Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் மாநிலம் அஞ்சாரில் இயற்கை எரிவாயு முனையம் மற்றும் குழாய்ப் பதிப்பு திட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், அஞ்சாரில் முந்ரா இயற்கை எரிவாயு முனையம், அஞ்சார்-முந்த்ரா குழாய் பதிப்புத் திட்டம் மற்றும் பலன்பூர் – பாலி – பார்மர் குழாய்ப் பதிப்பு திட்டம் ஆகியவற்றை இன்று (30.09.18) தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர், கட்ச் பகுதியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். கட்ச் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகளை அவர் பாராட்டினார்.

இயற்கை எரிவாயு முனையத்தை தொடங்கியிருப்பது இன்றைய நிகழ்வின் முக்கிய அம்சமாகும் என்று குறிப்பிட்ட திரு. மோடி, மூன்று இயற்கை எரிவாயு முனையங்களை தாம் தொடங்கி வைத்திருப்பது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும் என்றார்.

குஜராத்தில் முதல் இயற்கை எரிவாயு முனையம் தொடங்கப்பட்ட போது மக்கள் ஆச்சரியமடைந்ததைக் குறிப்பிட்ட அவர், தற்போது இந்த மாநிலம் நான்காவது முனையத்தின் மூலம் இயற்கை எரிவாயுவைப் பெறவிருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

குஜராத், இயற்கை எரிவாயு உற்பத்தி மையமாக உருவாகி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இம்மாநிலத்தில் வாழும் ஒவ்வொருவரும் இதனை பெருமையாகக் கருத வேண்டும் என்றார். வலுவான எரிசக்தி உற்பத்தியே எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியம் என்று குறிப்பிட்ட அவர், எரிசக்தி உற்பத்தியில் நாடு பின்தங்கியிருந்தால், வறுமையை ஒழிக்க முடியாது என்றார்.

மக்களின் விருப்பங்கள் பெருகி வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், பாரம்பரிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதலாக நவீன கட்டமைப்பு வசதிகளும் தேவை என்பதை அவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறினார்.

சுற்றுலாத் துறையில் கூடுதல் வாய்ப்புகள் இருப்பதால்,  வெளிநாட்டவர்கள், இந்தியாவிற்கு வர விரும்புவதாகவும் திரு. மோடி தெரிவித்தார். விமான சேவையின் மூலம் பல இடங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தவும், இந்த வசதியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதியை ஏற்படுத்துவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவில் ஒவ்வொரு இல்லமும் மின்வசதி பெறும் வகையில், திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்தியாவில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.