பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் (2009) திருத்தம் கொண்டுவருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் அனைத்து ஆசிரியர்களும் கல்விக் குழுக்கள் வரையறுத்துள்ள குறைந்தபட்ச தகுதிகளைப் பெற்றிருக்கவும், அதற்காகப் பயிற்சி பெறும் காலத்தை 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் நீடிக்கவும் இந்தத் திருத்தம் உறுதி செய்கிறது.
தொடக்கப் பள்ளிகளில் போதிய பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தங்களது பயிற்சியைப் பணி புரியும் காலத்திலேயே பூர்த்தி செய்துகொள்ள உதவும். அத்துடன், நாட்டில் தொடக்கப்பள்ளி நிலையில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் குறிப்பிட்ட தரத்திலான குறைந்தபட்ச தகுதியைப் பெற்றிருக்கவும் வகை செய்யப்படுகிறது. ஆசிரியர் பயிற்றுவிக்கும் பணியின் தரம் தொடர்வதற்குத் தேவைப்படுவதால், அனைத்து ஆசிரியர்களும் குறைந்தபட்ச கல்வித் தகுதியைப் பெறுவதை உறுதி செய்யும். இதன் விளைவாக, ஆசிரியர்களின் ஒட்டுமொத்தமான தரம், கற்பிக்கும் முறை, குழந்தைகளின் கற்கும் ஆற்றல் ஆகியவை மேம்படும். இது தொடக்கக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்தும்.
பின்னணி:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் (2009) 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இது 6 முதல் 14 வயது வரையிலான ஒவ்வொரு சிறுவரும் தொடக்கக் கல்வியைக் கட்டாயமாகவும் இலவசமாகவும் பெறுவதற்கு இச்சட்டம் வழி செய்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது, போதிய தகுதி பெறாத தொடக்கப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் இச்சட்டத்தின்படி உரிய தகுதியைப் பெற வேண்டும் என்று இச்சட்டத்தின் 23(2) பிரிவு குறிப்பிடுகிறது. இந்த கட்டாய – இலவசக் கல்விச் சட்டத்தின் கீழ் அவர்கள் ஐந்தாண்டுக்குள், அதாவது 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் பயிற்சி பெற வேண்டும்.
எனினும், பல மாநிலங்கள் தொடக்கக் கல்வி நிலையில் மொத்தமுள்ள 66.41 லட்சம் ஆசிரியர்களில் 11 லட்சம் ஆசிரியர்கள் இன்னும் போதிய பயிற்சி பெறாதவர்கள் என்று பல மாநிலங்கள் அறிக்கை அளித்துள்ளன. இந்த 11 லட்சம் பேரில் 5.12 லட்சம் பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிகின்றனர் என்றும் மீதம் 5.98 லட்சம் பேர் தனியார் பள்ளியில் பணிபுரிகின்றனர் என்றும் அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே, 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து ஆசிரியர்களும் கல்விக் குழு வகுதித்துள்ள போதிய தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக பயிற்சிக் காலத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2019ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையில் நீடிப்பது அவசியமாகிறது.
*****