பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.08.2026) தாஷ்கண்டில் உள்ள சாஸ்திரி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். 1965-ம் ஆண்டில் தாஷ்கண்டில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி காலமானதன் 60-வது ஆண்டு நினைவு இந்த ஆண்டு அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவிடம், லால் பகதூர் சாஸ்திரியின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தெருவில் அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கையும் பாரம்பரியமும் தாஷ்கண்டில் அன்புடன் நினைவுகூரப்படுகின்றன. நினைவிடத்தையும் தெருவையும் தவிர, தாஷ்கண்டில் அவரது பெயரில் ஒரு உள்ளூர் பள்ளியும் இந்திய கலாச்சார மையமும் உள்ளன.
சாஸ்திரி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், பிரதமர் தாஷ்கண்ட் கிழக்கத்திய ஆய்வுகள் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு, பிரதமர் திரு நரேந்திர மோடியை உஸ்பெகிஸ்தான் பிரதமரும், பல்கலைக்கழகத் தலைவரும் வரவேற்றனர். பல்கலைக்கழகத்தின் மகாத்மா காந்தி மையத்தில், இந்திய கல்வி முறை அறிஞர்கள், கல்வி ஆர்வமுள்ள பிற அறிஞர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்தப் பல்கலைக்கழகம், இந்தி மொழியையும் பிற இந்தியப் பாடங்களையும் கற்பிப்பதில் சிறந்த சாதனையைப் படைத்துள்ளது. தமது அரசுமுறைப் பயணத்தின் போது, உஸ்பெகிஸ்தான் மாணவர்கள் பயன் பெறுவதற்காக, இந்தி மொழி கற்பதற்கான லால் பகதூர் சாஸ்திரி கல்வி உதவித்தொகையை பிரதமர் அறிவித்தார். இந்த பல்கலைக்கழகத்தில் இந்தி கற்பிக்கத் தொடங்கப்பட்டு இந்த ஆண்டுடன் 80 ஆண்டுகள் ஆகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய கலாச்சார ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு, உஸ்பெகிஸ்தான் மாணவர்கள் மத்தியில் இந்தி கற்க நல்ல ஆர்வம் உள்ளது. உஸ்பெக் மொழி, இந்தி மொழி என இரண்டு மொழிகளுக்கிடையே 3000-க்கும் அதிகமான சொற்கள் பொதுவானவையாக உள்ளன.
****
(Release ID: 2304746)
SS/PLM/RJ