பி.எம்.இந்தியா
இந்தியா – ஜெர்மனி விஞ்ஞான தொழில்நுட்ப மையத்திற்கான காலத்தை விரிவாக்குவதற்கு அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கும் ஜெர்மனியின் கல்வி ஆராய்ச்சிக்கான மத்திய அமைச்சகத்திற்கும் இடையே கூட்டுப் பிரகடனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பிரகடனம் இந்த இரு தரப்பு நிறுவனத்தின் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 2017 முதல் 2022 வரை நீட்டிக்க வகை செய்கிறது. இந்த பிரகடனத்தின் படி இந்த அமைப்புக்கான நிதி ஒதுக்கீடு இருதரப்புக்கும் தனித்தனியாக ஆண்டுக்கு 2 மில்லியன் யூரோவிலிருந்து 4 மில்லியன் யூரோவாக உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது. செயல்பாடுகளை இணைத்த நிதி அளிப்புக் கொள்கையின் படி உறுதியளிக்கப்பட்ட நிதி வழங்கப்படும். இதனைக் கொண்டு ஒத்துழைப்புடன் ஆன தொழிற்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உதவி அளிக்கப்படும்.
இரு நாடுகள் சார்ந்த கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் சம்பந்தப்பட்ட கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் புதிய அறிவியல் அடிப்படையை உருவாக்குவதாகவும் ஆராய்ச்சி முடிவுகளை தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு பயன்படுத்த உதவுவதாகவும் அமையும். இந்தப் புதிய பிரகடனத்தின் படி அமையும் நிறுவனம் இரு நாடுகளைச் சேர்ந்த சோதனைக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலைகள் ஒத்துழைப்பு மூலம் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உயர்த்தி வலுப்படுத்த உதவும். மேலும் தேர்ந்தெடுத்த இந்தியா மற்றும் ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சி சோதனைக் கூடங்கள் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவும் நிதியும் வழங்கும். தொழிற்துறை ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களை நடத்த ஆதாரங்களைத் திரட்டுவதற்கும் இந்த நிறுவனம் உதவும்.
பின்னணி :
இந்தியா ஜெர்மனி அறிவியல் தொழில்நுட்ப மையம் இந்த இரு நாடுகளுக்கிடையே 2007 அக்டோபரில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்டது. 2011 முதல் அது செயல்படத் தொடங்கியது. தற்போது இந்த நிறுவனம் கீழ்க்கண்ட தொழிற்துறை கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. (a) உயர் உற்பத்தி தொழில்நுட்பம் (b) உயிரி மருத்துவக் கருவிகள் மற்றும் சுகாதாரம் (c) நானோ தொழில்நுட்பம் (d) மோட்டார் வாகனப் பொறியியல் (e) தண்ணீர் உணர் கருவிகள் (f) தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பம் (g) தகவல் மற்றும் கணிணித் தொழில்நுட்பம்