பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உணவு கொள்முதல் செயல்பாடுகளுக்காக பஞ்சாப் மாநில அரசுக்கு விருப்ப உரிமை அடிப்படையிலான உணவு ரொக்க கடன் கணக்குகளை (2014-15 அறுவடை காலம் வரை) தீர்ப்பதற்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் வழங்கப்பட்டது. செலவுகள் துறையின் இந்த பரிந்துரைக்கு (வர்த்தக பரிமாற்றம்) விதிகள் 1961-ன் 12-வது விதியின் கீழ், ஜனவரி 2, 2017-ல் பிரதமர் ஒப்புதல் அளித்தார்.
விருப்ப கடன் விவகாரங்களில் விரைந்து பணத்தை செலுத்துவதன் மூலம், மாநிலத்தில் உள்ள ஏராளமான விவசாயிகளுக்கு உணவுக் கடன்களை வங்கிகளால் வழங்க முடியும். மேலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், உணவுக் கொள்முதல் நடவடிக்கைகளை தடையில்லாமல் தொடர்ந்து செயல்படுத்த முடியும். குறிப்பிட்ட கால கடன்களை பஞ்சாப் அரசு வழங்கி, நிலுவையில் உள்ள ரொக்க கடன் வரம்பு (CCL) கணக்குகளை சரிக்கட்டுவதன் மூலம், வட்டி செலுத்த வேண்டியது மிச்சமாகும். இது மூலதன செலவுகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
பஞ்சாப் அரசின் உணவு கொள்முதல் செயல்பாடுகளுக்கான விருப்ப உரிமை ரொக்க கடன் கணக்குகள் (2014-15 அறுவடை காலம் வரை) கீழ்க்கண்டவாறு தீர்க்கப்படுகின்றன.
அ). கரீப் சந்தைப்படுத்துதல் காலம் 2014-15 வரை, ரொக்க கடன் கணக்குகளில் பஞ்சாப் அரசு செலுத்த வேண்டிய சுமார் ரூ.31,000 கோடி நிலுவைத் தொகையை, குறிப்பிட்ட கால கடனாக மாற்றிக் கொள்ளலாம். இந்தத் தொகையை, அரையாண்டுகளுக்கு ஒரு முறை வீதம், 20 ஆண்டுகளுக்கு திரும்ப செலுத்தலாம். இதில், முன்கூட்டியே செலுத்திக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. கடன் வழங்குவதற்கான நிபந்தனைகள், ரிசர்வ் வங்கி மற்றும் கடன் வழங்கும் வங்கிகளின் விதிமுறைகளின்படி இருக்கும்.
ஆ). கடன் தொகை அளவு, மார்ச் 31, 2015-ல் நிலுவையில் இருந்த தொகைக்கு இருக்கும். உணவு தானிய கையிருப்பு அளவுடன் கணக்கிடப்பட மாட்டாது. உணவு மற்றும் பொது விநியோகத் துறை, பஞ்சாப் மாநில அரசு, இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, கடன் அளவை பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு இறுதிசெய்யும்.
இ). 2015-20 காலகட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதி வழிமுறை குறித்து 14-வது நிதி ஆணையம் பரிந்துரைந்துள்ளது. இதில், அனைத்து மாநிலங்களுக்கும் நிதிப் பற்றாக்குறையானது, மாநிலத்தின் ஆண்டு மொத்த மாநில உற்பத்தியில் 3%-க்குள் இருக்க வேண்டும். நடப்பு நிதியாண்டு 2016-17-ல் பஞ்சாப் அரசுக்கு வழங்க பரிந்துரைக்கப்படும் மேற்குறிப்பிட்ட கடன் தொகை, பஞ்சாப் அரசின் 2016-17-ம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை வரம்பில் சேர்க்கப்பட மாட்டாது.
ஈ). விருப்ப உரிமை கணக்குகளை நீண்டகால கடனாக மாற்றிக் கொண்ட பிறகு, இந்த நீண்டகால கடன்களை திருப்பி செலுத்துவதற்கு மட்டும், பத்திரங்களை பஞ்சாப் மாநில அரசு வெளியிடலாம். இது வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பொருத்தது. பத்திரங்கள் வெளியிடப்பட்ட அதே ஆண்டில், கடனை முடித்துக் கொள்வதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்கும்.
உ). குறிப்பிட்ட காலத்துக்குள், கடன் தொகை அல்லது வட்டியை பஞ்சாப் அரசு செலுத்தத் தவறினால், அந்தத் தொகையை கழித்துக் கொள்ள இந்திய அரசுக்கு தடையில்லாத அதிகாரம் வழங்கும் வகையில், இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தை பஞ்சாப் அரசு மேற்கொள்ளும். செலுத்தத் தவறிய தொகையை, மத்திய வரியில் மாநிலங்களின் பங்குத் தொகையிலிருந்து எடுத்து, பாரத ஸ்டேட் வங்கியின் கூட்டமைப்புக்கு செலுத்தப்படும்.
ஊ). இது விருப்ப உரிமை கணக்குகளில் 2014-15-ம் ஆண்டு வரையான நிலுவைத் தொகையை சரிக்கட்டுவதற்கான ஒரு முறை நடவடிக்கையாக இருக்கும். எதிர்காலத்தில் குறிப்பிட்ட ஆண்டுகளில் ரொக்க கடன் வரம்பு நிலுவை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், ரொக்க கடன் தொகையை சரிசெய்வதற்கு ஆண்டு பட்ஜெட்டில் உரிய வழிமுறைகளை பஞ்சாப் அரசு உருவாக்கலாம். மேலும், குறிப்பிட்ட கால கடனை, தனது சொந்த ஆதாரங்கள் மூலம் திருப்பி செலுத்துவதற்காக மானியத் தொகையை குறைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும்.