Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் நிகழ்ச்சியின் 139-வது அத்தியாயத்தில் 25.10.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்


எனதருமை நாட்டுமக்களே,

மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன்.  இன்றிலிருந்து 12 ஆண்டுகளுக்கு முன்னால், விஜயதசமி புனித நன்னாளன்று நாம் மனதின் குரலை ஆரம்பித்தோம்.  அப்போதிலிருந்து இப்போதுவரை, நமது இந்தப் பயணம் தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்தப் பயணத்தின் சகபயணிகளாகவும் நீங்கள் இருக்கிறீர்கள், வழிகாட்டிகளாகவும் நீங்களே இருக்கிறீர்கள்.  நண்பர்களே, என்னைப் பொறுத்தமட்டிலே, மனதின் குரல் என்பது, தேசத்தின் சாமான்ய மனிதனின் உழைப்பு, வல்லமை, முனைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவருடைய சேவையுணர்வை போற்றிப் பாடக்கூடிய பொன்னான வேளையாகவே இருந்து வந்திருக்கிறது.  நமது தேசத்திலே பல நூற்றாண்டுகளாகவே புனித யாத்திரை மேற்கொள்ளும் பாரம்பரியம் இருந்து வந்திருக்கிறது.  நாட்டுமக்களின் முயற்சிகளை, மேலும் அருகிருந்து அறிந்துகொண்டு, அவர்களின் பங்களிப்பைப் போற்றிப் பரவக்கூடிய ஒரு புனிதப்பயணமாகவே நான் மனதின் குரலைப் பார்க்கிறேன். 

நண்பர்களே,

சமூகத்துக்காகவும், தேசத்திற்காகவும் யார் வாழ்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புனித இடத்தின் வடிவங்கள்.  அசாதாரணமான காரியங்களில் ஈடுபடுவோரை சமூகம் பொதுவாக கண்டுகொள்வதில்லை; ஆனால் கடந்த 12 ஆண்டுகளிலே தேசத்தின் அனைத்து இடங்களிலும் இப்படிப்பட்ட செயல்களைச் செய்த அநேக மக்களை இந்தச் சமூகம் கவனத்தில் கொண்டது.  மனதின் குரலானது இப்படிப்பட்ட எண்ணில்லாத நபர்களின் கதைகளை உங்கள் முன்பாக கொண்டு நிறுத்தும் பணியைச் செய்திருக்கிறது. 

நண்பர்களே,

இந்த நிகழ்ச்சி வாயிலாக தேசத்தின் மக்கள்சக்தியை ஒருவகையில் நான் ஆராதனை செய்கிறேன்.  இதன் வாயிலாக அனைத்துக் குடும்பங்களோடும் இணையும் சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கிறது.  மனதின் குரலைக் கேட்கும் போது, ஏதோ தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூத்தவரைப் போல குடும்பத்தோடு குடும்பமாக அமர்ந்து அவர்களோடு உரையாடும் உணர்வு தங்களுக்கு ஏற்படுவதாக பலர் தெரிவித்த செய்திகள் எனக்குக் கிடைத்தன.  நேயர்களான உங்களனைவரின் நேசம், பாசம், சிநேகவுணர்வு – இவையே மிகவும் விலைமதிப்பில்லாத மூலதனமாக நான் கருதுகிறேன்.

என் மனம்நிறை நாட்டுமக்களே,

நமது நாட்டிலே பல பாரம்பரியமான திறன்கள், தலைமுறை தலைமுறைகளாக நமது அடையாளத்தின் அங்கமாக இருந்து வந்திருக்கின்றன.  இப்போது இந்தப் பாரம்பரியங்களோடு இணைந்து அநேகவிதமான புதிய பரீட்சார்த்த முயற்சிகள் நடைபெற்று வருவதும், அவை இன்றைய காலகட்டத்திற்கேற்ப முன்னெடுத்துக் கொண்டு போகப்படுகிறது என்பதும் இனிமையான விஷயங்கள்.  பஞ்சாபிலே இப்படிப்பட்டதொரு முயற்சி சில காலமாகவே நடந்து வருகிறது.  இங்கே இருக்கும் கேதி விராசத் மிஷன் – பாரம்பரிய வேளாண்மை இயக்கம் என்ற பெயருடைய அமைப்பு, இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரியமான வேளாண்மையின் வழிமுறைகளுக்குப் புத்துயிர் வழங்குவதை ஆரம்பித்திருக்கிறது.  இந்தக் குழுவில் உள்ளோர் பஞ்சாபின் மால்வா பகுதியில், பருத்தியை இயற்கை வேளாண்மை வாயிலாக பயிர் செய்ய விரும்பினார்கள்.  இந்த முன்னெடுப்புக்கு நவ த்ரிஞ்ஜன் எனப் பெயர் சூட்டப்பட்டது.  இந்த முன்னெடுப்பு மூலமாக இங்கே எந்தவிதமான வேதிப் பொருளுமின்றி, இயற்கைவழி பருத்தி பயிர் செய்யப்பட்டது.  இங்கே இயற்கை வண்ணமுடைய பருத்தியும் பயிர் செய்யப்பட்டு, இதனால் உருவாக்கப்பட்ட இழைக்கும், துணிகளுக்கும் வண்ணம் சேர்க்க, வேறு எந்தவொரு வேதிப்பொருளையும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசியமே இருக்கவில்லை.  இதனால் சுற்றுச்சூழலுக்கு எத்தனை பெரிய உதவியாக இருக்கிறது என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நண்பர்களே, சில ஆண்டுகள் முன்பாக, நவ த்ரிஞ்ஜன் அமைப்பு, நெசவுப் பள்ளி ஒன்றையும் தொடக்கியது.  நெசவுத் திறனை புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இதன் இலட்சியமாக இருந்தது.  இந்தப் பள்ளியில் பல பெண்களின், மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது.  ரமன்தீப் கௌர் அவர்கள் இதற்கான ஒரு எடுத்துக்காட்டு.  முன்பு இவர் தினக்கூலி என்ற வகையில் பணியாற்றி வந்த நிலையில், பள்ளியில் பயிற்சி பெற்ற பிறகு இன்று திறமையான நெசவாளி என்ற வகையில் இவர் அடையாளப்படுத்தப் படுகிறார்.  ரேகா ரானி அவர்களும் கூட, பயிற்சி பெறுவதற்கு முன்னர் கைத்தறியைத் தன் வாழ்நாளில் கண்ணெடுத்துக் கூட பார்த்ததில்லை.  ஆனால் இன்றோ இவரால் நெசவு செய்யப்பட்ட சால்வை, பாரதநாட்டு மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவருக்குக் கூட அளிக்கப்பட்டிருக்கிறது.  இதைப் போலவே சுனேஹா தேவி அவர்களும் முன்பெல்லாம் வீட்டுவேலை செய்து வந்தார், ஆனால் இன்று இவர் கைத்தறியில் அற்புதமான துணிகளை நெசவு செய்து வருகிறார்.  ரஜனி கௌர் கூட முன்னர் வயல்களில் கூலி வேலை பார்த்து வந்தார்.  இப்போது புதிய திறன் காரணமாக இவருக்கு வீட்டை நிர்வாகம் செய்ய போதுமான உதவி கிடைக்கிறது.  பள்ளியில் பயிற்சி பெற்ற பிறகு இப்படி அநேக பெண்கள் இப்போது சுதேசி இயற்கைவழிப் பருத்தியால் உருவாக்கப்பட்ட இழைகளைப் பயன்படுத்தி சால்வை, துவாலைகள், பிற துணிகள் என பலவற்றை தயாரிக்கிறார்கள்.  இந்த முயற்சிகளால் அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆகி வருகிறது. 

சில மாதங்கள் முன்பாக தேசிய கைத்தறி தினத்தன்று இந்தக் குழுவோடு இணையும் ஒரு வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.  வேலையின் மீது அவர்கள் கொண்டிருந்த பிடிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை என்னால் அப்போது உணர முடிந்தது.  அந்த அணியினர் அனைவருக்கும் அவர்களுடைய பிரகாசமான வருங்காலத்திற்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கனிவான நாட்டுமக்களே, நம் நாட்டிலே இயற்கையை மரியாதையோடு அணுகுவது என்பது பழமையான பாரம்பரியம்.  நம் அக்கம்பக்கத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும் என்பதெல்லாம் நமது கடமைகள் என்று நமது முன்னோர் நமக்குக் கற்பித்திருக்கின்றார்கள்.  இன்று நம் நாட்டிலே, இந்த உணர்வை தங்கள் வாழ்க்கையாகவே பலர் ஆக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் காணும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது.  இதே உணர்வைத் தான் உத்தராகண்டின் டிஹ்ரி கட்வாலிலும் காண முடிகிறது.  இங்கே அனைவரும் ஒன்று திரண்டு, ஒரு நதிக்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  இந்த நதியின் பெயர் ஹேவல்.  சில காலம் முன்பு ஹேவல் நதியில் நீர் குறையத் தொடங்கியது.  அக்கம்பக்கத்தில் இருந்த இயற்கை நீர்நிலைகளும் வற்றத் தொடங்கின.  இந்த நிலையில் உள்ளூர் நிர்வாகமும், கிராமத்தவர்களும் இணைந்து ஹேவல் நதியைக் காக்கும் இயக்கத்தைத் தொடங்கினார்கள்.  இதற்கிடையில் மழைநீரை மண்ணிலேயே தடுக்கும் உபாயங்களை மேற்கொண்டு, நிலத்தில் நீரைக் கொண்டு சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது, அதிக எண்ணிக்கையில் மரங்களும் நடப்பட்டன.  இன்று இந்த முயற்சியால் ஹேவல் நதிக்குப் புதிய உயிர்தானம் கிடைத்திருக்கிறது; கூடவே பல டஜன்கணக்கான நீர் நிலைகளுக்கும் புதிய வாழ்வு கிடைப்பதில் உதவியிருக்கிறது.

நண்பர்களே,

இப்படிப்பட்ட உணர்வுகளால் சமூகம் ஒன்றிணையும் போது, மாற்றத்திற்கான உத்திரவாதம் உறுதி தானே?  இதற்கான ஒரு சிறிய காட்சி நமது பண்டிகைகளின் போது நம்மால் காண முடியும்.  சில நாட்கள் கழித்து தீபாவளி, பவித்திரமான சட் நன்னாள் வரவிருக்கின்றன.  இதன் பொருட்டு ஆங்காங்கே தூய்மைப்பணி இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  நாம் எங்கே இருக்கிறோமோ, அங்கே தூய்மையின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது முக்கியம்.  நமது சிறியசிறிய முயற்சிகள் தாம் நமக்கருகே பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

என் உளம்நிறை நாட்டுமக்களே,

பண்டிகைகளின் இந்த வேளையில் நீங்கள் அனைவரும் உங்கள் அருகினிலே ஒரு மாற்றத்தைக் கண்டிப்பாக கவனித்திருப்பீர்கள்.  இப்போது மக்கள் பொருட்களை வாங்கும் போது சுதேசிப் பொருட்களுக்கு மிகுந்த மகத்துவம் அளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இந்த உணர்வு இப்போது நமது பொருட்களின் உலகிலிருந்து சந்தைகளைச் சென்று எட்டியிருக்கிறது.  பிஹாரின் பூர்ணியாவைச் சேர்ந்த மகானா இப்போது கிரீஸ் நாட்டுச் சந்தைகளைச் சென்றடைந்திருக்கிறது.  கர்நாடக மாநில கலபுர்கியின் துவரை இப்போது மாலத்தீவுகளைச் சென்றடைந்து வருகின்றது.  அதாவது பாரதநாட்டு விவசாயிகளுக்கு உலகமே இப்போது ஒரு புதிய சந்தையாகி வருகின்றது.  நண்பர்களே, உள்ளூர் பொருட்கள் பற்றிப் பேசும் அதே வேளையில் மேலும் ஒரு விஷயம் குறித்தும் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.  எந்த ஒரு உற்பத்திப் பொருளின் தரத்தோடு கூடவே, அதன் பொதியிடலும் அதாவது பேக்கேஜிங்கும் மிகுந்த மகத்துவமானது.  பல வேளைகளில் நாம் சந்தையிலே ஒரு பொருளைப் பார்க்கும் போது, அதன் நேர்த்தியான பொதியிடல்-பேக்கேஜிங்கைப் பார்த்தே அதை நாம் கையில் எடுக்கிறோம்.  அந்த பேக்கேஜிங்கைக் கண்டு அந்தப் பொருளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.  இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டு இப்போது பொதியிடல் தொடர்பாகவும் அழுத்தமளிக்கப்பட்டு வருகிறது.  நண்பர்களே, மஹாராஷ்டிரத்தில் பழங்குடியினச் சமூகங்கள், தாங்கள் தயாரித்த பொருட்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தினார்கள்.  இங்கே சபரி நேச்சுரல்ஸ் வாயிலாக தேன், இலுப்பை, புளிமா மற்றும் மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் சந்தைகளில் கொண்டு வரப்படுகின்றன.  இவற்றின் பொதியிடலின் மீது பழங்குடியினத்தவர் கலையின் முத்திரை இருக்கிறது.  இந்த பேக்கேஜிங்கிற்கே கூட ஜப்பானின் புகழ்மிக்க குட் டிசைன் விருது கிடைத்தது என்பது உங்களுக்கு உவகையை அளிக்கும்.  நமது இளைஞர்களும் கூட இந்தத் துறையில் புதிய முறைகளை பரிசோதனை செய்து வருகிறார்கள்.  கர்நாடகத்தின் பேம்பூ ஸ்டார்ட் அப் தொழிலானது, மூங்கில் மற்றும் வேளாண்மையில் வெளியாகும் மிச்சங்களைக் கொண்டு பேக்கேஜிங் பொருட்களைத் தயார் செய்கிறது. 

நண்பர்களே,

உள்ளூர் பொருட்கள் எனும் போது காதி பற்றிய பேச்சு இயல்பானது தானே!!  இந்த முறை காந்தி ஜயந்தியன்று, வெறும் ஒரு நாளில் மட்டும் காதி கிராமோத்யோகின் பொருட்களின் விற்பனை 28 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.  இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒண்ணரை கோடி ரூபாய் அதிகமாக இருந்தது, அதாவது, காதிப் பொருட்கள் மீதான மக்களின் விருப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, திறன்கள்-உழைப்பால் காதி கைவினைப் பொருள் போன்ற அநேக பொருட்களைத் தயாரித்து வருவோரை இதனால் ஆதாயம் சென்றடைகிறது என்பதே இதன் பொருள்.  நண்பர்களே, பண்டிகைகளின் போது நமது குடும்பங்கள் மற்றும் உற்றார் உறவினருக்காக நாம் நிறைய வாங்குகிறோம்.  இந்த முறையும் கூட பொருட்களை வாங்கும் போது உள்ளூர் கைவினைக் கலைஞர்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள்.  நீங்கள் வாங்குவதால் அவர்களின் உற்சாகம் அதிகரிக்கும்.  உங்களுடைய”நம்மவர்கள்” என்ற இந்த நேசம், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.  எந்த அளவுக்கு உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கம் முன்னேற்றம் காண்கிறதோ, அந்த அளவுக்கு வேகமாக தற்சார்பு பாரதம் என்ற கனவு நிறைவேறும்.  ஆகையால், நீங்கள் உள்ளூர் கைவினைக் கலைஞர்களால் தயார் செய்யப்பட்ட பொருட்களுக்கு முதன்மை தாருங்கள், முக்கியத்துவம் அளியுங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் தனிப்பட்ட முறையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 

என் மனம்நிறை நாட்டுமக்களே,

நமது நாட்டவரிடம் ஒரு மிகப்பெரிய சிறப்பம்சம் உண்டு.  நாம் புதிய தொழில்நுட்பத்தை மிக விரைவாக சொந்தமாக்கிக் கொள்வோம்.  நாம் இயல்பான வகையிலே தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்வின் அங்கமாக்கிக் கொள்வோம்.  இ-சஞ்ஜீவினி திட்டம் இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.  மக்களுடைய வாழ்க்கையை சுலபமாக்குவதில் தொழில்நுட்பத்தை எத்தனை சிறப்பாக கையாள முடியும் என்பது இதனால் விளங்குகிறது.  இதன் வாயிலாக இதுவரை சுமார் 50 கோடி தொலைபேசிவழி ஆலோசனைகள் செய்யப்பட்டுவிட்டன.  இந்தப் புள்ளிவிவரம் மிகவும் பெரியது.  தொழில்நுட்பத்தின் பலம், நமது மருத்துவர்களின் சேவையுணர்வு, நாட்டுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றுக்கான ஆகச்சிறந்த உதாரணங்கள்.

நண்பர்களே,

 இன்று இ சஞ்ஜீவனி சேவை, தனது விசாலமான வலைப்பின்னல் வாயிலாக தேசத்தின் தொலைவான பகுதிகளையும் சென்றடைந்து விட்டது.  இதனால் ஆதாயம் பெறும் மக்களின் கதைகள் உங்களை உணர்ச்சிவயப்பட வைத்துவிடும்.  அண்டமான் நிக்கோபாரின் பாராடாங்க் தீவிலே, ஜராவா பழங்குடியைச் சேர்ந்த ஓஹோ தாஹானேவுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது.  மூச்சு விடக்கூட சிரமமாக இருந்தது.  இந்த நிலையில் உள்ளூர் சுகாதாரப் பணியாளர்கள், இ சஞ்ஜீவனி வாயிலாக மருத்துவ வல்லுநரைத் தொடர்பு கொண்டார்கள்.  அந்தக் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருந்தது, மருத்துவ வல்லுநர் கண்காணிப்பில் வந்தவுடனேயே, அவனுடைய உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காணத் தொடங்கியது.

நண்பர்களே,

லட்சத்தீவுகளின் கல்பேனிக்கருகே 60 வயது மதிக்கத்தக்க குன்ஹீ கோயா அவர்களின் உடல்நலத்தில் ஒரு நாள் திடீரென்று கோளாறு ஏற்பட்டது.  அப்போது கடலின் மறுகரையில் கவரத்தியில் இருந்த அனுபவம் வாய்ந்த மருத்துவருடன் இ சஞ்ஜீவனி வாயிலாக தொடர்பு கொள்ளப்பட்டது.  அந்த அனுபவசாலி மருத்துவர், உள்ளூர் மருத்துவக் குழுவினருக்கு வழிகாட்ட, குன்ஹீ கோயா அவர்களுக்கு ஆசுவாசம் பிறந்தது. லத்தாக்கின் ஜான்ஸ்கரிலே குஞ்ஜாங்க் டோல்மா அவர்களுக்கு மகப்பேறின் போது சில சிக்கல்கள் ஏற்பட்டன.  இந்த நிலையில் இ சஞ்ஜீவனி அவருக்கு உதவி புரிந்தது, மருத்துவ வல்லுனர் அவருக்கு உடனடியாக உதவினார்.  நாகாலாந்தின் பேரேனிலே 12 வயதேயான முஷேமுக்கு காதிலே நோய் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வந்திருந்தது.  இவருக்கும் கூட ஈ சஞ்ஜீவனியால் ஆதாயம் கிடைத்தது.  மருத்துவ வல்லுநர் உடனடியாக இவருடைய நோயைக் கண்டறிந்து சரியான மருந்துகளைப் பரிந்துரைத்தார். 

நண்பர்களே,

ஒரு காலத்தில் மருத்துவரிடம் காட்டத் தேவையான சிறியதொரு மருத்துவ பரிசோதனைக்குக் கூட மக்களுக்கு கணிசமான நேரம் ஆனது, சிரமங்கள் இருந்தன.  இன்று நாடெங்கும் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து தொண்ணூராயிரம் ஆயுஷ்மான் மருத்துவ மையங்கள் மக்களுடைய வாழ்வில் புதியபுதிய வசதிகளைக் கொண்டு சேர்க்கின்றது.  இந்த ஆரோக்கிய நிலையங்கள் ஒருவகையிலே, பஞ்சாயத்துக்களில்  wellness centre – உடல்நல மையங்களாக மேம்பாடு அடைந்து வருகின்றன.  மிகவும் உவப்பான செய்தி என்னவென்றால், இப்போது கிராமத்தவர்களும் கூட, நலமாக இருக்க வேண்டி குறித்தகாலத்தில் உடல் பரிசோதனை செய்து கொள்கிறார்கள்.  மேலும் இதிலே இ சஞ்ஜீவனி மிகவும் பெரிய பங்களிப்பை நல்கி வருகிறது.

எனதருமை நாட்டுமக்களே,

இந்த மாதத் தொடக்கத்தில் நான் சென்னை சென்றிருந்தேன்.  அங்கே தேசத்தின் பல விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், இளைய திறமைசாலிகளை நான் சந்தித்தேன்.  ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய துறைகளில் எல்லாம் இன்று நமது இளைஞர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள், அப்படிப்பட்ட ஒரு துறை தான் மூளை ஆராய்ச்சி.  இதோடு தொடர்புடைய சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தை நான் மதராஸ் ஐஐடியிலே மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தேன்.  இந்த மையத்தில் ஒரு brain imaging technology platform – மூளை வரைபடத் தொழில்நுட்ப தளம் உருவாக்கப்பட்டு, இது உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  இதன் வாயிலாக மனித மூளையின் உயர் தெளிவுத்திறன் டிஜிட்டல் 3டி படங்கள் உருவாக்கப்பட்டு, இவற்றின் இலக்கு இனிவரும் நாட்களில் 100 மனித மூளைகளின் 3டி மேப்பிங் செய்து அவற்றை நுணுக்கமாக ஆராய்வது தான்.  ஒட்டுமொத்த உலகிலுமே இதுபோன்ற முதல் முயற்சி இது.  இந்தப் பணிக்கு மிகவுயர் சக்தி கொண்ட சூப்பர் கணிப்பொறி பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நண்பர்களே,

இந்த மூளை மையத்தின் நிர்மாணத்திலே தேசத்தின் தொழில்துறை அரசுடன் இணைந்து பெரும் பங்காற்றி இருக்கிறது.  ஐஐடியின் பல முன்னாள் மாணவர்களும், கல்வியாளர்களும் இந்த ஆய்வு மையத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.  இந்தத் திட்டம் ஏன் மிகவும் முக்கியமானது என்றால் அறிவியல் இத்தனை முன்னேற்றம் அடைந்திருப்பதைத் தாண்டி, மனித மூளை இன்றும்கூட ஒரு பெரிய அறிவியல் புதிராகவே இருக்கிறது.  இன்றும் கூட அல்சைமர் நோய் எனும் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு, டிமென்ஷியா என்ற அறிவாற்றல் இழப்பு போன்ற நோய்களுக்கு உறுதியான எந்த சிகிச்சையும் இல்லை.  ஆகையால் எந்த அளவுக்கு ஆழமாக மூளையின் செயல்பாட்டை அறிவியல் விளங்கிக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு வருங்காலத்தில் புதிய சாத்தியக்கூறுகள் உருவாகும்.  100 மனித மூளைகளின் இந்தத் தரவுகள், அடுத்த கட்டமாக பல்வேறு துறைகளில் ஆய்வுகளுக்காக வெளிப்படை மூலநிரலாக கிடைக்க வழிவகை செய்யப்படும் என்பதும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 

நண்பர்களே,

இதைப் போன்ற மேம்பட்ட ஆய்விலே உடல் உறுப்பு தானம் மிகப் பெரிய பங்காற்றுகிறது.  யாரெல்லாம் தங்களுடைய வாழ்க்கையை நிறைவு செய்த பிறகு உடலுறுப்பு தானம் செய்து விட்டுச் செல்கிறார்களோ, அவர்கள் நிறைய பேர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதோடு, ஆய்வுகளையும் சாத்தியமாக்குகிறார்கள்.  இப்படிப்பட்ட ஒரு உதாரணம் – மத்திய பிரதேசத்தின் நர்மதாபுரத்தின் சிவானி அவர்களுடையது.  ஷிவானி அவர்கள் சாலை விபத்து ஒன்றில் இறந்து போகிறார்.  குடும்பத்தார் நிலைகுலைந்து போகிறார்கள் ஆனால், அந்தக் கடினமான வேளையிலும் கூட அவருடைய குடும்பத்தார் மேற்கொண்ட ஒரு தீர்மானம், நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது.  அந்த முடிவு என்ன தெரியுமா?  ஷிவானி அவர்களின் உடல் தானம் செய்யப்பட்டது.  ஷிவானி அவர்களின் குடும்பத்தாரின் இந்த முடிவால் சமூகம் மற்றும் தேசத்திற்கு ஒரு பெரிய செய்தி அளிக்கப்பட்டது.  மனித சமூகத்தின் இப்படிப்பட்ட ஒரு அடியெடுப்பால், ஒரு குடும்பத்தின் சந்தோஷங்கள் மீண்டும் திரும்பலாம், அதோடு கூடவே ஆய்வுப்பணிகளில் பெரும் உதவிகரமாகவும் இருக்கும்.

எனதருமை நாட்டுமக்களே,

சென்னையின் என்னுடைய பயணம் பற்றிய மேலும் எனது அனுபவங்களைப் பற்றி நான் உங்களோடு உரையாட விரும்புகிறேன்.  என்னுடைய முதல் அனுபவம் – மெட்ரோவிலே  இளைஞர்களுடனான என்னுடைய உரையாடல்.  இரண்டாவது நிகழ்ச்சி தான் ஐஐடி மெட்ராசுக்கு நான் சென்றது.  இந்த ஊடாடல்களின் போது சுவாரசியமாக இருந்த ஒரு விஷயம் என்றால், நமது இளைஞர் சக்தி எப்படி பிரச்சனைகளுக்கு நூதனமான தீர்வுகளை ஏற்படுத்துவது தொடர்பாக பணியாற்றுகிறது என்பதைக் காண முடிந்தது.  நான் சந்தித்த ஸ்டார்ட் அப்புகளில் ஒருவர் தங்கத்தின் தரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள அதை உரைத்துப் பார்ப்பதில் பணியாற்றுகிறார்.  இதனால் தங்கம் வாங்கும் போது ஏமாற்றப்படுவதிலிருந்து நாம் தப்பலாம்.  ஏமாற்றிப் பறிக்கப்பட்ட பணத்தை எப்படி மீட்டெடுப்பது என்பது தொடர்பான ஒரு தளத்தில் இளைஞர்களின் ஒரு குழு பணியாற்றி வருகிறது.  அதே போல இன்னொரு குழு கர்ப்பப்பை புற்றுநோயைக் கண்டறிதலில் எவ்வாறு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம் என்பதில் ஈடுபட்டிருந்தது.  நண்பர்களே, ஐஐடியிலே நடந்த ஊடாடல் முழுமையாக ஆழ் தொழில்நுட்பத்தில் முனைப்பாய் இருந்தது.  இந்த ஸ்டார்ட் அப்புகளுக்கு ஐஐடி மெட்ராஸின் இன்குபேஷன் சூழலமைப்பு உதவிகரமாக இருந்து வருகிறது.  இவற்றின் ஒரு ஸ்டார்ட் அப் தான் கடலுக்கு மேலே பறக்கும் ஒரு மின் வாகனத்தை மேம்படுத்தி வருகிறது.  மேலும் ஒரு ஸ்டார்ட் அப்பானது ட்ரோன்கள் மற்றும் மின் வாகனங்களுக்கு விரைவான மின்னேற்றம் அடையும் பேட்டரிகளைத் தயாரித்து வருகிறது.  ஒரு குழு, பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பணியாற்றி வருகிறது. 

நண்பர்களே,

 இன்று நமது இளைஞர்கள் எத்தனையோ அசாதாரணமான பணிகளை ஏன் செய்து வருகிறார்கள் என்றால் சரியான சூழ்நிலையும், ஆதரவும் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது என்பதால் தான்.  நமது தேசத்திலே திறன்கள்-திறமைகளுக்கு என்றுமே பஞ்சமே இருந்தது கிடையாது.  இன்றிலிருந்து சில நாட்கள் கழித்து அக்டோபர் மாதம் 31ஆம் தேதியன்று, பாரதத்தின் மகத்தான விஞ்ஞானி நரிந்தர் சிங் கபானி அவர்களுடைய 100ஆவது பிறந்த நாள் வருகிறது.  அவரை உலகின் ஒளி இழை நார்களின் தந்தை என்று அழைப்பார்கள்.  இவர் பஞ்சாபின் மோகா மாவட்டத்திலே பிறந்தார்.  ஒளியை மெல்லிய இழை வாயிலாக முன்னெடுத்துச் செல்லும் உத்தியிலே இவருடைய மேம்பட்ட ஆய்வு தான், தகவல் தொடர்பியல் உலகத்திற்குப் புதிய திசையளித்தது.  இன்று இணையமும், டிஜிட்டல் தகவல் தொடர்பியல் என்ற எந்த உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ, அதை ஒளியிழை நாரில்லாமல் நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.  இந்த வேளையிலே நரிந்தர் சிங் கபானி அவர்களை நாம் நினைவு கூர்வோம்.  நமது இளைஞர்கள் கபானி அவர்களைப் போன்ற விஞ்ஞானிகளைப் பற்றிப் படிக்க வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

சில நாட்கள் கழித்து அக்டோபர் 31ஆம் தேதியன்று சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் ஜயந்தி வரவிருக்கிறது.  இந்த நாளை தேசம் ஒற்றுமைத் திருநாளாகக் கொண்டாடுகிறது.  இந்தச் சந்தர்ப்பத்திலே தேசமெங்கும் ஒற்றுமை ஓட்டம், அதாவது Run for Unityக்கும் ஏற்பாடு செய்யப்படும்.  ஒற்றுமை ஓட்டம் நமது ஒற்றுமையை மேலும் பலப்படுத்த, தேசத்திடம் நமது உறுதிப்பாட்டை மீண்டும் உரைக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.  இந்த முறையும் கூட ஒற்றுமை ஒட்டத்தில் அனைவரும் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று உங்களனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன்.  உங்களுடைய குடும்பம், உங்களுடைய நண்பர்கள், உங்கள் அக்கம்பக்கத்தார் என அனைவரையும் உங்களோடு அழைத்துக் கொண்டு ஓடுங்கள்.

நண்பர்களே,

உங்களனைவருக்கும் நினைவிருக்கலாம், பாரதம் கேட்டுக் கொண்டதற்கிணங்க 2023ஆம் ஆண்டு சிறுதானியங்களுக்கான சர்வதேச நாள் என்று அங்கீகரிக்கப்பட்டது.  இதற்கு உலகம் முழுவதிலும் மிகவும் ஆக்கப்பூர்வமான எதிர்வினைஉண்டானது.  இந்த முன்னெடுப்பு வாயிலாக, சிறுதானியங்கள் என்ற சூப்பர் உணவானது, நமது கலாச்சாரத்தில் எந்த அளவுக்கு ஆழமாக ஊறியிருக்கிறது என்பதை மக்கள் கண்டுகொண்டார்கள்.  வடகிழக்கிலேயும் கூட சிறுதானியங்களின் விவசாயம் என்பது ஒரு முழுமையான பாரம்பரியமாக இருந்து வருகிறது.  ஆனால் காலப்போக்கிலே மக்கள் இதிலிருந்து விலகிப் போயிருக்கிறார்கள்.  இப்போது நிலைமை மாறி வருகிறது.

நண்பர்களே,

மேகாலயாவின் மேற்கு ஜயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் காண்டுலி என்ற பெயர் கொண்ட ஒரு கிராமம் இருக்கிறது.  இங்கே பல தலைமுறைகளாக சிறுதானியங்கள், உள்ளூர் உணவுக் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கமாக இருந்து வந்திருக்கின்றன.  ஆனால் சில காலமாக, இங்கே இவற்றைப் பயிர் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்திருக்கிறது; இந்த நிலையில், இங்கே இருக்கும் இரண்டு தோழிகள், புதியதொரு முன்னெடுப்பிலே ஈடுபட்டார்கள்.  இவர்கள் சிறுதானியங்களைக் கொண்டு புதிய பொருட்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தினார்கள்.  சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டல் செய்து, குக்கீஸ், கேக்குகள், மஃபின்கள் என இவற்றோடுகூடவே இவற்றைக் கொண்டு குழந்தைகள் உணவையும் தயாரித்தார்கள்.  இதன் காரணமாக சிறுதானியப் பொருட்களின் விற்பனை அதிகரித்தது, சிறுதானியங்களின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கின.  இந்த நிலையில் இங்கே இருக்கும் விவசாயிகளும் கூட மீண்டும் சிறுதானிய விளைச்சலில் ஈடுபடத் தொடங்கினார்கள்.  நண்பர்களே, மேகாலயாவின் மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்திலே சாதோலபாடா கிராமத்திலே சில புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இங்கே இருக்கும் விவசாயியான சேக்ஜிங் சங்க்மா அவர்கள், சிறுதானியங்களின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி இதை பயிர்செய்யத் தொடங்கினார்.  இதனால் இவருடைய வருவாயும் அதிகரித்து, கிராமத்திலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.  இதைப் போலவே நாகாலாந்தின் கோஹிமாவின் ஒரு கிராமம் கேஜோமா.  இந்த கிராமத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறுதானியங்கள் பயிர் செய்வது தடைப்பட்டுப் போயிருந்தது.  இதன் காரணமாக ஒரு தலைமுறை முழுவதும் இந்த பாரம்பரியமான விளைச்சல் பற்றித் தெரியாமலே போனது.  சிந்தியுங்கள், எந்த விளைபொருளை அவர்களின் தாத்தா பாட்டிமார் எல்லாம் பயிர் செய்தார்களோ, அதை கிராமத்தவர் மறக்கத் தொடங்கினார்கள்.  2024ஆம் ஆண்டிலே இங்கே இருப்போர், சிறுதானிய விவசாயத்தை மீண்டும் தொடக்கினார்கள்.  2025ஆம் ஆண்டிலே கேஜோமா தனது முதல் சிறுதானிய விழாவைக் கொண்டாடியது.  இப்போது இங்கேயும் கூட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்குத் தேவை விரைவாக அதிகரித்திருக்கிறது.  நண்பர்களே, சிறுதானியங்களின் விவசாயத்தோடு தொடர்புடைய எடுத்துக்காட்டுகளே கூட ஒரு சிறப்புச் செய்தியை அளிக்கின்றன.  எப்படி நமது இளைஞர்கள், பாரம்பரிய பயிர்களில் புதிய சந்தர்ப்பங்களை இணைக்கிறார்கள், எப்படி நமது கிராமங்கள், பாரம்பரியங்களை பாதுகாக்கும் அதே நேரத்தில் தன்னிறைவுப் பாதையில் பயணிக்க முடியும் என்பதையே இந்த உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

என் கனிவுநிறை நாட்டுமக்களே,

நாளை அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று மகரிஷி வால்மீகி அவர்களுடைய பிறந்த நாள்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டன ஆனால், மகரிஷி வால்மீகி அவர்களின் இராமகாதை இன்றும் கூட புதிதுபுதிதாக எதையாவது கற்பிக்கிறது.  மகரிஷி வால்மீகி, இராமாயணம் வாயிலாக வாழ்க்கையின் ஆழமான படிப்பினையை நமக்கு அளித்திருக்கிறார்.  தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற செய்தியை அவர் அளிக்கும் அதே வேளையில், இன்னொரு புறத்திலே, சேவை, கருணை, சமூக நல்லிணக்கத்தின் மகத்துவத்தையும் புரிய வைக்கிறார்.  வால்மீகி இராமாயணத்திலே பகவான் இராமனுடைய கல்யாணகுணவைபவம் இந்த நற்பண்புகளின் மிக சுந்தரமான உதாரணமாக விளங்குகிறது.  பகவான் இராமன், தாய் சபரியின் அன்பு மற்றும் பக்தியை ஏற்றுக் கொண்டார்.  நிஷாதராஜன் – குகனுடைய நட்புக்கு மரியாதை அளித்தார்.  அனைவரோடும் இணைந்து பயணிக்கும் உணர்வு என்ற இந்த ஆதர்சம் இன்றும் கூட நமக்கு வழிகாட்டி வருகிறது.  இந்த உணர்வின் பிரதிபலிப்பை, அயோத்தியின் பிரும்மாண்டமான இராமனாலயத்திலும் கூட காண முடிகிறது.  அங்கே மகரிஷி வால்மீகி, நிஷாதராஜன், அன்னை சபரி ஆகியோருக்கும் ஆலயங்கள் இருக்கின்றன.  அயோத்தியின் விமான நிலையமும் கூட மகரிஷி வால்மீகியின் பெயரால் அலங்கரிக்கப்பட்டிருப்பது எனக்கு சந்தோஷமளிக்கும் விஷயம்.  இந்த முயற்சி, சேவை, சமத்துவம், கருணை போன்ற குணங்களுக்கு உன்னதமான இடமளிக்கப்பட்டிருக்கும் நமது மகத்தான பாரம்பரியத்துக்கு நிறைவை அளிக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே,

 

 பாரத மண்ணானது, என்றும் நீங்கா முத்திரை பதித்த பல மகத்துவமான ஆளுமைகளை உருவாக்கி அளித்திருக்கிறது.  இப்படிப்பட்டதொரு மகத்தான ஆளுமைதான் பாய் பரமானந்த்  அவர்கள்.  சில நாட்கள் கழித்து நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று அவருடைய 150ஆவது பிறந்த நாள் வரவிருக்கிறது.  பாய் பரமானந்த் அவர்களின் உள்ளெழுச்சி – ஆதர்சத்தின் மிகப்பெரிய ஊற்றுக்கண் –  ஆரிய சமாஜுடனான அவருடைய ஆழமான பிணைப்பு.  20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்திலே பாய் பரமானந்த் அவர்கள் ஆரிய சமாஜின் வேலை நிமித்தம் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தார்.  அங்கே அவர் அண்ணல் காந்தியடிகளையும் சந்திக்க நேர்ந்தது.  அவர் கயானாவின் கிர்மிடியா சமூகத்தினருக்கு இடையே பணியாற்றினார், அப்போது அது ஆரிய சமாஜின் மிகப்பெரிய மையமாகத் திகழ்ந்தது.  கயானாவுக்குப் பயணம் மேற்கொண்ட போது, அங்கே ஆரிய சமாஜின் நினைவுச்சின்னம் செல்ல எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  நண்பர்களே, பாய் பரமானந்த் அவர்கள், சுதந்திரப் போராட்டத்திலே பெரும்பங்காற்றினார்கள்.  லாலா ஹர்தயால் அவர்களை அமெரிக்கா செல்ல ஒப்புக்கொள்ளச் செய்தது பாய் பரமானந்த் அவர்கள் தான் என்று கூறப்படுகிறது நண்பர்களே!!  அவர் கதர் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.  சுதந்திரப் போராட்டத்திலே அவருடைய தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், ஆங்கிலேயர்கள் அவருக்கு அந்தமான் கொடுஞ்சிறைவாச தண்டனையை விதித்தார்கள்.  அவருடைய ஒரு புத்தகமான ஆபபீதி : காலே பானி கீ காராவாஸ் கஹானி, அதாவது அந்தமானின் கொடுஞ்சிறைவாசத்தின் கொடுமையான கதை என்பது இதன் பொருள்.  சுதந்திரப் போராட்ட தியாகிகள் புரிந்த தியாகங்களைப் புரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.  பாய் பரமானந்த் அவர்களின் தண்டனை முடிவடைந்தவுடன் அவர் கல்வித்துறையில் கால்பதித்தார்.  வீரன் பகத் சிங்கிற்குக் கல்வி கற்பித்தவரும் இவர்தான் என்பது உங்களுக்குப் பேராச்சரியத்தை அளிக்கலாம்.  பிற்காலத்தில் இவர் பல ஆண்டுகள் வரை ஹிந்து மகாசபையோடும் இணைந்திருந்தார்.  அதாவது காந்தியடிகள் தொடங்கி, கயானா வரை, கதர் தொடங்கி அண்டமான் கொடுஞ்சிறை வரை இவருடைய ஆளுமை மிகவும் உத்வேகம் அளிக்கவல்லது.  பாய் பரமானந்த் அவர்களுக்கு நான் மரியாதை கலந்த சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.  இளைய நண்பர்களிடம் என் வேண்டுகோள் என்னவென்றால் அவர்கள் இவரைப் பற்றித் தெரிந்து கொண்டு மற்றவர்களும் உள்ளெழுச்சி பெறச் செய்ய வேண்டும் என்பது தான்.

என் மனம்நிறை நாட்டுமக்களே,

வரவிருக்கின்ற நாட்களிலே தீபாவளி சட் புனித நாள் மற்றும் பல பண்டிகைகள் ஒளிகூட்டவிருக்கின்றன.  நீங்கள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், குடும்பத்தார் அனைவருடனும் இணைந்து பண்டிகைகளைக் கொண்டாடுங்கள், மற்றவர்களுக்கும் உங்கள் சந்தோஷத்தில் பங்களியுங்கள்.  வரவிருக்கின்ற அனைத்துப் பண்டிகைகளுக்கும் உங்களனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எப்போதும் போலவே உங்களுடைய தகவல்கள், செய்திகளுக்காக நான் காத்திருப்பேன்.  உங்கள் செய்திகள் தாம் மனதின் குரலுக்கு புதிய கருத்துக்களை அளிக்கின்றன, புதிய திசை கிடைக்கிறது.  அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், நாட்டுமக்களின் புதிய முயற்சிகள், புதிய கருத்தூக்கமளிக்கும் கதைகளோடு சந்திப்போம்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம்.

*****

RJ