Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிஎன்என் நிறுவனத்தின் பரீத் ஸக்காரியாவுக்கு பிரதமர் அளித்த பேட்டி


பரீத் ஸக்காரியா : உங்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த இருபது ஆண்டுகளாகக் கேட்கப்பட்ட கேள்வி மீண்டும் கேட்கப்படுகிறது.   அது இந்தியா அடுத்த சீனாவா  என்பதே.   இந்தியா ஆண்டுக்கு 8-9% வளர்ச்சியை எட்டி, அதைத் தொடர்ந்து நிலை நிறுத்த முடியுமா ?  அதன் மூலம் உலகையே மாற்ற முடியுமா என்பதே.

பிரதமர் :  இந்தியா வேறு எதுவாகவும் மாற வேண்டியதில்லை.  இந்தியா இந்தியாவாகவே இருக்க வேண்டும். இந்த நாடு ஒரு காலத்தில் தங்கப்பறவை என்று அழைக்கப்பட்டது.   அந்த இடத்திலிருந்து நாங்கள் வீழ்ந்துள்ளோம். ஆனால், தற்போது மீண்டு எழுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.    கடந்த ஐந்து அல்லது பத்து நூற்றாண்டுகளை பரிசீலித்தீர்கள் என்றால் இந்தியாவும் சீனாவும் ஒரே வேகத்தில் வளர்ந்துள்ளதைக் காண முடியும்.    உலக உள்நாட்டு உற்பத்திக்கான ஜி.டி.பி. இந்த இரு நாடுகளின் பங்களிப்பு ஒன்றாக வளர்ந்துள்ளது, ஒன்றாக சரிவைக் கண்டுள்ளது.  இன்றைய காலகட்டம் ஆசியாவுக்கு சொந்தமானது.   இந்தியா மற்றும் சீனா ஒன்றாக முன்னேறி வருகின்றன.    இதன் காரணமாகத்தான் இந்தியா இந்தியாவாகவே இருக்க வேண்டும்.

 

பரீத் ஸக்காரியா: இருப்பினும், சீனா கடந்த 30 ஆண்டுகளாக 8-9 சதவிகித வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.  ஆனால் இந்தியாவோ அத்தகைய வளர்ச்சியை குறுகிய காலம் மட்டுமே அடைந்துள்ளது.

பிரதமர் : இந்தியர்களிடம் அபிரிமிதமான திறன் உள்ளது என்பதை நான் அறிவேன்.   எங்கள் திறன் குறித்து எனக்கு எவ்விதமான சந்தேகமும் கிடையாது.  1.25 பில்லியன் இந்திய மக்களின் தொழில் திறன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.  அதிக அளவில் திறன் உள்ளது.   இதைப் பயன்படுத்த தெளிவான திட்டங்களை வைத்துள்ளேன்.

பரீத் ஸக்காரியா : கிழக்கு சீன கடற்பகுதி மற்றும் தெற்கு சீன கடற்பகுதியில் கடந்த இரண்டாண்டுகளாக சீனாவின் நடவடிக்கைகள் அதன் அண்டை நாடுகளுக்கு கவலை அளித்து வருகின்றன.  பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளின் தலைவர்கள் இது குறித்து காட்டமான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.  இது குறித்து நீங்கள் கவலைப் படுகிறீர்களா ?

பிரதமர் :  இந்தியா ஒரு மாறுபட்ட நாடு.   1.25 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு.   சிறிய விஷயங்கள் குறித்து கவலை கொண்டால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது.   அதே நேரத்தில் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியாது. இதன் காரணமாகத்தான் இந்தியா தற்போது வேறு ஒரு காலத்தில் உள்ளது.   நாம் 18ம் நூற்றாண்டில் வாழவில்லை.   சீனாவும் உயர்ந்த கலாசார பாரம்பரியம் உள்ள நாடு.   அந்நாடு பொருளாதார வளர்ச்சியில் எப்படி கவனம் செலுத்துகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.  இதன் காரணமாகத்தான் சீனாவின் புரிதலை நாம் ஏற்றுக் கொண்டு உலகத்தின் சட்டங்களை மதித்து அந்நாடு அனைவரோடும் சேர்ந்து முன்னேறும் என்று நம்புகிறோம்.

பரீத் ஸக்காரியா :  சீனாவைப் பார்க்கையில், சீனா வேகமாக வளர்ந்து வருவதையும், மனித குல வரலாற்றிலேயே மிக வேகமான வளர்ச்சி கண்டிருப்பதையும், அது ஒரு சர்வாதிகார அரசாங்கமாக இருப்பதையும், அந்நாடு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முயல்வதிலும், முதலீடுகளுக்கு ஊக்கம் தருவதையும் உணர்கிறீர்களா ?   அதைப் பார்க்கையில் ஜனநாயகம் என்பதால் இந்தியாவின் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது என்று நம்புகிறீர்களா ?

பிரதமர் : சீனா ஒரு உதாரணம் என்றால், ஜனநாயக நாடுகள் மற்றொரு உதாரணம்.   அவையும் வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.   ஜனநாயகம் என்பதால் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது என்று நீங்கள் கூற முடியாது.    ஜனநாயகம் எங்களது பிடிப்பு.     அது எங்களது பாரம்பரியம்.  அதை அவ்வளவு எளிதாக விட்டு விட முடியாது.   எங்களின் மரபணு வழிலேயே டி.என்.ஏ ஜனநாயகம் உள்ளது.

பரீத் ஸக்காரியா :  சீன அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பார்த்து, நமக்கும் அது போன்ற அதிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியுள்ளீர்களா ?

பிரதமர் :  நான் ஜனநாயகத்தின் பலத்தைப் பார்த்திருக்கிறேன்.   ஜனநாயகம் இல்லையென்றால், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்ற ஒருவர் இந்த இடத்தில் அமர முடியுமா ?  இதுதான் ஜனநாயகத்தின் பலம்.

பரீத் ஸக்காரியா :  இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள பலர் இந்தியாவும் அமெரிக்காவும் மேலும் நெருக்கமான நட்பு பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  உலகின் பழமையான ஜனநாயகம் மற்றும் உலகின் பெரிய ஜனநாயகம் ஆகிய இரண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.   ஆனால், அது பல்வேறு காரணங்கள் மற்றும் சில முரண்பாடுகளால் நடக்கவில்லை.   அமெரிக்காவும் இந்தியாவும் பங்குதாரர்களாக ஒரு கூட்டணி அமைக்க முடியும் என்று கருதுகிறீர்களா ?

பிரதமர் : ஒரே வார்த்தையில் பதில் சொல்கிறேன்.  ஆம்.    மிகுந்த நம்பிக்கையோடு ஆம் என்று கூறுகிறேன்.    இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன.   கடந்த சில நூற்றாண்டுகளைப் பார்த்தீர்களேயென்றால், இரண்டு விஷயங்கள் வெளிச்சத்துக்கு வரும்.    அமெரிக்கா உலகெங்கும் உள்ளவர்களை இணைத்துக் கொண்டுள்ளது.   உலகில் அனைத்துப் பகுதிகளிலும் இந்தியர்கள் உள்ளனர்.  இது இந்த இரண்டு சமூகங்களையும் பிரதிபலிக்கிறது.     இந்தியர்களும் அமெரிக்கர்களும் இயல்பாக இணைந்து வாழ்கின்றனர்.  இந்த உறவில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன என்பது உண்மையே.   20ம் நூற்றாண்டின் இறுதி முதல், 21ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இது பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது.   இரு நாடுகளிடையே உறவு பலப்பட்டுள்ளது.   இந்தியாவும் அமெரிக்காவும் வரலாற்று பூர்வமாக இணைந்துள்ளன.  இந்த உறவு மேலும் வலுப்படும்.

பரீத் ஸக்காரியா :  ஒபாமா அரசோடு உங்களுக்கு உள்ள உறவின் அடிப்படையில் பல்வேறு அமைச்சர்கள் வந்து சென்றுள்ளனர்.   வாஷிங்டனுக்கு இந்தியாவோடு உறவை வலுப்படுத்த வேண்டும் என்ற உண்மையான விருப்பம் உள்ளது என்று கருதுகிறீர்களா ?

 

பிரதமர் :   இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள உறவை தில்லி மற்றும் வாஷிங்டன் எல்லைகளோடு மட்டும் பார்க்கக் கூடாது. அது பரந்துபட்டது.   ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், டெல்லியும் வாஷிங்டனும் இணைந்த புரிதலோடு உள்ளன.   இரு தரப்பும் இதற்காக உழைத்துள்ளன.

பரீத் ஸக்காரியா : உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளைப் பற்றிப் பேசுவோம்.  இந்தியா இதில் முக்கிய பங்கெடுத்துள்ளது.    ரஷ்யா கிரிமியாவை இணைத்துக் கொண்டதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் ?

பிரதமர் : முதலில் அந்த இடத்தில் நடந்த விமான விபத்தில் அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.    இந்த காலகட்டத்தில் மனித குலத்துக்கு ஏற்றதான விஷயம் இது அல்ல.   நாங்கள் எப்போதும் இக்கருத்தை வலியுறுத்தி வந்துள்ளோம்.   முதலில் கல்லெடுத்து எறிபவன் தவறு செய்திருக்க மாட்டான் என்று இந்தியாவில் ஒரு சொல் வழக்கு உண்டு.    இன்றைய உலகில் ஆலோசனை சொல்ல பலர் இருக்கிறார்கள்.    அவர்களை உன்னிப்பாகக் கவனித்தால் அவர்களும் பல தவறுகளை இழைத்தது தெரிய வரும்.   இந்தியாவின் பார்வை என்னவென்றால், இரு தரப்பும் அமர்ந்து பேசி, இதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும்.

பரீத் ஸக்காரியா : இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து உலக அரங்கின் கவனத்துக்கு வந்துள்ளது.  பாலியல் வன்முறை குறித்தும் கவனத்துக்கு வந்துள்ளது.   இந்தியாவில் தொடர்ந்து இது போன்ற பாரபட்சமான சம்பவங்கள் நடப்பதற்கான காரணம் என்ன ?  இது குறித்து என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் ?

பிரதமர் : அரசியல் பிரமுகர்கள், இதற்கான வேரை ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது.   அரசியல் பிரமுகர்களின் அறிக்கையினால் நிலைமை மோசமாகத்தான் ஆகிறது.  பெண்களின் கவுரவம் நமது கூட்டுப் பொறுப்பு.   இந்த விஷயத்தில் சமரசமே கிடையாது.   சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் சரிவு கூடாது.   ஒரு குடும்பத்தில் பெண் எப்படி சரிசமமாக நடத்தப்படுகிறாளோ அந்த கலாசாரத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.   இந்த விஷயத்தில் மிகவும் முக்கியமானது பெண்களின் கல்வி.   ஆகஸ்ட் 15 அன்று எனது அரசு, பெண்களின் கல்வி, பெண்களின் பாதுகாப்பு என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

பரீத் ஸக்காரியா :  அல் கொய்தாவின் தலைவர் அய்மான்-அல்-ஸவாகிரி இந்தியாவில் அல் கொய்தாவை உருவாக்குவதற்கு அழைப்பு விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.   தெற்காசியாவுக்கு என்று கூறப்பட்டாலும் அது குறிப்பாக இந்தியாவைக் கவனத்தில் கொண்டே வெளியிடப்பட்டுள்ளது.  குறிப்பாக இஸ்லாமியர்களை குஜராத் மற்றும் காஷ்மீரில் விடுவிக்க வேண்டும் என்று கூறுகிறது.    இந்த முயற்சி வெற்றி பெறும் என்று நீங்கள் கருதுகிறீர்களா ?  கவலைப்படுகிறீர்களா ?

பிரதமர் : இந்திய இஸ்லாமியர்களுக்கு அவர்கள் அநீதி இழைக்கிறார்கள் என்பதே எனது புரிதல்.   அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்திய இஸ்லாமியர்கள் நடந்து கொள்வார்கள் என்றால் அவர்கள் மயக்கத்தில் இருக்கிறார்கள்.    இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவுக்காக வாழ்கிறார்கள்.  இந்தியாவுக்காக உயிர் துறப்பார்கள்.   இந்தியாவுக்கு ஒரு போதும் கேடு நினைக்க மாட்டார்கள்.

பரீத் ஸக்காரியா :  இந்தியாவில் 170 மில்லியன் இஸ்லாமியர்கள் இருந்தாலும் வெகு சிலரே அல் கொய்தாவில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கான காரணம் என்ன ? அல் கொய்தா ஆப்கானிஸ்தானில் இருந்தாலும், சில இடங்களில் பாகிஸ்தானில் இருந்தாலும் இந்திய இஸ்லாமியர்கள்  ஆதரவு தெரிவிக்காததன் காரணம் என்ன ?

பிரதமர் : முதலில் இதற்கான உளவியல் காரணங்களையோ அல்லது மதரீதியான ஆய்வையோ மேற்கொள்வதற்கான நிபுணர் நான் அல்ல.  இதில் அடிப்படையான கேள்வி மனித குலம் இதற்கெதிராகப் போராட வேண்டுமா இல்லையா என்பதே.  மனிதத்தை நம்புபவர்கள் ஒன்றிணைய வேண்டுமா இல்லையா என்பதே.   இது மனித குலத்துக்கு எதிரான போர். ஒரு தனி நாடு அல்லது ஒரு இனத்துக்கு எதிரானது அல்ல.    இதை மனிதத்துக்கும், மனிதத்தன்மை அல்லாதவற்றுக்கும் இடையே நடக்கும் போராக நாம் இதை பார்க்க வேண்டும்.   வேறு ஒன்றும் அல்ல.

பரீத் ஸக்காரியா :   இன்றிலிருந்து ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ என்று வைத்துக் கொள்வோம்.   ஒரு வருடம் என்று வைத்துக் கொள்வோம்.    பிரதமராக உங்கள் முதல்  ஆண்டில் என்ன சாதித்துள்ளீர்கள் என்று மக்கள் கருத வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

பிரதமர் : முக்கியமான விஷயம் என்னவென்றால் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.   இந்த நம்பிக்கை சிதையக் கூடாது.   இந்த அரசாங்கத்தைத்தான் நாம் தேர்ந்தெடுத்துள்ளோம், இந்த அரசு மக்கள் நலனுக்காக நேர்மையாகப் பணியாற்றுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும்.  அதுதான் மிகமுக்கியம்.    என்னுடைய பேச்சுக்களால் அல்லாமல், என்னுடைய நடவடிக்கைகளால் நான் மக்கள் நம்பிக்கையைப் பெற்றேன் என்றால், 1.25 பில்லியன் மக்களின் சக்தி ஒன்றிணைந்து இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும்.

பரீத் ஸக்காரியா :   நீங்கள்  எப்படி ஓய்வெடுக்கிறீர்கள்.   பணிகள் இல்லாதபோது என்ன செய்கிறீர்கள் ?

பிரதமர் : நான் வேலை செய்யாமல் இருப்பவன் அல்ல.   எனக்கு எனது பணியே மகிழ்ச்சி தருகிறது.   அதுவே எனக்கு ஓய்வையும் தருகிறது.   ஒவ்வொரு கணமும் நான் புதிய யோசனைகளையும், புதிய திட்டங்களையும் உருவாக்குவது குறித்து சிந்தித்து வருகிறேன். ஒரு விஞ்ஞானி எப்படி ஆய்வுக் கூடத்தில் நீண்ட நேரம் இருப்பதை விரும்புவாரோ, அது போல நான் அரசு நிர்வாகம் மற்றும் மக்கள் ஒற்றுமைக்காகத் தொடர்ந்து பணியாற்றுகிறேன்.  அதுவே எனக்கு நிறைவைத் தருகிறது.

பரீத் ஸக்காரியா :  நீங்கள் தியானம் செய்கிறீர்களா ?  யோகா செய்கிறீர்களா ?

பிரதமர் : மிக குறைந்த வயதிலேயே எனக்கு யோகாசனம் மற்றும் பிராணாயாமம் அறிமுகப்படுத்தப்பட்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.  அது எனக்கு பெரும் பயனை அளித்துள்ளது.    மக்கள் அனைவரும் இவற்றை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

பரீத் ஸக்காரியா : யோகாவின் பலன்கள் குறித்து ஒரு நீண்ட உரையை அளித்துள்ளீர்கள்.   அது குறித்து விளக்குங்களேன்.

பிரதமர் :  சில நேரங்களில் நமது மனம் ஒரு புறம்  செல்லும்.  உடல் வேறோடு புறம் செல்லும்.   காலம் இந்த முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.  இதயம், ஆன்மா மற்றும் உடலை யோகா ஒன்றிணைக்கிறது.  அதுதான் யோகா.