Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவப் பராமரிப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவப் பராமரிப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவப் பராமரிப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு மருத்துவப் பராமரிப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


அமைச்சரவையில் எனது சகாக்களான திரு.ஜே.பி.நட்டா அவர்களே, திரு.அஸ்வினி சவ்பே அவர்களே, திருமதி.அனுபிரியா பட்டேல் அவர்களே, மேடையில் அமர்ந்துள்ள திரு.ரன்தீப் குலேரியா அவர்களே, திரு..எஸ்.ஜா அவர்களே, டாக்டர் ராஜேஷ் சர்மா அவர்களே மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களே,

தில்லி மக்களுக்கு, தில்லிக்கு வருபவர்களுக்கு, மற்றும் இங்குள்ள அனைவருக்கும் மருத்துவச் சிகிச்சை தொடர்பாக இந்த நாள் ஒரு சிறப்பான நாளாகும். தங்கள் வாழ்க்கையின் இன்னல்களை வெற்றிக் கொள்ளவும், நோய்களை எதிர்த்துப் போராடவும் ஏழைகள், சாதாரண மக்கள், கீழ்நிலை நடுத்தர வகுப்பினர், நடுத்தர வகுப்பினர் ஆகியோருக்கு உதவும் வகையில் சில அமைப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சில மணி நேரங்களுக்கு முன்னதாக ரூ.1700 கோடி மதிப்பிலான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனையடுத்து  தில்லியில் 2 முக்கிய மருத்துவமனைகளான எய்ம்ஸ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவ மனைகளில் 1800 படுக்கைகள்  புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நண்பர்களே,

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு தில்லி வளாகங்கள் அனைத்திலும் திறன் அதிகரிக்கப்படும் வகையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இன்று ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தேசிய வயது முதிர்ந்தோர் மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 200 படுக்கை வசதிகள் இருக்கும். இதனை அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த மையத்தில் மூத்த குடிமக்களுக்கு அநேக வசதிகள் இருக்கும். இந்த மையத்தில் முதிய வயது அறிவியல் ஆராய்ச்சி மையம் அமைந்திருக்கும். இந்த ஆராய்ச்சி மையத்தில் வயது முதிர்ந்தோர் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காணப்படும். சஃப்தர்ஜங் மருத்துவமனையில் ரூ.1300 கோடிக்கும் கூடுதலாக செலவு செய்து அந்த மருத்துவமனையின் வசதிகளை நவீனமாக்கும் பணிகளும் நடைபெற்றுள்ளன. இதன்படி அவசர சிகிச்சை பகுதியில் அதி சிறப்பு மருத்துவ சேவைகள் பகுதி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப்பட்டுள்ளது. சஃப்தர்ஜங் மருத்துவமனை நாட்டிலேயே மிகப் பெரிய அவசர சிகிச்சை மருத்துவமனையாக மாறும். மருத்துவ அவசர சிகிச்சைகளுக்கென புதிதாக 600 படுக்கைகள் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்படும்.

நண்பர்களே,

இன்று தொடங்கி வைக்கப்பட்ட 5 திட்டங்களில் மின்சாரக் கட்டமைப்பு ஓய்வு இல்லமும் ஒன்று. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சமுதாயத்தின் மீது அவர்களுக்குள்ள பொறுப்புகளை உணர்த்துவதில் இது சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இந்த ஓய்வு இல்லம் நோயாளிகளுக்கு மட்டுமின்றி அவர்களை பராமரிக்க வரும் உதவியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நண்பர்களே,

மக்களின் உயிரை காப்பாற்றுவதில் உடனடி சிகிச்சைகளின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் தில்லி சாலை போக்குவரத்து நெரிசல் இதற்கு ஒரு இடையூறாகவே உள்ளது. முன்பெல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கும் இதர மருத்துவ மையங்களுக்கும் இடையே நோயாளிகளை கொண்டு செல்வதும், மருத்துவர்கள் சென்று வருவதும் பெரும்  பிரச்சனையாக இருந்து வந்தது. இந்தப் பிரச்சனைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மத்திய கட்டிடத்திற்கும், ஜெய் பிரகாஷ் நாராயண் அவசர சிகிச்சை மையத்திற்கும் இடையே இப்பிரச்சனைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.  இதற்கான 1 கிலோ மீட்டர் நீள சுரங்கப்பாதையை சில காலம் முன்னதாக திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த சுரங்கப் பாதை நோயாளிகள், அவர்களது உறவினர்கள், மருத்துவர்கள் ஆகியோர் இடையூறு இன்றி சென்று வரவும் முக்கிய மருந்துகள், கருவிகள் ஆகியவற்றை கொண்டு செல்லவும் மிகவும் உதவிகரமாக உள்ளன.

நண்பர்களே,

இந்தியா போன்ற மிகப் பெரிய வளரும் நாடுகளில் குறைந்த செலவிலான, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய, பாதுகாப்பான, நவீன மருத்துவ வசதிகளை உருவாக்குவது நமது பெரும் பொறுப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த 4 ஆண்டுகளில் பொது சுகாதார பராமரிப்புக்கு புதிய உத்வேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒவ்வொரு கொள்கை முடிவும் தரமான, எளிதில் கிடைக்கக் கூடிய, குறைந்த விலையிலான மருத்துவ வசதிகளை ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டவை. நாட்டில் மத்திய அரசும், மாநில அரசுகளும் மருத்துவ சேவைகள் சார்ந்த நவீன அடிப்படை வசதிகளை உருவாக்கி வருகின்றன. மத்திய அரசின் தொடர்ந்த முயற்சிகள் காரணமாக மருத்துவமனைகளில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை முறையாக கண்காணிப்பதன் மூலமும், தடுப்பூசி திட்டத்தில் மேலும் 5 புதிய மருந்துகள் சேர்க்கப்பட்டிருப்பதாலும் பேறு காலத்தின் போது ஏற்படும் இறப்பு வீதமும், பச்சிளங் குழந்தைகள் இறப்பு வீதமும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

பெரிய நகரங்களிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மருத்துவ அடிப்படை வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதே போன்ற வசதிகள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற வகையிலும் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கென மத்திய அரசு இரண்டு விரிவான நிலைகளில் செயல்பட்டு வருகிறது. முதலாவதாக தற்போதுள்ள மருத்துவமனைகளில் மேலும் புதிதாக வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இரண்டாவதாக நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் மருத்துவ சேவைகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

நண்பர்களே,

கடந்த 4 ஆண்டுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை சுதந்திரத்திற்கு பின் 70 ஆண்டுகளில் அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட கூடுதலாகும். 13 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 8 மருத்துவமனைகளுக்கான பணிகள் தொடங்கி உள்ளன. இது தவிர நாடெங்கும் உள்ள 15 மருத்துவக் கல்லூரிகளில் அதி சிறப்பு மருத்துவமனைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

நண்பர்களே,

குறைந்த செலவு பிடிக்கக் கூடிய போதுமான சிறந்த வசதிகள், கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவர்கள், படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை உள்ளடக்கிய புதிய இந்தியாவில் நவீன மருத்துவ பராமரிப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இலக்கை கருத்தில் கொண்டு மருத்துவக் கல்வித் துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 58 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 24 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. 3 மக்களவைத் தொகுதிகளுக்கு குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் நாடெங்கும் 25 ஆயிரம் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையை அரசு மேலும் வெளிப்படையானதாக செய்துள்ளது.

நண்பர்களே,

இந்த அரசின் தொலைநோக்கு வெறும் மருத்துவமனைகள், நோய்கள், மருந்துகள் அல்லது நவீன வசதிகள் ஆகியவற்றுடன் நின்று விடுவதில்லை. இதே நோக்கத்திற்காக அதாவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவச் சிகிச்சையை உறுதி செய்து அவர்கள் நோய்வாய்ப்படும் காரணங்களை குறைப்பதற்காக தேசிய மருத்துவக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பராமரிப்பு என்பதை சுகாதார அமைச்சகம்தான் கவனிக்க வேண்டும் என்பதை மாற்றியமைத்து இந்த முக்கியப் பணியில் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தையும் ஈடுபடுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடிநீர் அமைச்சகமும் இதில் இணைக்கப்படுகிறது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இதில் தொடர்புபடுத்தப்படும். இவைகள் அனைத்தும் நமது பாரம்பரிய மருத்துவச் சேவைகள் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவை பெறும். ஏழ்மைக்கும், நோய்களுக்கும் உள்ள தொடர்பை கருத்தில் கொண்டு அதற்கேற்ப அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. இவற்றை அமல்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஏழ்மையின் முக்கிய காரணமே நோய்கள்தான். ஆகையால் நோயை கட்டுப்படுத்துவது என்பது ஏழ்மையை குறைப்பது என்றே பொருள்படும். இந்த வகையில் ஓய்வில்லாத முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கழிவறைகள் கட்டுதல், இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் தொலைதூரப் பகுதிகளிலும் தடுப்பு மருந்து வழங்குதல், ஊட்டச்சத்து தேசிய இயக்கம், ஆயுஷ்மான் இந்தியா போன்ற மிகப் பெரிய திட்டங்கள் ஆகியன ஏழைகள் நோய் சிகிச்சைக்காக செலவிடும் பணத்தின் அளவை குறைத்துள்ளன. முன்தடுப்பு மற்றும் குறைந்த செலவிலான மருத்துவ பராமரிப்பு பணிகளை பொறுத்தவரை நாடு இப்போது போல என்றைக்கும் இவ்வளவு கவனம் செலுத்தியது இல்லை.

இந்த வகையில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் ஒரு முக்கியமான திட்டமாகும். இதன்படி 1 லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் அதாவது ஒவ்வொரு மேஜர் பஞ்சாயத்திலும் ஆரோக்கியம் மற்றும் உடல்நல மையங்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. எதிர்காலத்தில் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான நவீன வசதிகள் இந்த மையங்களில் இடம் பெற்றிருக்கும். நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்கள் இவற்றால் பெரிய அளவில் பயன் பெற உள்ளனர். கடுமையான நோய்களிருந்து ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினரை காப்பாற்றுவதற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக வழங்குவதற்கான திட்டம் செயல்படும் நிலையில் உள்ளது. இந்தத் திட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான மாநிலங்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். தனியார் மருத்துவமனைகளுடனும் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக சொல்லப் போனால் பல்வேறு விஷயங்கள் குறித்து அக்கறை கொண்ட பல்வேறு தரப்பினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். வெகு விரைவில் உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நாட்டில் செயல்பட உள்ளது.

நண்பர்களே,

இந்த திட்டம் ஏழை மக்களுக்கு வாழ்வு அளிப்பதோடு மட்டுமின்றி மருத்துவத் துறையில் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புக்களை உருவாக்கும் புதிய புரட்சியையும் ஏற்படுத்த உள்ளது. இந்த திட்டம் காரணமாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவமனைகள் எதிர்காலத்தில் மிகப் பெரிய கட்டமைப்பை ஏற்படுத்த உள்ளன. மருத்துவ செலவினங்கள் சுமையை எவராவது ஏற்றுக் கொள்ளும் நிலையில் நோயாளிகள் மருத்துவமனைக்கு கட்டாயம் வருவார்கள் என்ற நிலையில் மிகப் பெரிய புதிய மருத்துவமனைகள் கட்டமைப்பு ஏற்படுவது இயல்பானதுதான்.  முன்னதாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மருத்துவமனைக்கு செல்வதை மக்கள் தட்டிக் கழித்து வந்தனர். தற்போது தங்களுக்கான கட்டணங்கள் கிடைப்பது உறுதி என்ற நிலையில் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தங்களது சேவைகளை வழங்க முன்வருவார்கள். ஒருவகையில் பார்த்தால் மனிதவள மேம்பாடு, மருத்துவத் துறை, அடிப்படை வசதி மேம்பாடு, ஆரோக்கியத்தை முன்னிறுத்தும் சமுதாயம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் அமைப்பினை ஏற்படுத்தி உள்ளோம். இந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் கட்டாயம் உயரும். ஒரு மருத்துவருடன் பல்வேறு பணியாளர்கள் இணைந்து செயல்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மேலும் பெரிய நகரங்களில் நவீன மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் குறைந்து விடும். மக்கள் இத்தகைய சேவைகளை தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே பெற முடியும்.

நண்பர்களே,

இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடெங்கும் உள்ள பயனாளிகளுடன் நான் நேரடியாக தொடர்பு கொண்டு குறைந்த செலவிலான மருத்துவ பராமரிப்புத் திட்டத்தினால் கடந்த 4 ஆண்டுகளில் சாதாரண நபர் எவ்வளவு நன்மை அடைந்துள்ளார் என்பதை அறிந்துள்ளேன். என்னுடைய மதிப்பீட்டின்படி 3 லட்சம் மையங்களில் இருந்த சுமார் 30 அல்லது 40 பேருடன் நான் பேசியுள்ளேன். இந்த பேச்சுக்களின் போது ஒரு விஷயம் தெளிவாக தெரிய வந்துள்ளது. கீழ்நிலை நடுத்தர வகுப்பினர், ஏழை மக்களின் மருத்துவ செலவினம் வெகுவாக குறைந்துள்ளது என்பதுதான் அது.

நண்பர்களே,

இதற்கான காரணங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். அரசின் விலைக்கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் சுமார் 1100 அத்தியாவசிய மருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் குடும்பங்களின் மருந்து செலவீனத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக ஓராண்டில் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சேமிக்கப்படுகிறது. நாடெங்கும் 3,600 பொது மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 700-க்கும் கூடுதலான மருந்துகள், 150-க்கும் அதிகமான அறுவை சிகிச்சை கருவிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அம்ரித் என்ற மருந்துக் கடைகளை 50 சதவீத குறைந்த விலை மருந்துகளை சுமார் 75 முதல் 80 லட்சம் நோயாளிகள் வாங்கி பயனடைந்துள்ளனர். மேலும் ஸ்டென்டுகள், செயற்கை கால்மூட்டுகள் ஆகியவற்றின் விலைக் குறைப்பு காரணமாக நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் சுமார் ரூ.5500 கோடி மிச்சப்படுத்தியுள்ளனர். இவற்றின் விலை தற்போது மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. மேலும் பல்வேறு மருந்துகளின் விலைகள் ஜி.எஸ்.டி. அமலாக்கம் காரணமாக வெகுவாக குறைந்துள்ளன. இதனால் மக்கள் பெருமளவு பயனடைந்துள்ளனர். நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏழைகளுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதுவரை இரண்டரை லட்சம் நோயாளிகள் இந்த சேவையை பயன்படுத்தி உள்ளனர். முன்னதாக இலவச டயாலிசிஸ் சேவையை பயன்படுத்துவதற்கு ஏழை மக்கள் 100 அல்லது 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இவ்வளவு தொலைவு பயணம் செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் பெரிய தொகைகளை செலவிட்டு டயாலிசிஸ் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தற்போது இந்த வசதியை மக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே பெறுகிறார்கள். தற்போது இந்த டயாலிசிஸ் வசதி காரணமாக ரூ.1500 முதல் ரூ.2000 வரை அவர்கள் மிச்சப்படுத்துகிறார்கள். இத் திட்டத்தின் கீழ் சுமார் 25 லட்சம் இலவச டயாலிசிஸ் சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளனமேலும் மருத்துவ தடுப்பு பராமரிப்பு அமைப்புகளில் யோகாவும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. முன்னதாக யோகிகளை கேலி செய்து வந்த மக்கள் தற்போது யோகாவுக்கு அகில உலகத்திலும் முக்கிய இடத்தை ஏற்படுத்தி உள்ளனர். யோகா என்பது சாதாரணமான இன்பம் துய்போரை யோகிகளாக மாற்றி விடும் என்று என்னால் கூற முடியாது. எனினும் யோகா ஒருவர் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கும் என்று உறுதிபடக் கூற முடியும். இன்றைய நிலையில் யோகா உலகெங்கும் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. சில தினங்களுக்கு முன்னதாக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதை நாம் கண்டோம். எய்ம்ஸ் மருத்துவமனையிலும் கூட யோகா பற்றிய அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது பற்றி என்னிடம் சொல்லப்பட்டது. எனது மருத்துவர் நண்பர்கள் பலர் யோகாவை செய்து வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

நண்பர்களே,

குடிமக்கள் ஒவ்வொருவரும் மருத்துவச் சேவைகள் வழங்குவது அரசின் நோக்கம். ஆனால் உங்களது அதாவது மொத்த மருத்துவத் துறையினரின் ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாமல் இது சாத்தியமில்லை. நாடு புதிய இந்தியா என்பதை நோக்கி முன்னேறி வரும் நிலையில் மருத்துவ சேவை துறையில் சம்பந்தப்பட்டவர்கள் சில தீர்மானங்களை, இலக்குகளை ஏற்க வேண்டும். நான் ஒரு மருத்துவர் அல்லது மருத்துவப் பணியாளர் என்றால் நமது  சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் 2022-ல் இந்த இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும். இத்தகைய சூழல்தான் உருவாக்கப்பட வேண்டும். 2025 வாக்கில் இந்தியாவை தொழுநோய் அற்ற நாடாக மாற்றுவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தொழுநோயாளிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு மாதந்தோறும் அவர்களுக்கு ரூ.500 நிதியுதவி அளிக்கப்படும்.

நண்பர்களே,

உலகின் இதர நாடுகள் தொழுநோய் அற்றவையாக மாறுவதற்கு 2030 ஆம் ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளன. ஆனால் நாம் இந்த நிலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் நிறைவேற்ற வேண்டும். உலகம் 2030-க்குள் தொழுநோய் அற்றதாக மாற விரும்புகிறது. ஆனால் நாம் 2025-க்குள் இந்த இலக்கை அடைய விரும்புகிறோம். இந்த இலக்கை இவ்வளவு விரைவில் இந்தியா அடைய முடியுமா என்று உலகம் முழுவதும் கவனித்து வருகிறது. என்னை பொறுத்தவரை நாட்டின் மருத்துவத் துறையில் முழு நம்பிக்கை உள்ளது. இது தொடர்பான சவால்களை மருத்துவத் துறையினர் முழு அர்ப்பணிப்புடன் எதிர்கொண்டு நாட்டிற்கு புகழ் சேர்ப்பார்கள் என நம்புகிறேன். இந்த வகையில் பேறு கால இறப்பு வீதம், பச்சிளங் குழந்தை இறப்பு வீதம் ஆகியனவும் முக்கியமான பிரச்சனைகள். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் நாடு பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது.

எனினும் பேறு கால இறப்பு வீதம்,பச்சிளங் குழந்தை இறப்பு வீதம் ஆகியவற்றை குறைக்க நாம் அனைவரும் பெரிய முயற்சிகளை எடுக்க வேண்டியது அவசியம். பிரதமர் பேறு கால பாதுகாப்பு இயக்கம், பிரதமர் அன்னையர் வந்தனை திட்டம், தேசிய ஊட்டச்சத்து இயக்கம் ஆகியன மக்கள் இயக்க அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இவற்றை வாழ்க்கை இயக்கங்களாக மாற்றுவதற்கான பணிகளை செய்ய வேண்டும். மக்கள் இயக்கமாக இவை உருவெடுக்க பெரும் எண்ணிக்கையிலான மக்களை இவற்றுடன் தொடர்புபடுத்த வேண்டும். அப்போதுதான் விரைவாக எதிர்பார்த்த விளைவுகள் ஏற்படும். இந்த நம்பிக்கையுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

நண்பர்களே,

நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை சூழல் அதிகரித்து வருவதை கண்டு மென்மேலும் மக்கள் தேச நிர்மாணத்திற்கு பங்களிக்க முன்வருகிறார்கள். தாங்கள்  வரியாக செலுத்தும் ஒவ்வொரு பைசாவும் நாட்டின் நலனுக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையின் விளைவுகளை சமுதாயத்தின் ஒவ்வொரு நிலையிலும் நாம் காண முடிகிறது. நாட்டு மக்களுக்கு செங்கோட்டையிலிருந்து சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்குமாறு நான் கோரிக்கை விடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனை ஏற்று 1 கோடியே 25 லட்சம் குடும்பங்கள் தங்களது சமையல் எரிவாயு மானியங்களை விட்டுக் கொடுப்பதாக அறிவித்தனர். இதுவரை மக்கள் தங்களுக்கான உரிமைகளை விட்டுக் கொடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்று நம்பப்பட்டு வந்தது. இந்த நடத்தை இயல்பானதும் கூட. நீங்கள் விமானத்தில் பயணம் செய்யும் போது உங்களுக்கு அடுத்த இருக்கை காலியாக இருந்தால் விமானம் புறப்பட உள்ள நிலையிலும் அந்த இருக்கைக்கு எவரும் வரவில்லை என்றால் அது உங்களது இருக்கை இல்லை என்ற நிலையிலும் அந்த இருக்கையில் உங்களது மொபைல் போன், புத்தகங்கள் போன்றவற்றை வைத்து விடுவீர்கள். அதே சமயம் பயணி ஒருவர் வந்து அதில் அமர்ந்தால் அந்த இருக்கையை விட்டுக் கொடுக்க இயலாது என்பது போன்று உணருவீர்கள். அதனை விட்டுக் கொடுக்க தயக்கம் காட்டுவீர்கள். இத்தகைய மனநிலை 25 கோடி குடும்பங்களிடம் உள்ளதுஆனால் 1 கோடியே 25 லட்சம் குடும்பங்கள் நான் ஒருமுறை கேட்டுக் கொண்டவுடன் தங்களது எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தனர். அப்போது நான் நாட்டின் வலுவையும், மனநிலையையும் தெளிவாக காண முடிந்தது. மற்றொரு விஷயத்தையும் உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். மூத்த குடிமக்கள் தங்களது பயணக் கட்டணத்தில் சலுகைககள் பெறுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதே போல சில தினங்களுக்கு முன்னதாக நானே அறிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு அறிவிப்பை ரெயில்வே அதிகாரிகள் வெளியிட்டனர். அதாவது முன்பதிவு படிவத்தில் தங்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்க முன்வரும் மூத்த குடிமக்கள் என்ற களத்தை சேர்த்துள்ளனர். இந்த ஒரு களத்தை ரெயில்வே முன்பதிவு படிவத்தில் சேர்த்து விட்ட எளிய நடவடிக்கை மூலம் கடந்த 9 மாதங்களில் 42 லட்சம் மூத்த குடிமக்கள் தங்களது பயணக் கட்டணங்களை விட்டுக் கொடுத்துள்ளனர் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம். இதுதான் நமது நாட்டின் பலம். இதுதான் நமது நாட்டின் சூழல். ஏழ்மை நிலையில் உள்ள கருவுற்ற பெண்களுக்கு மாதந்தோறும் 9-ந் தேதி அன்று உதவ முன்வர வேண்டும் என்று நாட்டில் உள்ள மருத்துவர்களுக்கு ஒருமுறை வேண்டுகோள் விடுத்தேன். மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்து ஆலோசனைகள் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இதனையடுத்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இதனை செயல்படுத்த முன் வந்தனர். இந்த மருத்துவர்கள் தங்களது மருத்துவமனைகளில் இதனை அறிவிக்கும் வகையில் மாதந்தோறும் 9-ந் தேதி அன்று கருவுற்ற பெண்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என்று எழுதி வைத்தனர். இதனையடுத்து கோடிக்கணக்கான சகோதரிகள் பயனடைந்தனர். இன்னும் அநேக மருத்துவர்கள் இதனை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று விரும்புகிறேன். நாட்டின் சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் நாட்டினை இரண்டு இரண்டு படிகளாக உயர்த்திச் செல்ல வேண்டும். பிரதமரின் கருவுற்ற பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் 1 கோடியே 25 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஒத்துழைப்பை நல்கிய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த முயற்சியை அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த சேவையின் வெளிப்பாடு கிராம சுயராஜ்ய இயக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சில விஷயங்களை தொலைக்காட்சிகள் காட்டுவதில்லை, சில விஷயங்கள் செய்தித்தாள் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதில்லை. கிராம சுயராஜ்ய இயக்கத்தை நாம் உருவாக்கியுள்ளோம். இதற்கென 17 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கு 7 பணிகள் ஒதுக்கப்பட்டன. இந்த கிராமங்கள் இந்த 7 பணிகளை 100 சதவீதம் அளவு நிறைவு செய்ய வேண்டும். இவற்றில் ஒன்று தடுப்பு மருந்து கொடுத்தல். அதாவது நாட்டின் சுகாதாரத் துறையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உயர்த்துவதற்காக பல்வேறு துறையைச் சார்ந்த மக்கள் ஒன்றிணைக்கப்படுகிறார்கள் என்று பொருள். இது மிகவும் பாராட்டக் கூடிய ஒன்று. இன்றைய நிலையில் தடுப்பூசி தருவது 6 சதவீதம் உயர்ந்துள்ளது என்றால் அது உங்கள் ஒத்துழைப்பினால் மட்டுமே சாத்தியமாகும். 6 சதவீதம் என்பது ஒரு சிறிய அளவு போல தோன்றுகிறது. ஆனால் முந்தைய நிலையில் இது ஒரு சதவீதம் கூட இல்லை. உங்களது அர்ப்பணிப்பு காரணமாக நாடு 100 சதவீத தடுப்பு மருந்து என்ற இலக்கை அடைவதில் முன்னேறி கொண்டே செல்கிறது.

நாட்டின் ஒவ்வொரு கருவுற்ற பெண், பச்சிளங்குழந்தை ஆகியோருக்கு நோய் தடுப்பு மருந்து கொடுப்பது என்ற தீர்மானம் ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்குவதன் மூலம் புதிய இந்தியா அமைவதில் முக்கியமான பங்கினை ஆற்றும்.

நண்பர்களே,

ஆரோக்கியமான சமுதாயம், ஆரோக்கியமான குடும்பங்களினால் உருவாக்கப்படுகிறது. ஆரோக்கியமான நாடு ஆரோக்கியமான சமுதாயத்தால் உருவாகிறது. நாம் அனைவரும் குறிப்பாக நீங்கள் நாட்டை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பொறுப்பு வகிக்கிறீர்கள். எனவே தான் குடியரசுத் தலைவர் உங்களை தேச நிர்மாணத்தின் முக்கியமான ஊக்குவிப்பு என்று பெயர் சூட்டினார். வாருங்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசின் உறுதிப்பாடான सर्वेभवन्तुसुखिनःसर्वेसन्तुनिरामयाःसर्वेभद्राणिपश्यन्तु। माकश्चित्दुःखभाग्भवेत्॥‘, அதாவது இந்த உலகையும் அதன் மக்களையும் நோயற்றதாக செய்து புதிய இந்தியாவை நிர்மாணிப்பது நோக்கி முன்னேறுவோம். தில்லிக்கும், நாட்டுக்கும் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த இந்த துறைக்கு எனது பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். இந்தப் பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய அவர்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளனர். ஏனெனில் நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டது எந்தப் பணியை முடிக்க இயலுமோ அந்தப் பணி மட்டுமே தொடங்கப்பட வேண்டும் என்பதுதான். ஒருமுறை நாடாளுமன்றத்தின் புனிதமான அரங்கில் ரயில்வே பட்ஜெட்டின் போது சில உறுதிப்பாடுகளை அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கடந்த 30, 40,50 ஆண்டுகளில் ரயில்வே துறையில் மட்டும் சுமார் 1500 விஷயங்கள் அறிவிக்கப்பட்டன என்று குறிப்பிட்டேன். இது குறித்து நான் கேள்வி எழுப்பிய போது அவைகள் காகித ஆவணங்களில் கூட இல்லை. இந்நிலையில் அவற்றை செய்து முடிப்பது என்ற விஷயத்திற்கே இடமில்லை. அத்தகைய நிலை ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. நாம் இங்கே வந்திருப்பது நமது சாதனைகளை விளம்பரப்படுத்த அல்ல. மாற்றத்தை கொண்டு வருவதற்கான நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும், அதற்கென உங்களது ஒத்துழைப்பை கோருவதற்கும் வந்திருக்கிறேன். உங்கள் ஒத்துழைப்பு நாட்டின் நம்பிக்கைகளையும், அபிலாஷைகளையும் நிறைவேற்றும் பயணத்தை நாம் தொடங்கி உள்ளோம். நண்பர்களே, நீங்களும் ஒத்துழைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அநேக நன்றிகள்.