பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமயிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே (1) “எல்லைப்புறச் சந்தைகள் ” திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக 23.10.2010 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம், (2) 15.05.2012 அன்று கையெழுத்தான ஒப்பந்தத்தில் திருத்தம், (3) சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் வங்காளதேசத்துடன் கலந்தாலோசித்த பிறகு, எல்லைப்புறச் சந்தைகள் திட்டத்துக்கு ஏற்ற இடத்தை தேர்ந்தெடுத்தல் (4) மேற்கூறிய ஒப்பந்தம் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசு துறைகள் மற்றும் வங்காளதேசம் நாட்டுடன் கலந்தாலோசித்து தேவையான திருத்தங்கள் செய்தல், ஆகியவற்றுக்கு, ஒப்புதல் அளித்தது.
எல்லைப்புறச் சந்தைகள் திட்டம், இரு நாட்டு எல்லைப் பகுதியில் வாழும் மக்களின் நலனுக்காகவும், உள்ளூரில் உற்பத்தியாகும் பொருட்களை, உள்ளூர் சந்தைகளில் பணம் மற்றும் பண்டமாற்று முறையில் விற்பனை செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும். இரு தரப்பு வர்த்தகத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், இரு தரப்பிலும் உள்ள விளிம்பு நிலை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இது உதவும்.
பின்னணி :
வங்காளதேச பிரதமர் 10-13 ஜனவரி 2010ல் இந்தியா வருகை தந்திருந்தபோது, எல்லைப்புறச் சந்தைகள் திட்டம், பரிசோதனை முறையில், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், மேகாலயா எல்லை உட்பட, இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளும் வரைமுறைகளின்படி, உள்ளூர் பொருட்களை வர்த்தகம் செய்வது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதை செயல்படுத்துவதற்காக, எல்லைப்புறச் சந்தைகள் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து, 23 அக்டோபர் 2010ல் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கான ஒப்பந்தம் 15 மே 2012ல் கையெழுத்தானது.
கீழ்கண்ட எல்லைப்புறச் சந்தைகள் திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.
1) கலாய்ச்சார் (மேகாலயா – வங்காளதேசம் எல்லை)
2) பாலாத் (மேகாலயா – வங்காளதேசம் எல்லை)
3) கம்லசாகர் (திரிபுரா – வங்காளதேசம் எல்லை)
4) ஸ்ரீநகர் (திரிபுரா – வங்காளதேசம் எல்லை)
கூடுதலாக, திரிபுராவில் மேலும் இரண்டு எல்லைப்புறச் சந்தைகளும், மேகாலயாவில் மேலும் நான்கு எல்லைப்புறச் சந்தைகள் கள் அமைப்பதென்று, இரு நாட்டு அரசுகளும் முடிவெடுத்துள்ளன.