பி.எம்.இந்தியா
இன்று 2017ஆம் ஆண்டின் கடைசி நாள். இத்தருணத்தில் மேன்மைமிகு நாராயண குரு, இன்று மேடையில் வீற்றிருக்கும் அனைத்து சாதுக்கள் ஆகியோரின் ஆசிகளைக் கோருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது எனக்குக் கிடைத்த மிகப்பெரும் அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். மேன்மைமிகு நாராயண குருவின் ஆசிகளுடன் 2018ஆம் ஆண்டின் முதல் சூரிய ஒளிக்கிரணங்கள் அமைதியையும், நல்லெண்ணத்தையும் நமது நாட்டிற்கும் உலகம் முழுவதற்குமான வளர்ச்சிக்கான புதிய ஒளியையும் கொண்டு வரும் என நம்புகிறேன். சிவகிரி மடத்திற்கு வருகை தருவதென்பது எப்போதுமே நான் ஆன்மிக வரமாகவே கருதி வந்துள்ளேன். இந்த புனித யாத்திரையைத் துவக்கி வைக்க எனக்கு வாய்ப்பு கொடுத்ததன்மூலம் நீங்கள் அந்த மகிழ்ச்சியை மேலும் அதிகரித்திருக்கிறீர்கள். இதற்காக ஸ்ரீ நாராயண தர்ம சங்க அறக்கட்டளை மற்றும் உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
சகோதர, சகோதரிகளே,
உள்ளே பொதிந்துள்ள பலவீனங்களையும் தீமைகளையும் நமது சமூகத்திலிருந்து அகற்றுவது என்ற செயல்முறை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதே நமது நாட்டின், நமது சமூகத்தின் குறிப்பிடத்தக்க குணாம்சங்களில் ஒன்றாக உள்ளது. பல்வேறு காலங்களிலும் இந்தச் செயல்முறையை மேலும் தீவிரப்படுத்துவதில் நமது ஞானிகளும், முனிவர்களும், மகத்தான உள்ளம் படைத்தவர்களும் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வந்திருக்கின்றனர். இத்தகைய தீமைகளை நமது சமூகத்திலிருந்து அகற்றுவதற்காக இந்தத் தூய உள்ளம் கொண்டவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையுமே செலவிட்டு வந்துள்ளனர்.
மிகவும் மரியாதைக்குரிய தூய்மையான உள்ளம் கொண்ட சுவாமி நாராயண குருஜி இன, வர்க்க வேறுபாடுகள், கம்யூனிசம் ஆகியவற்றுக்கு எதிராக சமூகத்தை விழிப்புறச் செய்ய முனைந்தவர் ஆவார். கல்வித் துறையிலும் அல்லது சமூகத்திலுள்ள தீமைகள், தீண்டாமை போன்றவற்றை அகற்றுவதற்கான அவரது முயற்சிகளிலும் வெற்றி பெறுவதென்பது ஸ்ரீ நாராயண குருவிற்கு அவ்வளவு எளிதான ஒன்றல்ல. இந்தப் போராட்ட காலத்தின்போது அவர் எண்ணற்ற இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்தது.
நண்பர்களே,
“கல்வியின் மூலம் விடுதலை
அமைப்பின் மூலம் வலிமை
தொழிற்சாலைகளின் மூலம் பொருளாதார சுதந்திரம்”
என்பதே ஸ்ரீ நாராயண குருஜியின் தாரக மந்திரமாக இருந்து வந்தது.
சமூகத்தை மேம்படுத்துவதற்காகவும், தலித்துகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சுயவலிமையை உருவாக்கவும் அவர் ஒரு சில வழிமுறைகளை முன்வைத்தார். கல்வி என்ற வலிமையை அவர்கள் பெறும்போதுதான் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் முன்னேறிச் செல்ல முடியும் என்றும் அவர் நம்பினார். சமூகம் முழுமையாக கல்வி பெறும்போதுதான் நமது ஆன்மா நம்பிக்கை, சுய மதிப்பீடு ஆகியவற்றால் நிரம்பும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான், கேரளாவில் மட்டுமல்ல; அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கல்வியை வளர்த்தெடுப்பதற்காக, நிறுவனங்களை அவர் உருவாக்கினார். இன்று, ஸ்ரீ நாராயண குருவின் தொலைநோக்கினைப் பரப்பும் வகையில் நாட்டிற்குள்ளேயும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
தனது தொலைநோக்குடன் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் இணைத்துக்கொள்ளும் திசைவழியில் ஸ்ரீ நாராயண குரு செயல்பட்டு வந்தார். அதிசயங்களைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக கோயில்களில் உண்மையையும், தூய்மையையும் அவர் வளர்த்தெடுத்து வந்தார். கோயில்களில் நிலவும் சூழலைக் கெடுக்கும்படியான ஒவ்வொரு சடங்கையும் அவர் மாற்றி அமைத்தார். வழிபாட்டில் அதுவரை இருந்து வந்த தேவையற்ற சடங்குகளை அகற்றி புதியதொரு மேலாண்மை முறையை ஸ்ரீ நாராயண குருஜி கொண்டு வந்தார். கோவில்களில் வழிபடுவதற்கான ஒவ்வொருவரின் உரிமையையும் அவர் உறுதிப்படுத்தினார். ஒருவகையில் பார்க்கும்போது, சமூக சீர்திருத்தம் குறித்த அவரது விரிந்த பரந்த தொலைநோக்கின் விரிவாக்கமாகவே சிவகிரி யாத்திரை அமைகிறது. கல்வி, தூய்மை, உண்மையின் வலிமை, ஒற்றுமை, அறிவு, அறிவியல், விவசாயிகள் ஆகியவற்றோடு தொடர்புடையதாகவே இந்த சிவகிரி யாத்திரை விளங்குகிறது. இந்த யாத்திரையின் இலக்குகளுக்கு இவற்றின் மேம்பாடும் உள்ளீடாக அமைந்துள்ளன. இதுவே ஸ்ரீ நாராயண குருவின் தொலைநோக்கிற்கான அறிகுறியும் ஆகும்.
“நடைமுறை வாழ்வில் பொதிந்துள்ள அனைத்து அறிவையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு மக்களும் நாடும் முன்னேறுவதோடு வளமும் பெறும். இதுதான் சிவகிரி யாத்திரையின் முக்கிய நோக்கமாகும்.” என அவர் கூறியிருந்தார்.
கடந்த 85 வருடங்களாக சிவகிரி யாத்திரை நடைபெறும் ஒவ்வொரு முறையும் இந்த துறைகளில் உள்ள நிபுணர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் அனுபவங்கள் கேட்கப்படுகின்றன என்பதறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இன்றும் கூட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்குகொள்ளவிருக்கிறார்கள். உங்கள் அனைவரையும் நான் வரவேற்றுப் பாராட்டுவதோடு, உங்கள் கருத்துகளிலிருந்து மக்கள் ஏதாவது புதிய ஒன்றை கற்றுக்கொள்ள முடியும் என்றும் நம்புகிறேன்.
சகோதர, சகோதரிகளே,
சிவகிரி யாத்திரை என்பது ஒருவகையான அறிவு நிரம்பியோடும் ஆற்றைப் போன்றது; அதில் மூழ்கியெழுபவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் தெய்வீக உணர்வை அடைவார்கள்.
கும்ப மேளாவின் போதும்கூட, நமது விரிந்து பரந்த நாட்டை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஞானிகளும், முனிவர்களும் ஒன்றாகக் கூடி, சமூகத்தின் பிரச்சனைகளையும், துயரங்களையும் விவாதித்தனர். கடந்த பல ஆண்டுகளில் இதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், கும்பமேளாவில் ஒருவித தனித்துவம் இருந்து வருகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்குப் பிறகும் ஞானிகள் ஒன்றுகூடி சமூகத்தின் எதிர்காலம் குறித்தும், நாடு எத்திசையில் செல்ல வேண்டும் என்பது குறித்தும், சமூகம் எத்திசை வழியில் செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தீர்மானிக்கின்றனர். ஒருவகையில் இவை அனைத்தும் சமூகரீதியான தீர்மானங்கள் என்றும் கூறலாம். அதன்பிறகு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளிலும் நாசிக், உஜ்ஜெயின், சில நேரங்களில் கும்ப மேளா நடைபெறும் காலத்தில் ஹரித்துவாரிலும் இவை அலசி ஆராயப்படுகின்றன. இவை அனைத்துமே முறையாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டின் இறுதியில் அத்தகைய தருணத்தில் நீங்கள் அனைவரும் ஒன்று கூடும்போது, கடந்த ஆண்டில் நடைபெற்ற விவாதங்களின் முடிவுகள் குறித்தும், இலக்குகளை அடைவதற்காக ஸ்ரீ நாராயண குரு காட்டிய பாதையில் நாம் சிறிதளவாவது முன்னேறியிருக்கிறோமா? என்றும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறும் என்றும் நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
அது சிவகிரி யாத்திரையோ, அல்லது கும்ப மேளாவோ அல்லது உள்ளார்ந்த தீமைகளிலிருந்து நாட்டை விடுவிக்க முயலும் வேறெந்த சடங்காக இருந்தாலும் சரி, இவை இன்றும் கூட முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இத்தகைய யாத்திரைகளை மேற்கொள்வதென்பது நாட்டை ஒன்றுபடுத்துவதிலும் உதவி செய்கிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, பல்வேறு கருத்தோட்டங்களைக் கொண்ட மக்கள் இத்தகைய செயல்பாட்டின் மூலம் ஒவ்வொருவரின் பாரம்பரியங்களையும் அறிந்து கொண்டு ஒன்றுபடுகின்றனர்.
நண்பர்களே,
ஆதி சங்கரர் தனது அத்வைத தத்துவத்தை புனிதபூமியான கேரளாவில் பரப்பினார். அத்வைத தத்துவத்தின் மிக எளிமையான பொருள் என்பது பிரிவினை என்பது இல்லாமல் இருப்பதாகும். அதாவது நானும் நீங்களும் இரண்டு வேறுபட்டவர்கள் அல்ல; இருவரும் ஒருவரே. இந்த வெளிப்பாடுதான் அத்வைதத்தின் உள்ளார்ந்த பொருள். ஸ்ரீ நாராயண குருவும் இந்தப் பாதையைத்தான் காட்டினார். ஸ்ரீ நாராயண குரு தனது கொள்கை வழிப்படி மட்டுமே வாழ்ந்தவரல்ல; உலக சமூகம் முழுவதற்குமே அந்தப் பாதையைக் காட்டியவரும் ஆவார்.
சகோதர, சகோதரிகளே,
சிவகிரி யாத்திரையை துவங்குவதற்கு முன்பாகவே, ஸ்ரீ நாராயண குருவின் தலைமையில் அத்வைத் ஆசிரமத்தில் மதரீதியான பாராளுமன்றம் நடத்தப்பட்டது. உலகம் முழுவதிலிருந்தும் பலவேறு தரப்பையும் சேர்ந்த மக்கள் அதில் பங்கேற்றனர். மதத்தின் அடிப்படையிலான மோதலை கைவிட்டுவிடுமாறும், அமைதி, நல்லெண்ணம், வளம் ஆகிய பாதையில் நடைபோடும்படியும் இந்த பாராளுமன்றம் வேண்டுகோள் விடுத்தது.
இந்தப் பாராளுமன்றம் நடைபெறும் இடத்தின் முகப்பில் கீழ்க்கண்ட வார்த்தைகள் ஸ்ரீ நாராயண குருவின் வழிகாட்டுதலின்படி பொறிக்கப்பட்டன என்று என்னிடம் கூறப்பட்டது:
“இங்கே நாம் வாதாடவும் வெற்றி பெறுவதற்காகவோ அல்ல; தெரிந்து கொள்வதற்கும் தெரிவதற்குமே கூடியிருக்கிறோம்”
ஒருவரோடு ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்குமான இந்த முயற்சிதான் மிகவும் முக்கியமானதாகும்.
இன்று நாம் உலகளாவிய சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசுகிறோம் எனில், இந்த நெருக்கடியை நமது ஞானிகள் முன்கூட்டியே உணர்ந்து, நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர் என்பதையும் நம்மால் காண முடியும்.
சகோதர, சகோதரிகளே,
18வது, 19வது நூற்றாண்டில் சமூக ரீதியான, மத ரீதியான சீர்திருத்தவாதத் தலைவர்கள் விடுதலை இயக்கத்தில் எண்ணற்ற பங்களிப்புகளைச் செய்துள்ளனர். பல்வேறு சாதிகளாகவும், குழுக்களாகவும் பிளவுபட்டுள்ள சமூகத்தால் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடியிருக்க முடியாது. இந்தப் பலவீனத்திலிருந்து விடுபடுவதற்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சாதியத்திற்கு எதிராக பிரம்மாண்டமான இயக்கங்கள் நடைபெற்றன. இந்த இயக்கங்கள், சீர்திருத்தத் திட்டங்கள் ஆகியவற்றின் மையக் கருத்து நாட்டை முன்னெடுத்துச் செல்வது அவசியமாக உள்ளது என்பதும், அடிமைத்தனத்தின் விலங்கொடிக்க வேண்டும் என்பதும், நமது உள்ளார்ந்த பலவீனங்களை வென்றெடுக்க வேண்டும் என்பதுமே ஆகும். இந்த இயக்கங்களின் பொறுப்பில் இருந்தவர்களும் நாட்டின் சாதாரண மக்கள் மீது மிகுந்த மரியாதை கொடுத்தே வந்தனர். நாட்டின் தேவையை உணர்ந்த வகையில் தேசத்தை வளர்த்தெடுக்கும் செயலோடு ஆன்மீக ரீதியான பயணத்தையும் அவர்கள் இணைத்தனர். சாதிய முறையிலிருந்து தங்களது எண்ணங்களை மக்கள் விடுவித்துக் கொண்டபோது நாடு மேலெழுந்தது. இந்தியாவின் ஒன்றுபட்ட மக்கள் பிரிட்டிஷாரின் அதிகாரத்தை உடைத்து நொறுக்கினர்.
நண்பர்களே.
அதேபோன்றதொரு சூழ்நிலையை நமது நாடு இன்று மீண்டும் எதிர்நோக்குகிறது. நமது நாடு அதன் உள்ளேயிருக்கும் பலவீனங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றும் இந்த நாட்டின் மக்கள் விரும்புகின்றனர். இந்த விஷயத்தில் இது போன்ற ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் உயிரோட்டமான பங்கினை செலுத்தி வருகின்றன. இனவெறி மட்டுமல்ல, நாட்டிற்கு ஊறுவிளைவிக்கும் சமூகத்தின் இதர தீங்குகளையும் அகற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை உருவாகும் திசைவழியில் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. 1947 ஆகஸ்ட் 15 அன்று நமது அடிமைச்சங்கிலியை உடைத்தெறிந்தோம் எனினும் அந்தச் சங்கிலிகள் பதிவுகள் இன்னமும் நமது சமூக-பொருளாதார அமைப்பில் தென்பட்டு வருகின்றன. உங்களின் ஆதரவுடன் மட்டுமே இதிலிருந்து நம்மால் விடுதலை பெற முடியும்.
சகோதர, சகோதரிகளே,
ஜோதிபா புலே, சாவித்திரிபாய், ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தயானந்த சரஸ்வதி போன்ற மாபெரும் உள்ளங்கள் சமூகத்தில் பெண்களுக்கான பெருமை, மதிப்பு ஆகியவற்றுக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் போராடியவர்கள் ஆவர். நாட்டில் பெண்களின் உரிமைகளுக்காக எவ்வாறு பல பிரம்மாண்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைக் காணும்போது அவர்களின் ஆன்மா மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும்.
முத்தலாக் பிரச்சனையின் விளைவாக நீண்ட காலத்திற்கு நமது முஸ்லீம் தாய்மார்களும், சகோதரிகளும் பாதிக்கப்பட்டு வந்தனர் என்ற உண்மையை இனிமேலும் மறைத்து வைக்க முடியாது. இத்தகைய நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு இந்த முத்தலாக்கில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சகோதர, சகோதரிகளே,
வெறுமனே பேசிக் கொண்டிருப்பதாலோ அல்லது சடங்குகளை செய்து கொண்டிருப்பதாலோ ஒருவரால் நாராயணனாக தன்னை மாற்றிக் கொள்ள முடியாது; ஏதாவதொன்றை சாதிப்பதன் மூலமே அத்தகைய நிலையைப் பெற முடியும் என நமது ஞானிகளும், முனிவர்களும், துறவிகளும் கூறியிருக்கின்றனர். உறுதியோடு அடைந்தே தீர்வது என்பதே இத்தகைய சாதனைக்கான எமது தாரக மந்திரமாக உள்ளது. 125 கோடி இந்தியர்களின் புதிய இந்தியாவை நோக்கிய பயணமாக அது அமைகிறது.
2018ஆம் ஆண்டில் இந்தப் பயணம் மேலும் துரிதப்படுத்தப்படும். 2018ஆம் ஆண்டில் கருப்புப்பணத்திற்கு, ஊழலுக்கு, பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கரவாதம், இனவெறி ஆகியவற்றுக்கு எதிராகவும், கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாகவும், சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற தாரக மந்திரத்தை நோக்கி நடைபோடுவதன் மூலமாகவும், அதே நேரத்தில் அனைவரோடும் இணைந்து அனைவருக்குமான வளத்தை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகவும் நமது நாட்டை புதிய உச்சங்களுக்கு இந்தியர்களாகிய நாம் அனைவரும் எடுத்துச் செல்வோம். இந்த நோக்கங்களோடும் உறுதிமொழிகளோடும் எனது உரையை முடிக்க நான் விரும்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும், ஸ்ரீ நாராயண குருவின் சீடர்களுக்கும் இந்த சிவகிரி யாத்திரை ஒட்டியும், புத்தாண்டை ஒட்டியும் மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி!
***