ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிதாக அமைக்கப்பட்ட தரவு மையத்தையும் இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (2026 அக்டோபர் 25) திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் ஜெகந்நாதரின் அருளுடன், புதிய இந்தியாவுக்கு புவனேஸ்வர் ஒரு முக்கிய நிறுவனத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த இரு நிறுவனங்களும் ஒடிசா மக்களுக்கும் நாட்டுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று அவர் கூறினார்.
மக்களுக்கு முன்னுரிமை, முனைப்பான செயல்பாடு, நல்லாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசின் அணுகுமுறையைப் பிரதமர் எடுத்துரைத்தார். வளர்ச்சி என்பது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமமான முன்னேற்றத்தை உறுதி செய்வதாகும் என்று அவர் கூறினார். சிறிய நகரங்களை இணைக்கும் விரைவுச் சாலைகள், பல்வேறு மாநிலங்களில் விரிவடைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள், சிறு நகரங்களில் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகள், கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1.75 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள், தொலைதூரப் பகுதிகளுக்கான டிஜிட்டல் இணைப்பு ஆகியவை இந்த அணுகுமுறையின் வெளிப்பாடுகள் என அவர் குறிப்பிட்டார். மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி, அவர்களின் கனவுகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே நல்லாட்சியின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
1960, 1970-களில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபோதிலும், 2014 வரை மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வங்கிச் சேவைகளுக்கு வெளியே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஏழைகள், சிறு விவசாயிகள், நிலமற்றோர், பெண்கள் ஆகியோருக்கு வங்கிக் கடன் பெறுவது முன்பு கடினமாக இருந்தது எனவும், ஆனால் தற்போது டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மூலம் ஒவ்வொரு இந்தியரும் 24 மணி நேரமும் வங்கிச் சேவைகளைப் பெறுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள சுமார் 60 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் அரசின் நிதியுதவிகள் இடைத்தரகர்கள், கசிவுகள் இன்றி நேரடியாகப் பயனாளிகளின் கணக்குகளைச் சென்றடைவதாக அவர் தெரிவித்தார்.
பிணையின்றி குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று சுயதொழில் தொடங்கும் வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன எனவும், முத்ரா திட்டத்தின் கீழ் 13 கோடி பேர் முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். பிரதமரின் ஸ்வநிதி, விஸ்வகர்மா திட்டங்கள் மூலம் சாலையோர வியாபாரிகள், பாரம்பரியக் கைவினைஞர்கள் உள்ளிட்டோர் முறையான கடன்களைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், 10 கோடி கிராமப்புறப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனுதவி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
ஒருகாலத்தில் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த டெபிட், கிரெடிட் அட்டைகள் இன்று கோடிக்கணக்கான ரூபே அட்டைகள் மூலம் சாதாரண பொதுமக்களுக்கும் கிடைக்கின்றன என்று கூறிய அவர் இந்த மாற்றத்துக்காக ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள், வங்கிப் பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பைப் பாராட்டினார்.
அடல் ஓய்வூதியத் திட்டம் ஒன்பது கோடி பேருக்குப் பாதுகாப்பு அளிக்கிறது எனவும் இவர்களில் 38 லட்சம் பேர் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் என்றும் பிரதமர் கூறினார். பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு ₹20 பிரீமியத்தில் ₹2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடும், பிரதமரின் ஜீவன் ஜோதி திட்டத்தில் ஆண்டுக்கு ₹450-க்கும் குறைவான பிரீமியத்தில் ஆயுள் காப்பீடும் கிடைப்பதை அவர் குறிப்பிட்டார். இத்திட்டங்களின் கீழ், நெருக்கடியான காலங்களில் பல குடும்பங்களுக்கு ₹25,000 கோடிக்கும் அதிகமான காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகள் வங்கிச் சேவைகள் கிடைக்காத மக்களையும் வங்கி அமைப்புக்குள் கொண்டுவருவதற்காகச் செலவிடப்பட்டன என்றும் வரும் பத்து ஆண்டுகளில் வங்கிச் சேவைகளை மேலும் திறமையானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதே இலக்கு என்றும் பிரதமர் கூறினார். புவனேஸ்வரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தரவு மையமும் அதன் கணினித் திறன்களும் இதற்கு வலுசேர்க்கும் என அவர் குறிப்பிட்டார்.
நவீனப் போர்கள் ஆயுதங்களால் மட்டுமல்லாமல், இணையவழித் தாக்குதல்கள் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கக்கூடும் என அவர் எச்சரித்தார். இந்தியாவின் பொருளாதார வலிமை அதிகரிக்கும் நிலையில், இணையக் குற்றவாளிகளிடமிருந்து வங்கித் துறையைப் பாதுகாப்பது அவசியம் என்று அவர் கூறினார். இதற்குப் பழைய பயிற்சி முறைகளுக்குப் பதிலாக நவீனக் கட்டமைப்புகளும் திறமையான மனிதவளமும் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் புதிய இணையப் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனம் முக்கியப் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் கிழக்கு இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் எனத் தெரிவித்த பிரதமர், ஒடிசாவின் பாரம்பரிய கனிமவளத் தொழில்களுடன் குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்), மின்னணுவியல், தரவு மையங்கள், மேம்பட்ட கணினித் தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளும் இணைந்து வளர்ந்து வருவதாகக் கூறினார்.
சுரங்கத் தொழிலில் இருந்து குறைக்கடத்தித் தொழில்நுட்பம் வரை புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் ஒடிசாவின் இளைஞர்களின் கனவுகள் நனவாகும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். மாநிலத்தின் புதிய வளர்ச்சிப் பாதை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் துணைபுரியும் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328250®=3
****
SK/PLM/RJ