Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கென்யாவில் கட்ச்சி லேவா படேல் சமூகத்தவர்களுடன் காணொலிக் காட்சி மூலமான கலந்துரையாடலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை (2018 மார்ச் 30)


 

பெரியவர்கள், தாய்மார்கள், சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது தொழில்நுட்ப காலம். `தொழில்நுட்பம்’ என்ற இந்த அற்புதத்தின் காரணமாக, ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து உங்களுடன் என்னால் தொடர்பு கொள்ள முடிகிறது! உங்கள் முகங்களில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் என்னால் காண முடிகிறது.

நைரோபி மேற்கு வளாகத்தின் வெள்ளி விழாவை நாம் கொண்டாடுகிறோம். கென்யாவில் கட்ச்சி லேவா படேல் சமூகத்தில் நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளுக்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Top of Form

 

சகோதர சகோதரிகளே,

இந்த வளாகம் 25 ஆண்டுகளாக இருக்கிறது என்றாலும், கிழக்கு ஆப்பிரிக்காவின் வளர்ச்சியில் கட்ச்சி லேவா படேல் சமூகத்தவர்களின் பங்களிப்பு 125 ஆண்டுகளுக்கும் மேல் பழமைானது. கிழக்கு ஆப்பிரிகாவின் வளர்ச்சிக்காக பல பத்தாண்டுகளாக நீங்கள் அனைவரும் ஆக்கபூர்வமாக பாடுபட்டிருக்கிறீர்கள். கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்புத் துறைகளில் உங்களுடைய நலன் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி அனைவரும் அறிந்திருக்கின்றனர்.

பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை வசதிகளையும், குறைந்த செலவில் வீடுகள் கட்டித் தரும் சேவையிலும் நீங்கள் பணியாற்றுவது மிகவும் பாராட்டுக்குரியதாக உள்ளது. கென்யாவில் குழந்தைகள், ஏழைப் பெண்களுக்காக நீங்கள் நடத்தும் அறக்கட்டளையும் பாராட்டுக்குரியது. சொல்லப்போனால் கென்யாவில் இந்திய சமூகத்தவர்களின் பங்களிப்பு கடின உழைப்புடன் நின்றுவிடாமல், தியாகமாகவும்  உள்ளது.

மக்கான் சிங், திருவாளர் எம்.ஏ. தேசாய், திரு. பியோ காமா பின்ட்டோ போன்ற பல இந்தியர்கள், கென்யாவின் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகு தொழிற்சாலைகளை உருவாக்கவும், கென்யாவின் வளர்ச்சிக்காக சமூகசேவைத் துறையிலும் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

காலனி ஆட்சிக் காலத்தில் ரயில் பாதைகள் அமைப்பதற்காக கென்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், இந்தக் காரணத்தால் தான் இப்போது அங்கு வளமை மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மனதில் இந்தியாவை பதிய வைத்துக் கொண்டிருக்கும் இந்த மக்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் புதிய சக்தியைப் பாய்ச்சுவதற்கு தடையின்றி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மணிலால் பிரேம்சந்த் சண்டாரியா, திரு. பெரோஸ் நவ்ரோஸ் மற்றும் டாக்டர் எஃப்.ஆர்.எஸ். டிசௌசா ஆகிய மூன்று ஜாம்பவான்களுக்கும் பிரவசி பாரதிய சம்மான் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 2016ல் நான் கென்யாவுக்கு வந்தபோது, அரசு கம்பீரமான வரவேற்பு அளித்தது. உங்கள் தரப்பிலான பெரிய கவுரவமாக இருந்தது. கசராணி அரங்கில் ஆயிரக்கணக்கில் நீங்கள் வந்திருந்து என் மீது அன்பையும் ஆசிகளையும் பொழிந்ததைக் கண்டு நான் திக்குமுக்காடிப் போனேன். இன்றும் நான்  அதை நினைவில் வைத்திருக்கிறேன். உங்களில் பலர் அந்த நிகழ்ச்சியில் இருந்தீர்கள்.

நண்பர்களே, பல பத்தாண்டுகள் கடந்த சூழ்நிலைகள் உங்களை இந்தியாவில் இருந்து தொலைவில் வைத்திருந்தாலும், உங்களில் ஒரு பகுதியினர் அங்கே அதன் மண்ணில் இருக்கிறீர்கள். உங்கள் மனம் உங்கள் அனைவரையும் இந்தியாவுடன், பிரிக்க முடியாத தொடர்பில் வைத்திருக்கின்றன.

குஜராத்தி மொழியில் ‘kalam ne Jya vavi tya ugi nikali’ என்று ஒரு பழமொழி உண்டு, நீங்கள் அனைவரும், இது சரியென்று நிரூபித்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் கென்ய சமூகத்தவருடன் இயைந்து போயிருக்கிறீர்கள். உங்களில் பலருக்கு கென்யா பாஸ்போர்ட் இருக்கிறது. இருந்தபோதிலும், அதே சமயத்தில் உங்களுக்குள் இந்தியத் தன்மையை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதன் மூலம் இதை என்னால் உணர முடிகிறது. வேறொரு பழமொழியும் உண்டு, ‘kachhdo khele khalak me, jee mahasagar me bach, je te hekro kachhi vase, o tadiyandi Kutch’. பெருங்கடலில் ஒரு முதலை அங்குமிங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருப்பதைப் போல, கட்ச்  சமூகத்தவர்கள் உலகெங்கும் சுற்றி வருவார்கள், எங்கெல்லாம் கட்ச் சமூகத்தவர்கள் குடியேறுகிறார்களோ அந்த இடம் புதிய கட்ச் ஆக சில தினங்களில் மாறிவிடும்.

கென்யாவில் இருந்தாலும் அல்லது கட்ச்-ல் இருந்தாலும், சவால்களை வாய்ப்புகளாக மாற்றக் கூடியவர்களாக கட்ச்  சகோதர சகோதரிகள் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். 2001-ல் பூகம்பத்தால் குஜராத்தில் பேரழிவு ஏற்பட்ட பிறகு, கட்ச்  பகுதி ஒருபோதும் மீண்டு எழ முடியாது என்று மக்கள் நினைத்தார்கள். இருந்தபோதிலும், கட்ச் மக்களின் கடின உழைப்பால், சில ஆண்டுகளிலேயே அந்தக் கருத்துகள் பொய்யாகிப் போயின.

கட்ச் பகுதியின் வறண்ட நிலங்கள் இப்போது சுற்றுலாத் தலமாகிவிட்டன. ஒரு காலத்தில் கட்ச் பகுதி வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத அல்லது போக்குவரத்து தொடர்புகள் இல்லாத தனித்துவிடப்பட்ட பகுதியாக இருந்தது. இன்று அதே கட்ச் பகுதி நாட்டின் சுற்றுலா வரைபடத்தில் அழகிய இடமாக உள்ளது. உங்களில் பலர் ரணோத்சவத்தில் பங்கேற்றிருப்பீர்கள்; இல்லாவிட்டால் நீங்கள் அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது கட்ச்-இன் கலாசாரத்தைக் காட்டுவதாக மட்டுமின்றி, அபார பொருளாதார வளர்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் கட்ச் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்ச் பகுதியில் பல மாதங்களாக தண்ணீரே கிடைக்காத நிலை ஒரு காலத்தில் இருந்தது என்பதை இளைய தலைமுறையினருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். கோடைக்காலங்களில் கட்ச்  பகுதி மக்கள் வீடுகளையும், கால் நடைகளையும் விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்தது. தண்ணீருக்காக அவர்கள் ஏங்கியிருந்தனர். இப்போது சர்தார் சரோவர் அணை மூலமாக, கட்ச் பகுதிக்கு நர்மதை தண்ணீரை எங்கள் அரசு கொடுத்துள்ளது. டப்பர் அணை வரையில் தண்ணீர் வந்துவிட்டது. அதனால் இன்றைக்கு கட்ச் பகுதியில் ஏராளமான கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் நர்மதை தண்ணீர் கிடைக்கிறது. கட்ச் பகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசும், மாநில அரசும் இரண்டு இயந்திரங்களைப் போல செயல்படுகின்றன. இரட்டை இயந்திரங்களின் சக்தியை அவை அளிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் கட்ச் பகுதியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கட்ச் பகுதியில் சுமார் 50,000 ஏக்கரில் கடலோர பொருளாதார மண்டலம் உருவாக்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. கட்ச் துறைமுகத்தை ஒரு ஸ்மார்ட் தொழிற்சாலை துறைமுகமாக மேம்படுத்தும் திட்டமும் உள்ளது.

கடந்த ஆண்டு கோகா-டாஹெஜ் ரோ-ரோ சேவையை அரசு தொடங்கி வைத்தது. அதேபோல கட்ச் பகுதியில் அகாட் -லும் ரோ-ரோ சேவை தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. கட்ச் மற்றும் ஜாம்நகர் இடையே இந்தச் சேவையைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். இந்தத் திட்டத்துக்கான சுருக்கமான சாத்தியக்கூறு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இந்த ரோ-ரோ படகு சேவை சௌராஷ்டிரா மற்றும் கட்ச் இடையிலான தூரத்தைக் குறைக்கும். கட்ச்  பகுதியின் பொருளாதார வளர்ச்சி, ஒட்டுமொத்த குஜராத்தையும் மேம்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக குஜராத்தின் வளர்ச்சி, ஒட்டுமொத்தமாக நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கடந்த 17-18 ஆண்டுகளில் குஜராத் மக்களால், இந்திய மக்களால் குஜராத் மாடல் உருவாக்கப்பட்டது. இப்போது இந்தியாவுக்கான வளர்ச்சிக்குரிய மாடலாக மாறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு முதலீடுகளை ஈர்க்க துடிப்பான குஜராத் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டது. வடக்கு முதல் தெற்கு வரையில், கிழக்கு முதல் மேற்கு வரையில் நாட்டில் பல்வேறு மாநிலங்கள் அந்த மாடலை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தின. இன்றைக்கு குஜராத்தின் வளர்ச்சியைப் பார்த்து, பல்வேறு நாடுகளின் அதிபர்கள், துணை அதிபர்கள், பிரதமர்கள்  இந்த மாநிலத்துக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சீன பிரதமர் க்ஸி ஜின்பிங், கென்ய அதிபர் ஆகியோர் குஜராத்துக்கு வருகை தருவதில் ஆர்வம் காட்டி, அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளைக் கண்டறிந்தனர்.

துடிப்பான குஜராத் மாநாட்டிலும் கென்ய அதிபர் கலந்து கொண்டார். ஆர்வத்துடன் அவர் பங்கேற்றார். இந்தியாவுக்கு வருகை தராதவர்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அலகாபாத் நகரில் நடைபெறும் கும்ப மேளாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பமேளா நடைபெறுகிறது. ஒவ்வொருவரும், குறிப்பாக மூத்தவர்கள் கும்பமேளாவில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். அடுத்த ஆண்டு 2019 ஜனவரியில், இது அலகாபாத் நகரில் ஒன்றரை மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும். ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்தியர்கள், இந்தியாவைப் பார்க்காமல் இருக்கக் கூடாது என்பது எனது கோரிக்கை.

நாட்டின் கலாசாரத்தை ஆன்மிக வழியில் புரிந்து கொள்வதற்கும், பார்ப்பதற்கும் இது அழகான ஒரு வாய்ப்பு. கும்பமேளா சமயத்தில் இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வதற்கான திட்டமிடலை தொடங்க வேண்டிய தருணம் இது. கும்பமேளாவில் பங்கேற்க நீங்கள் திட்டமிடுவதாக இருந்தால், குஜராத்தில் ரணோத்சவத்திலும் பங்கேற்க வேண்டும். மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான காலக்கட்டத்தை இந்தியா கடந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரக் கொள்கை அல்லது சமூக முன்னேற்றத்துக்கான கொள்கையில் முன்னெடுத்துச்  சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கான செயல்பாட்டை வேகப்படுத்துவதற்கும், ஊழலை ஒழிக்கவும், பயங்கரவாதத்தை ஒடுக்கவும் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கும் புதிய பரிமாணத்தை எங்கள் அரசு கொடுத்துள்ளது. கென்யாவுடன் மட்டுமின்றி ஆப்பிரிக்க கண்டம் முழுவதிலும் உள்ள நாடுகளுடன் கடந்த மூன்று – நான்கு ஆண்டுகளில் உறவுகளை இந்தியா பலப்படுத்தி வருகிறது. எங்களுடைய ஆட்சிக் காலத்தில் – குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர்- என மூன்று பேரும் 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறோம். மேலும், இந்தியா – ஆப்பிரிக்கா உச்சிமாநாடும் இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் 54 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 41 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். ஒரு வகையில் அது ஒரு சாதனை.

உச்சி மாநாட்டின்போது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி உதவியை இந்தியா அறிவித்தது. கடந்த ஆண்டு மே மாதத்தில், ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் கூட்டம் ஆமதாபாத் நகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், வங்கிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர். சிறிய ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் இந்திய பூர்வீகக் குடிமக்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், சமீபகாலத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் 18 புதிய தூதரகங்களை இந்தியா திறந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் 18 புதிய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களைத் திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது என்பதைத் தெரிவிக்க நான் விரும்புகிறேன். இதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கு புதிய துணைத் தூதரகங்களும், தூதரகங்களும் உதவிகரமாக இருக்கும். அத்துடன், ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள இந்திய சமூகத்தவர்களுக்கும் இது உதவிகரமாக இருக்கும். கென்யாவுடன் வலுவான உறவுகளை எங்கள் அரசு உருவாக்கி வருகிறது. கல்வி மற்றும் சமூகத் துறைகளில் கென்யாவுக்கு இந்திய அரசு நிதி உதவிகள் அளித்து வருகிறது. உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், குறைந்த செலவில் வீடுகள், அனைவருக்கும் ஆரோக்கியம் போன்ற திட்டங்களுக்கு இந்திய அரசு நிதி உதவி அளித்து வருகிறது. தொழில் திறன் வளர்ச்சியில் புதிய வேலைவாய்ப்புகளை எங்கள் அரசாங்கம் உருவாக்கி வருகிறது. இந்தியாவின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் கூட்டத்தை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் படித்த மாணவர்களின் குழு ஒன்றை இந்தச்  சங்கம் உருவாக்கியுள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் உறவை உலகெங்கும் பலப்படுத்துவதற்கு நிரந்தர தூதர்கள் என்று இருந்தால், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, உலகெங்கும் உள்ள இந்திய சமூகத்தவர்களான, இந்திய வம்சாவளியினரான நீங்கள் தான் அதற்கு உதவமுடியும் என்று நான் நம்புகிறேன். வழக்கமாக அரசு தான் தூதர்களை நியமிக்கும். ஆனால் உண்மையான வகையில் பார்த்தால் நீங்கள் தான் நாட்டின் தூதர்களாக இருக்கிறீர்கள். டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் வெளிப்படையான பொருளாதாரத்திற்கான m – pesa -வின் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

M -pesa ஒரு மாடல் ஆகிவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் ஏராளமான முடிவுகள் எடுக்கப் படுகின்றன. இந்தியாவில் Bhim செயலி மிகவும் பிரபலமாக உள்ளது. நீங்களும் உங்களுடைய செல்போன்களில் Bhim செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்ச் உடன் நீங்கள் விசேஷ உறவு கொண்டிருக்கிறீர்கள். கட்ச் -இல் மழை பொழிந்தால் நீங்கள்  புட்டிங் தயாரிக்கிறீர்கள். அந்த அளவுக்கு கட்ச் உடன் உங்களுக்கு நேசம் இருக்கிறது. கட்ச்  மக்களுடன்  நீங்கள் தினமும் உரையாடுகிறீர்கள். M -pesa மூலம் கொண்டுவரப்படும் மாற்றங்கள் பற்றி கட்ச்  மக்களுக்கு விளக்கிடுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். அதேபோல கட்ச் சகோதரர்கள் Bhim செயலி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை நீங்கள் கேட்டுக் கொண்டால், அவர்கள் அதைக் கேட்பார்கள்.

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள், உங்களுக்கு உயர்வான மரியாதை இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் அல்லது குடிபெயர்ந்த இந்தியர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும், அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் எப்போதும் எங்கள் அரசு முயற்சி செய்து வருகிறது. முன்பு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு தனியாக ஓர் அமைச்சகம் செயல்பட்டு வந்தது. ஆனால், அதன் காரணமாக வெளியுறவு அமைச்சகத்துடன் ஒத்துழைப்பில் குறைபாடு இருப்பதாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இருந்து எங்களுக்கு கருத்துகள் வந்தன. எனவே, உங்கள் கோரிக்கைகளின்படி, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, இரு அமைச்சகங்களையும் ஒன்றாக சேர்த்துவிட்டோம். முன்பு P IO மற்றும் O I திட்டங்கள் தனித்தனியாக இருந்தன. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பலருக்குத் தெரியவில்லை. இந்த இரு திட்டங்களின் செயல்முறைகளை நாங்கள் எளிமைப்படுத்தி, இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நீக்கியிருக்கிறோம். MADAD என்ற முனையத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். `இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரக நிர்வாகம் பற்றி உடனுக்குடன் தகவல் அறியவும், பதில்களைப் பெறவும் இது தொடங்கப் பட்டுள்ளது. இந்த முனையத்தில் சென்று அரசுடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். இப்போது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவசி பாரதிய திவஸ் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அத்துடன், பிராந்திய பிரவசி பாரதிய திவஸ் -ம் கொண்டாடப்படுகிறது. எங்கள் ஆட்சி நிர்வாகத்தின் கடந்த 4 ஆண்டுகளில், இந்தியாவின்  நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

சகோதர சகோதரிகளே,

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில், இந்தியாவைப் பற்றி உலகின் எண்ணங்கள் ஆக்கபூர்வமான வகையில் மாறி இருப்பதையும், இந்தியா பற்றிய உணர்வுகள் ஆக்கபூர்வமாக மாறி இருப்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இந்திய பாஸ்போர்ட்களின் பலத்தை வெளிநாடுகளில் ஒருவரால் உணர முடியும். நடைமுறையில் அனைத்து மாறுதல்களை தெளிவாகக் காண முடியும். ஒவ்வொரு துறையிலும் பலன்களைக் காண முடியும்; பொருளாதார வளர்ச்சி அல்லது சமூக வளர்ச்சி என எதுவாக இருந்தாலும் பலன்களைக் காண முடியும். இது உங்களுடைய நாடு. புதிய இந்தியா என்ற கனவை நனவாக்குவதில், ஒவ்வொரு இந்தியரும் முயற்சிகள் எடுத்து, அதை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்களுடைய அனுபவங்கள் மற்றும் ஆசிகள் இருந்தால், புதிய இந்தியா என்ற கனவை எட்டுவது எளிதாகிவிடும். ஸ்ரீ கட்ச் லேவா படேல் சமூக வெள்ளி விழா கொண்டாட்டத்துக்கு மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

ஜெய் சுவாமி நாராயண்!    

*****