Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் சாம்சங் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் சாம்சங் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் சாம்சங் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் சாம்சங் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


கொரியாவின் அதிபரும் எனது நண்பருமான திரு. மூன் ஜே இன், சாம்சங் துணைத் தலைவர் திரு. ஜாய் ஒய். லீ, கொரியா – இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் இங்குள்ள அனைத்துப் பிரமுகர்களே,

நொய்டாவில் உள்ள இந்த சாம்சங் தொழிற்சாலைக்கு எனது நண்பர் அதிபர் மூன்-உடன் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. இந்தப் புதிய மொபைல் உற்பத்திப் பிரவு நொய்டாவுக்கும், உத்தரபிரதேசத்திற்கும் பெருமைக்குரிய விஷயமாகும். இந்தப் புதிய பிரிவிற்காக சாம்சங் மற்றும் அதன் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் திசையில் இன்றைய நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த ரூ.5,000 கோடி முதலீடு என்பது இந்தியாவில் சாம்சங்கின் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கு மட்டுமின்றி, இந்தியா – கொரியா இடையேயான உறவுகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். சாம்சங்கின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இந்தியாவில் அமைந்துள்ளது. தற்போது இந்த உற்பத்தித் தொழிற்சாலை எங்களுக்கான பெருமிதத்தை மேலும் விரிவுபடுத்தும்.

நண்பர்களே,

வர்த்தக சமூகத்திலிருந்து வருவோரிடம் நான் எப்போது பேசினாலும், அப்போதெல்லாம் அவர்களிடம் நான் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வதுண்டு. இந்தியாவின் நடுத்தர வகுப்பினரின் ஏதாவது ஒரு வீடு, கொரியாவின் ஒரு பொருளையாவது கொண்டிராமல் இருக்காது என்பதுதான் அது. இந்தியர்களின் வாழ்வில் சாம்சங் தமக்கென சிறப்பான இடத்தை நிச்சயமாக பிடித்துள்ளது. குறிப்பாக, உங்களின் செல்பேசிகள். அவை, அதிவேகமாக வளர்ந்து வரும் நவீன செல்பேசி சந்தையில் உலகத் தலைமையைப் பெற்றுள்ளது. சாம்சங் தலைமையிடம் நான் பேசும்போதெல்லாம் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பேன். நொய்டாவில் இன்று இந்தத் திட்டம் வந்திருப்பது அதன் பிரதிபலிப்புதான். சாமானிய மக்களும் தங்களின் வாழ்வை எளிதாக நடத்துவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் இன்று முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் தற்போது சுமார் 40 கோடி நவீன செல்பேசிகள் பயன்பாட்டில் உள்ளன. 32 கோடி மக்கள் அகண்ட அலைவரிசையை பயன்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த செலவில் இணையதளத் தகவல்கள் கிடைக்கின்றன. நாட்டில் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகள் கண்ணாடி இழை தொலைத் தொடர்பு வசதியைப் பெற்றுள்ளன. இவையெல்லாம் நாட்டில் டிஜிட்டல் புரட்சி நடைபெறுவதற்கான குறியீடுகளாகும்.

நண்பர்களே,

குறைந்த விலையில் செல்பேசிகள் கிடைப்பது விரைவான இணையதளம், குறைந்த செலவில் இணையதளத் தகவல் ஆகியவற்றால், விரைவான – வெளிப்படையான சேவை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மின்கட்டணம், குடிநீர் வரி செலுத்துவதாக இருந்தாலும் அல்லது பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையாக இருந்தாலும் அல்லது வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதியமாக இருந்தாலும், அனைத்து வசதிகளும் இணையதளம் மூலம் கிடைக்கின்றன. நாடுமுழுவதும் பரவலாக உள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்கள் கிராம மக்களுக்கு சேவைகளை வழங்குகின்றன. ஏழை எளிய மற்றும் நடுத்தர வகுப்பு இளைஞர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், நகரங்களில் வைஃபை வசதி இலவசமாக கிடைக்கிறது.

இதுமட்டுமின்றி, உற்பத்தி செய்வோரிடமிருந்து ஜி.ஈ.எம் எனப்படும் அரசு ஈ-சந்தை மூலம் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவினருக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், அரசு கொள்முதலில் வெளிப்படைத் தன்மையையும் இது அதிகரிக்கிறது.

நண்பர்களே,

தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. பீம் செயலி, ரூபே அட்டைகள் காரணமாக, பணப் பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாகிவிட்டன. ஜூன் மாதத்தில் சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் பீம் செயலி மூலம் நடந்துள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி பீம் செயலி மற்றும் ரூபே அட்டை குறித்த ஆர்வம் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன், இந்த இரண்டு வசதிகளை சிங்கப்பூரில் தொடங்கி வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்து. இத்தகைய சூழ்நிலையில், இன்று நடைபெறும் இந்த நிகழ்வு, இந்திய குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதில் பங்குவகிப்பது மட்டுமின்றி, இந்தியாவில் உற்பத்தி என்ற திட்டத்திற்கும் உத்வேகத்தை அளிக்கும்.

நண்பர்களே,

இந்தியாவில் உற்பத்தி என்பதை வலியுறுத்துவது பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதி மட்டுமின்றி, கொரியா போன்ற நட்பு நாடுகளுடன் உறவுகளை உறுதிப்படுத்துவதற்கும்தான். சாம்சங் போன்ற நம்பிக்கைக்குரிய நிறுவனத்திற்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதோடு, புதிய இந்தியாவின் வெளிப்படையான வர்த்தக கலாச்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்ற உலகின் ஒவ்வொரு வர்த்தகருக்கும் திறந்த அழைப்பாகவும் இது உள்ளது. இந்தியாவின் வளரும் பொருளாதாரமும், விரிவடைந்து வரும் புதிய – நடுத்தர வகுப்பும் முதலீட்டிற்கு ஏராளமான வாய்ப்புகளைத் தரும் இந்த முயற்சி ஆதரவைப் பெற்றிருப்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது, உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மொபைல் உற்பத்தியைப் பற்றி பேசினால், இந்தியா இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. நான்காண்டுகளுக்கு முன் வெறும் இரண்டாக இருந்த மொபைல் உற்பத்திப் பிரிவுகளின் எண்ணிக்கை, கடந்த நான்காண்டுகளில் 120ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் நொய்டாவில் மட்டும் 50 பிரிவுகள் இருப்பது திருப்தியான விஷயமாகும். இவற்றின் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் சாம்சங் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்த தேசத்திலும் நீங்கள் சுமார் 70,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பைத் தந்திருக்கிறீர்கள். இவற்றில் சுமார் 5,000 வேலைவாய்ப்பு நொய்டாவில் கிடைத்துள்ளது. புதிய தொழில் பிரிவின் மூலம், 1,000 பேர் வேலைவாய்ப்பைப் பெறப் போகிறார்கள். இங்கு அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு மிகப் பெரிய ஒன்று என எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு கோடி செல்பேசிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்தப் பிரிவில் தயாரிக்கப்படும் செல்பேசிகளில் 30 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும். உலகின் பல்வேறு நாடுகளுக்கு அவை ஏற்றுமதியாகும். இது நிச்சயமாக உங்களின் உலகச் சந்தையை மேலும் வலுப்படுத்தும். கொரிய தொழில்நுட்பத்தையும், இந்தியாவின் தயாரிப்பு மற்றும் மென்பொருள் உதவியையும் பயன்படுத்தி, உலகச் சந்தைக்கு மிகச் சிறந்த பொருட்களை நாங்கள் தயாரித்து அளிப்போம் என்பது இதன் பொருளாகும். இது நமது இரண்டு நாடுகளின் பலமாக இருப்பதோடு, இதுவே நம்மால் பகிர்ந்து கொள்ளப்படும் தொலைநோக்குத் திட்டமாகும்.

சாம்சங்கின் ஒட்டுமொத்த குழுவிற்கு மீண்டும் ஒருமுறை நான் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இங்கு நடைபெறும் நிகழ்வுக்கு என்னை அழைத்து, பங்கேற்கச் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.