பி.எம்.இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை, புதிதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (AIIMS) உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்க்ஷா யோஜனா (PMSSY) திட்டத்தின் கீழ் நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.
கோரக்பூரில் இந்த புதிய கல்லூரியை நிறுவ ஆகும் செலவு 1011 கோடி ரூபாய். இதில் தொடர் செலவுகளான சம்பளம், இயக்கம், பராமரிப்பு செலவுகள் அடக்கமில்லை. இதற்காக ஆகும் செலவுகளை கல்லூரி நிர்வாகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் PMSSY பிரிவின் திட்ட செலவின ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் உதவி நன்கொடை மூலம் மேற்கொள்ளப்படும்.
மேலும் இந்தக் கல்வி நிலையத்தில் 750 படுக்கைகள், அவசரசிகிச்சைப் பிரிவு ஆயுர்வேத படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகிய வசதிகளுடன் கூடிய மருத்துவமனையும் இயங்கும். இத்துடன் நிர்வாகத்திற்கென பிரத்யேக கட்டிடம், ஆயுர்வேத மருத்துவத்திற்கு தனிப் பிரிவு, அரங்கு, இரவு தங்கும் விடுதி, வீட்டு வசதி போன்ற சிறப்பம்சங்களும் உண்டு.
கட்டப்பட இருக்கும் புதிய மருத்துவ கல்வி நிலையம் பொதுமக்களுக்கு சிறப்புத்துவம் வாய்ந்த சிகிச்சையைப் பெற வாய்ப்பு அளிப்பதோடு, தேசிய சுகாதார குறிக்கோளின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஆரம்ப மற்றும் உயர்நிலை சுகாதார நிலையங்களில் பணிபுரியக்கூடிய வகையில் நிறைய மருத்துவர்களையும், இன்னபிற மருத்துவ பணியாளர்களையும் உருவாக்கும். அந்தப் பகுதியில் அதிகமாக தென்படக்கூடிய நோய்கள் மீது ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு தீர்வு காணப்படும்.
கிழக்கு உத்திரபிரதேசத்தை சேர்ந்த கோராக்பூர், அசம்கார், பஸ்தி, தேவிபடான் உள்ளிட்ட 14 மாவட்டங்கள், மேற்கு-சம்பரன், கிழக்கு-சம்பரன், சரண், சிவன், கோபால்கஞ்ச் உள்ளிட்ட மேற்கு பீகாரின் ஐந்து மாவட்டங்கள் என இப்பகுதிகளைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் இந்த புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தால் பயனடைவார்கள்.
பின்னணி
PMSSY திட்டத்தின் கீழ் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை திறப்பதன் மைய நோக்கம் அந்த பகுதிகளில் தேவையான அளவிற்கு உயர்நிலை மருத்துவ வசதிகளை அளித்திடவும், பின்தங்கிய மாநிலங்களில் சிறப்பான மருத்துவ படிப்பை வழங்குவதற்கும் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை புவனேஷ்வர், போபால், ராய்ப்பூர், ஜோத்பூர், ரிஷிகேஷ் மற்றும் பாட்னா ஆகிய ஊர்களில் நிறுவப்பட்டுள்ளது. ரேபரேலி பகுதியில் கட்டுமானப்பணிகள் நடக்கின்றன. மேலும் நாக்பூர் (மஹாராஷ்ட்ரா), கல்யாணி (மேற்குவங்கம்) மற்றும் குண்டூரில் உள்ள மங்களகிரி (சீமாந்திரா) ஆகிய ஊர்களில் புதிதாக கட்டுவதற்கு 2015ஆம் ஆண்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.