பி.எம்.இந்தியா
எண்ணெய் சேமிப்பு மற்றும் மேலாண்மைக்காக இந்திய பாதுகாப்பு பெட்ரோலிய கையிருப்பு நிறுவனம் (ISPRL) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபுதாபி தேசிய எண்ணெய் கழகம் (ADNOC) இடையே கையெழுத்தான வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் உள்ள இந்திய பாதுகாப்பு பெட்ரோலிய கையிருப்பு நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கில் 0.81 எம்எம்டி அல்லது 58,60,000 மில்லியன் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெயை அபுதாபி தேசிய எண்ணெய் கழகம் சேமித்து வைக்கும்.
சேமித்து வைக்கப்படும் கச்சா எண்ணெயில், சில பகுதி அபுதாபி தேசிய எண்ணெய் கழகத்தின் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். எனினும், பெரும்பாலான பகுதி, முற்றிலும் பாதுகாப்பு விவகாரங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
இந்தியாவும், யூ.ஏ.இ – யும் பாதுகாப்புத் துறையில் கூட்டாளிகளாக உள்ளன. அபுதாபி தேசிய எண்ணெய் கழகம் மேற்கொள்ளும் முதலீடு, முதலீட்டுக்கான உயர்மட்டக் குழுவின் கீழ், யூ.ஏ.இ. மேற்கொள்ளும் மிகப்பெரும் முதலீடு ஆகும். மேலும், இந்தியாவில் எரிசக்தி துறையில் யூஏஇ மேற்கொள்ளும் முதலாவது முதலீடு ஆகும்.
***