பி.எம்.இந்தியா
உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ்-ன் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 29 முதல் 30 வரை உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ் – பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகியோர் சுமுகமான, நட்பான, ஆக்கப்பூர்வமான சூழலில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தலைவர்களும், உஸ்பெகிஸ்தான்-இந்தியா இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை, எதிர்கால வாய்ப்புகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டனர். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான முன்னுரிமைத் துறைகளையும் அடையாளம் கண்டு ஆலோசனை நடத்தினர்.
உஸ்பெகிஸ்தான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான வலுவான ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்த உறவானது, நீண்டகால நட்புறவுப் பிணைப்புகளிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று, கலாச்சாரப் பிணைப்புகளிலும் உறுதியாக வேரூன்றியுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர். இரு நாடுகளின் ஒத்துழைப்பை, ஒரு விரிவான உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்த அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
சிக்கலான புவிசார் அரசியல் சூழ்நிலைக்கு இடையில், சுதந்திரமான, வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கின் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். இரு நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நீண்டகால, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பிற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். மேலும், வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு, போக்குவரத்து இணைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, இணையப் பாதுகாப்பு, எரிசக்தி, முக்கிய கனிமங்கள், உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், மருந்துத் தொழில், கல்வி ஆகிய துறைகளில் விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அரசியல், நாடாளுமன்ற, பாதுகாப்பு ஒத்துழைப்பு:
நம்பிக்கை அடிப்படையிலான உரையாடலைப் பேணுவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் செயலாக்கத்தை உயர் மட்டத்தில் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்கும், நிறைவேற்றுவதற்கும், வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான ஒரு செயல்முறையை நிறுவ தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
நாடாளுமன்ற ஒத்துழைப்பின் பங்கை தலைவர்கள் வலியுறுத்தியதோடு, உஸ்பெகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் இடையேயான தொடர்புகள் தீவிரமடைவதை வரவேற்றனர். இதில் நாடாளுமன்ற நட்புறவுக் குழுக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பும் கலந்துரையாடல்களும் அடங்கும்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட, அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை ஒருமனதாகக் கண்டித்தனர். பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமற்ற அணுகுமுறையை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதை இரு தலைவர்களும் நிராகரித்தனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் கட்டமைப்புகளையும், பயங்கரவாத உள்கட்டமைப்புகளையும் தகர்க்க தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். பயங்கரவாத எதிர்ப்புக்கான கூட்டுப் பணிக்குழுவின் கீழ் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
உஸ்பெகிஸ்தான் – இந்தியாவின் பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே, வழக்கமான பரிமாற்றங்கள், நிறுவன வழிமுறைகள், திறன் மேம்பாடு, கூட்டு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றைத் தலைவர்கள் பாராட்டினர். ராணுவ ஒத்துழைப்புக்கான கூட்டுப் பணிக்குழுவின் செயல்பாடுகள் குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
வர்த்தக, பொருளாதார, முதலீட்டு ஒத்துழைப்பு:
உஸ்பெகிஸ்தான் – இந்தியா இடையேயான வலுவான பொருளாதார ஒத்துழைப்பை தலைவர்கள் வரவேற்றதோடு, இருதரப்பு வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதும் பல்வகைப்படுத்துவதும் முக்கியம் என்பதைத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
உலக வர்த்தக அமைப்பில் உஸ்பெகிஸ்தான் அரசு இணைவதற்கு இந்தியாவின் ஆதரவை உஸ்பெகிஸ்தான் தரப்பு பாராட்டியது.
பரஸ்பரம் நன்மை பயக்கும் முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க, ஒரு நிறுவன வழிமுறையை நிறுவ தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
எரிசக்தி, இயற்கை வளங்கள்:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், வருங்கால முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகிய அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல்களைத் தலைவர்கள் வரவேற்றனர்.
புவியியல், சுரங்கத் தொழில், அணுசக்தி, தொழில்துறை ஒத்துழைப்பு, முக்கிய கனிமங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆராய தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். இதில் கனிம வளங்களைப் பதனப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்தல், மறுசுழற்சி முயற்சிகள் ஆகியவற்றுக்கான திட்டங்களும் அடங்கும். உஸ்பெகிஸ்தானில் உள்ள வளமிக்க கனிமப் படிவங்களை மேம்படுத்துவதில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்க ஊக்குவிப்பதிலும், இந்தியாவில் கூட்டு ஒத்துழைப்புக்காக உஸ்பெக் நிறுவனங்களை ஈடுபடுத்துவதிலும் இரு தலைவர்களும் ஆர்வம் தெரிவித்தனர்.
விவசாயம்:
வேளாண் கட்டமைப்பு மேம்பாடு, ஏற்றுமதித் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். வேளாண், கால்நடை ஆகிய துறைகளில் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
வேளாண் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதிலும், தாவர மரபணு வளங்களைப் பாதுகாத்து நிலைத்தன்மையுடன் பயன்படுத்துவதிலும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்த அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
போக்குவரத்து:
பல்முனைப் போக்குவரத்து வழித்தடங்கள், சரக்குப் போக்குவரத்து வழித்தடங்கள். ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம், உஸ்பெகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தி, பொருட்கள் தடையின்றி கொண்டு செல்லப்படுவதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.
போக்குவரத்துத் துறையில் கூட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராயவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், விண்வெளி ஒத்துழைப்பு:
இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களின் தீவிர ஆதரவுடன், 2019-ல் தாஷ்கண்டில் நிறுவப்பட்ட முதல் தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் வெற்றிகரமான செயல்பாட்டைத் தலைவர்கள் வரவேற்றனர். மேலும், இரு நாடுகளின் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
விண்வெளிப் பயன்பாடுகள், அறிவியல் தரவுகளின் பரிமாற்றம், புறவிண்வெளியின் ஆய்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதில் தங்களது ஆர்வத்தை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
கல்வி, மனிதவள மேம்பாடு, சுகாதாரம், கலாச்சாரம், விளையாட்டு, சுற்றுலா:
உஸ்பெகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய மாணவர்கள் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்பைத் தலைவர்கள் அங்கீகரித்தனர்.
உஸ்பெகிஸ்தானில் இந்திய ஆய்வுகள் தொடர்ந்து விரிவடைவதை தலைவர்கள் வரவேற்றதோடு, இந்தியாவில் உஸ்பெக் ஆய்வுகள் விரிவடைவதையும் வரவேற்றனர்.
உயிர்மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவப் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
உலகப் பாரம்பரியத் தளங்களைப் பாதுகாத்தல், புனரமைத்தல் மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.
பூப்பந்து, வில்வித்தை, சதுரங்கம் போன்ற விளையாட்டுத் துறைகளில், வீரர்களைத் தயார்படுத்துதல், பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் ஆகியவற்றில் அனுபவப் பரிமாற்றம் செய்துகொள்வதன் மூலம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
சர்வதேச ஒத்துழைப்பு:
உலக அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு முக்கிய பங்கை ஆற்ற வேண்டும் என்பதை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். ஐக்கிய நாடுகள் சபை, பிற சர்வதேச, பிராந்திய அமைப்புகளில் பரஸ்பர ஆதரவின் மூலம் தங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது பயணத்தின் போது தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக, உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ்-வுக்குத் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
உஸ்பெகிஸ்தான் அதிபரை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான தேதிகள் தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவு செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304718®=48&lang=1
***
SS/PLM/RJ
Sharing my remarks during the press meet with President Mirziyoyev of Uzbekistan. @president_uz https://t.co/gNUxFDq0Qj
— Narendra Modi (@narendramodi) August 30, 2026