக்கு வரும். அதிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக ஏதாவது ஒரு நாடு, 6 மாதங்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்காத பட்சத்தில், தானாகவே இந்த ஒப்பந்தம் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.