Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிக்கிமில் பாக்யான் விமான நிலையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

சிக்கிமில் பாக்யான் விமான நிலையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

சிக்கிமில் பாக்யான் விமான நிலையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

சிக்கிமில் பாக்யான் விமான நிலையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்


சிக்கிம் மாநில ஆளுனர் திரு.கங்கா பிரசாத் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு.பவன் சாம்லிங் அவர்களே, எனது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திரு.சுரேஷ் பிரபு அவர்களே, டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, எஸ்.எஸ்.அலுவாலியா அவர்களே, மாநில சட்டப் பேரவைத் தலைவர் திரு.கே.என்.ராய் அவர்களே, மாநில அமைச்சர் திரு.டோர்ஜி ஷெரிங் லெப்சா அவர்களே மற்றும் இங்குள்ள பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே

நண்பர்களே,

கடந்த மூன்று நாட்களாக கிழக்கு இந்திய பகுதியில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான மற்றும் மனிதக் குலத்திற்குப் பயன்படுகின்ற பெரிய திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.

ஜார்க்கண்டில் நேற்று பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தையும், ஆயுஷ்மான் பாரத் இயக்கத்தையும் தொடங்கி வைத்த பின் நேற்று மாலை நான் சிக்கிமிற்கு வந்து சேர்ந்தேன். சிக்கிமின் சூரிய உதயம், குளிர்ந்த காற்று, அழகான மலைகள், மெய்யான இயற்கை அழகு ஆகியவற்றுடன் இன்று காலை நான் விழித்தெழுந்தேன். இவற்றைக் கேமராவில் நான் படம் பிடிக்கத் தொடங்கினேன். இந்த அழகையும், நேர்த்தியையும் யார் தான் விரும்ப மாட்டார்கள். அனைவரும் இதனை வியந்து காண்பார்கள். இயற்கை உங்களுக்கு அனைத்தையும் தந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நீங்கள் அனைவரும் இந்த இடத்தைச் சூழ்ந்திருக்கிறீர்கள்.

சகோதர, சகோதரிகளே

நமது பாரம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் கிழக்குத் திசைக்கான முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். அதே போல் ஒட்டு மொத்த தேசமும் நன்கு அறியும்.

வடகிழக்கு என்பது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அழகிய கிழக்குப் பகுதி மாநில மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். உங்களுக்கும், சிக்கிம் மாநிலத்திற்கும் முதலாவது விமான நிலையமான பாக்யாங் விமான நிலையத்தை நான் அர்ப்பணிக்கிறேன்.

இந்த நாள் உங்களுக்கு மட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று அல்ல. தேசத்திற்கும் மிக முக்கியமான நாளாகும். பாக்யாங் விமான நிலைய செயல்பாட்டிற்கு வரும் போது நீங்கள் பெருமித உணர்வு கொள்வீர்கள்.

கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மைதானத்தில் நூறு ரன் எடுப்பார்கள். ஆனால் இந்தியா இன்று நூறு என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்த விமான நிலையத்தை துவக்கி வைத்த பின் நாட்டில் நூறு விமான நிலையங்கள் செயல்பாட்டிற்கு வருகின்றன. அந்த வகையில் இந்தியா நூறு என்ற எண்ணிக்கையை இன்று எட்டியுள்ளது. நமது நாடு மாற்றமடைந்து வருகிறது. சிக்கிம் மாநிலம் கால்பந்துக்கு பேர் பெற்றது. ஒவ்வொருவரும் இங்கே கால்பந்து விளையாடுகிறார்கள். இப்போது அவர்களின் கைகள் கிரிக்கெட் விளையாடவும் பயிற்சி பெறுகின்றன.

சிக்கிம் அணியின் தலைவர் நிலேஷ் லாமிசானே நேற்று நூறு ரன்கள் எடுத்தார் என்று இன்றைய செய்தித்தாளில் நான் வாசித்தேன். ஒருபக்கம் கிரிக்கெட்டில் நூறு ரன் எடுக்க முதலாவது சிக்கிம் வீர்ராக நிலேஷ் திகழும் போது மறுபக்கம் நாட்டின் நூறாவது விமான நிலையம் சிக்கிமில் அமைகிறது.

சகோதர, சகோதரிகளே

இந்த விமான நிலையம் உங்களின் வாழ்க்கையை எளிதாக முக்கிய பங்காற்றும். இதுநாள் வரை நாட்டின் இதர பாகங்களிலிருந்து சிக்கிமிற்கு அல்லது சிக்கிம் வழியாக மற்ற இடங்களுக்கு வர விரும்புவோர் ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொண்டனர். சிக்கிம் மக்களும், சிக்கிம் மாநிலத்திற்கு பயணம் செய்வோரும் இந்த நிலைமை குறித்து நன்கு அறிவார்கள்.

முன்பெல்லாம் பாக்டோக்ரா விமான நிலையத்தில் இறங்குகின்றவர்கள் சிக்கல் நிறைந்த நிலப்பாதை வழியாக சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திற்கு சோர்வுடன் ஐந்து-ஆறு மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகுதான் அவர்கள் காங்டாக் செல்ல முடியும். ஆனால் இப்போது பாக்யாங் விமான நிலையம் இந்த சோர்வான பயணத்தை தவிர்ப்பதோடு இதற்கான நேரமும் நிமிடக் கணக்கில் குறைந்து விடும்.

சகோதர, சகோதரிகளே

நிச்சயமாக இது பயணத்தை எளிதாக்குவதோடு நேரத்தை குறைக்கவும் செய்யும். அதே நேரத்தில் சாமானிய மக்கள் கூட இங்கிருந்து எளிதாக சென்று வருவதை உறுதி செய்ய அரசு முயற்சி செய்து வருகிறது. எனவே இந்த விமான நிலையம் நாட்டின் சாமானிய மக்களுக்கும் விமானப் பயணம் என்ற உடான் திட்டத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் சுமார் 2500-லிருந்து 2600 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

அரசின் முயற்சிகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை காரணமாக குளிர்ச் சாதன வசதிக் கொண்ட ரயில் பயணத்தை விட விமானப் பயணம் குறைந்த  செலவுடையதாக இருக்கிறது. காலம் பொன்னானது என்று சொல்வார்கள். விமானத்தின் மூலம் பயணம் செய்வது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. எனவே அது பணத்தை மிச்சப்படுத்துகிறது. நாட்டின் லட்சக்கணக்கான நடுத்தர வகுப்பு குடும்பங்கள் இப்போது விமானங்களில் பயணம் செய்வதற்கு இதுதான் காரணம்.

நண்பர்களே

இந்த விமான நிலையம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில வாரங்களுக்குள் குவஹாத்திக்கும், கொல்கத்தாவிற்கும் விமானப் போக்குவரத்து தொடங்கும். நாட்டின் இதரப் பகுதிகளுக்கும், அண்டை நாடுகளுக்கும் இதனை இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே

பாக்யாங் விமான நிலையம் அழகின் அடையாளம் மட்டுமல்ல, பொறியியல் திறனுக்கானதும் கூட. சமூக ஊடகத்தில் தீவிரமாக இருப்பவர்கள் இந்த விமான நிலையம் மற்றும் இயற்கையின் மடியில் விமானங்கள் இறங்கும் புகைப்படங்களைக் காணவேண்டும். அந்த புகைப்படங்களை நீங்களும் காண வேண்டும். சமூக ஊடகத்தில் அவை வேக வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இது இன்றைக்கு திறக்கப்பட்டாலும் கூட ஏற்கனவே மக்கள் இதனை பாராட்டத் தொடங்கி விட்டார்கள்.

550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம் பெருமிதத்தின் குறியீடாகவும் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறமையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. குன்றுகள் வெட்டப்பட்டுள்ளன. பள்ளங்கள் குப்பைகளைப் பயன்படுத்தி நிரப்பப்பட்டுள்ளன. பலத்த மழையின் சவாலை அவர்கள் திறமையாகக் கையாண்டுள்ளனர். இந்த வழியாக  செல்லும் நீரோடைகள் விமான நிலையத்தின் கீழே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே இது ஓர் அசாதாரணமான பொறியியல் தொழில்நுட்பமாகும்.

இந்த வியத்தகு பணியின் திட்டமிடல் மற்றும் கட்டுமானத்தில் தொடர்புடைய அனைத்துப் பொறியாளர்களையும், தொழிலாளர்களையும் இன்றைய நிகழ்ச்சியில் நான் பாராட்ட விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உண்மையிலேயே நம்புதற்கரிய செயலை செய்திருக்கிறீர்கள்.

சகோதர, சகோதரிகளே

சிக்கிம் மற்றும் வடகிழக்குப் பகுதிக்கு அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் உணர்வுபூர்வமான தொடர்புக்குரிய பணிகள் வெகு வேகமாக நடைபெற்று வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்த்துக்களை பெறுவதற்கும், வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தெரிந்துக் கொள்வதற்கும் அவர்களோடு அவ்வப்போது நான் கலந்துரையாடி இருக்கிறேன்.

மேலும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மத்திய அமைச்சர் ஒருவர் வடகிழக்கு மாநிலங்கள் ஏதாவது ஒன்றுக்குப் பயணம் செய்து பணியின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலம் இந்த நடைமுறையின் விளைவை நீங்கள் அனைவரும் இங்கு தெளிவாகக் காண்கிறீர்கள்.

சுதந்திரத்திற்கு பின் முதன் முறையாக சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகாலாந்து, அசாம், திரிபுரா, மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு பல புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விமானங்கள் மற்றும் ரயில் பாதை மூலமான தொடர்பு இங்கே முதன் முறையாக வந்து சேர்ந்துள்ளது. சில இடங்களில் மின்சாரம் கூட முதன் முறையாக வந்து சேர்ந்துள்ளது.

அகலமான தேசிய நெடுஞ்சாலைகளும், ஊரகச் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நதிகளின் குறுக்கே பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற மந்திரத்தோடு தொடர்ந்து செயல்படும் தமது அரசு பிராந்திய சமத்துவம் இன்மையை குறைப்பதற்கான அனுபவம் மற்றும் ஆர்வத்தோடும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்தியாவை எஞ்ஜின்களாக மாற்றவும் பணியாற்றி வருகிறது. இதற்கு நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம்.

இந்த தொலைநோக்குப் பார்வையோடு சிக்கிமிற்கு இந்த விமான நிலையத்தை ஒப்படைப்பதற்கான பணியை நாங்கள் விரைவுபடுத்தினோம். அனைத்துத் தடைகளையும் கடந்து உங்களின் கனவு இப்போது நனவாகியிருக்கிறது. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறிய விமானம் இங்கிருந்து பறந்தது பற்றிய செய்தியை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதன் பிறகு ஒரு விமான நிலையத்திற்காக நீங்கள் அறுபது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

நண்பர்களே

சிக்கிமில் மட்டுமல்ல அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் கூட விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான் ஏற்கனவே சொன்னது போல் நூறு விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இவற்றில் 35 விமான நிலையங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் கட்டப்பட்டவை என்பதை அறியும் போது நீங்கள் வியப்படைவீர்கள்.

அதி வேகமாக பணியாற்றுவது என்பதன் பொருள் என்ன? அனைத்து திசைகளிலும் பணியாற்றுவது என்பதன் பொருள் என்ன? தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுவது என்பதன் பொருள் என்ன? இதனை ஒரு உதாரணத்தோடு நீங்கள் புரிந்து கொள்ளலாம். சுதந்திரமடைந்ததிலிருந்து 2014 வரை அதாவது அறுபத்து ஏழு ஆண்டுகளில் அறுபத்து ஐந்து விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இதற்குப் பொருள் என்னவென்றால், சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. உங்களுக்கு புரிகிறதா? ஒரு ஆண்டுக்கு ஒரு விமான நிலையம் என்பது அவர்களின் வேகம். இதுதான் அவர்களின் சிந்தனைப் போக்கு. கடந்த நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒன்பது விமான நிலையங்கள் வீதம் கட்டப்பட்டுள்ளன. இதற்கான பணி ஒன்பது மடங்கு சிறப்பான வேகத்தோடு நடைபெற்றுள்ளது. நாங்கள் நான்கு ஆண்டுகளில் செய்து முடித்துள்ள பணிகளை அவர்கள் செய்திருந்தால் நாற்பது ஆண்டுகள் ஆகியிருக்கும்.

சகோதர, சகோதரிகளே

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் உலகிலேயே மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது.  விமான நிறுவனங்கள் விமானங்களின் பற்றாக்குறையுடன் இருக்கின்றன. புதிய விமானங்களுக்கான ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன.  உங்களுக்கு மீண்டும் வியப்பு தரும் மேலும் சில புள்ளி விவரங்களை தெரிவிக்க நான் விரும்புகிறேன். சுதந்திரமடைந்த பின் எழுபது ஆண்டுகளில் நானூறு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. கடந்த ஓராண்டில் விமான நிறுவனங்கள் ஆயிரம் புதிய விமானங்களுக்கு ஆர்டர்கள் தந்துள்ளன. எழுபது ஆண்டுகளில் நானூறு விமானங்கள் எனும் நிலையில் ஒரே ஆண்டில் ஆயிரம் புதிய விமானங்கள். சாமானிய மனிதனும் விமானம் மூலம் பயணம் செய்ய வேண்டும் என்ற எங்களின் கனவு வெகு வேகமாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது என்பதை இது காட்டுகிறது.

சகோதர, சகோதரிகளே

இந்த விமான நிலையம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நீங்கள் செல்வதற்கான வசதியை மட்டும் அளிக்கவில்லை. உங்களின் வருவாயை அதிகரிப்பதற்கும் கூட இது உதவியாக இருக்கும். சிக்கிம் என்பது உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் மையமாக எப்போதும் இருந்து வருகிறது. இதன் மக்கள் தொகையை விட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும். விமான நிலையம் இல்லாத போதும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மாநில மக்கள் தொகையை விட ஒன்றரை மடங்கு அதிகம் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விமான நிலையம் செயல்படத் தொடங்கும் போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வரம்புக்குள் நின்று விடாது என்பதை நீங்கள் காண்பீர்கள். வரவிருக்கும் தீபாவளி மற்றும் துர்கா பூஜை காலத்திலேயே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.

இந்த விமான நிலையம் சிக்கிமின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு நுழைவாயில் என்பதை நிரூபிக்கும். இதன் பயனாக ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள், விருந்தினர் மாளிகைகள், முகாம் விடுதிகள், வீடுகளில் தங்குதல், சுற்றுலா வழிகாட்டிகள், தங்குமிடங்கள் போன்றவை திறக்கப்படுவதற்கான  வாய்ப்புகள் இருக்கின்றன. சுற்றுலாத் துறையில் ஏழைகளிலும் ஏழையாக இருப்பவர்கள் கூட சம்பாதிப்பார்கள். தேனீர் விற்பவர்கள், நிலக்கடலை விற்பவர்கள், பூ விற்பவர்கள் போன்ற சிறு வியாபாரிகளும் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆட்டோ ஓட்டுனர்களும் விருந்தினர் விடுதி உரிமையாளர்களும் கூட சம்பாதிப்பார்கள்.

நண்பர்களே

போக்குவரத்தையும், சுற்றுலாவையும் மாற்றத்திற்கான வழிமுறையாக அரசு உருவாக்கியுள்ளது. சமயம் சார்ந்த இடங்களும், பழங்குடியினர் பகுதிகளும் இதற்கு குறி இலக்காக உள்ளன. இந்த இடங்களில் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்குமான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில்தான் மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்காவும், கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு அரசால் திறக்கப்பட்ட நாது லா கணவாயும் உள்ளன.

பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் மேம்படுத்த நாற்பது கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிக்கிமின் சுற்றுச்சூழலை பாதுகாப்பாகவும், பசுமையாகவும் வைத்திருக்க மாநில அரசின் ஒத்துழைப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு 350 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மொத்தமுள்ள ஒன்பது திட்டங்களில் எட்டு திட்டங்கள் காங்டாக் மற்றும் சிம்தாமுக்கு உரியவை. ராணி சூ நதி மாசுபடாமல் பாதுகாப்பதற்கான திட்டத்தின் மதிப்பீடு சுமார் 150 கோடி ரூபாயாகும். இது தவிர ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சுமார் 125 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 50 கோடி ரூபாய்க்கு மேல் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே

சுற்றுச்சூழல், போக்குவரத்து, சுற்றுலா ஆகியவற்றுக்கிடையே நெருக்கமான தொடர்பு உள்ளது. எனவே விமானம் மூலமான இணைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமல்ல, மற்ற வழிமுறைகளையும் வலுப்படுத்துவது என்பதும் இதன் பொருளாகும். 1500 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளும் கூட நடைபெற்று வருகின்றன.  இது தவிர சிறிய சாலைகள் 250 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகின்றன, விரிவாக்கப்படுகின்றன.

சாலைகளோடு சிக்கிமின் ரயில்வேயும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. காங்டாக்குடன் அகல ரயில் பாதையை இணைப்பதற்கான பணி வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.

மின் விநியோக முறையை மேம்படுத்தவும், மின்சாரம் கொண்டு செல்லும் தடங்களின் பழுது நீக்கவும் மாநில அரசுக்கு 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தப் பணியை முடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் மின்சார உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலங்களுடன் சிக்கிமை இணைப்பதற்கான திசை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 6 புனல்  மின் திட்டங்களின் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சகோதர, சகோதரிகளே

சிக்கிம் மக்களையும், சிக்கிம் அரசையும் குறிப்பாக இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதில் நாட்டிற்கு ஓர் உதாரணத்தை உருவாக்கியுள்ள விவசாயிகளுக்கும் நான் பாராட்டுத் தெரிவிக்க விரும்புகிறேன். நூறு சதவீதம் இயற்கை வேளாண்மை மாநிலம் என்பதில் சிக்கிம் முதலாவதாக இருக்கிறது.

இயற்கை வேளாண் முறையை நாடு முழுவதும் மேம்படுத்துவதற்கு பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பாரம்பரிய விவசாய திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயற்கை வேளாண்மை மட்டுமின்றி மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தை முறையும் உருவாக்கத்திற்கு வருகிறது. இந்த விமான நிலையம் இன்று பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது என்றாலும், இங்கிருந்து சில மணி நேரங்களுக்குள் பழங்களும், மலர்களும் தில்லியின் சந்தைகளை அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

சிக்கிம் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் மலர்கள் இந்தியாவின் பல ஆண்,பெண் தெய்வங்களின் பாதங்களை சென்று சேரும். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அரசுகள் வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை மதிப்பு மேம்பாட்டு இயக்கம் என்ற பெயரில் சிறப்புத் திட்டம் ஒன்றை தொடங்கி உள்ளன. இதற்கு ரூ.400 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே

இயற்கை வேளாண் பொருள்கள் என்பவை நமது சுற்றுச்சூழலுக்கும், நிலத்துக்கும் மட்டும் பாதுகாப்பானது அல்ல. நம்மையும் நோய்களிலிருந்து விலக்கி வைப்பவை ஆகும். குடிமக்களின் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்வது அரசின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். வெற்றிகரமான இயற்கை வேளாண்மை மற்றும் உற்பத்திப் பொருட்கள் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பயன் கிடைத்துள்ளது; மக்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார். பெண்களின் வாழ்நாள், ஆண்களின் வாழ்நாளை விட அதிகரித்துள்ளது. ரசாயன உரங்களைக் கைவிட்டு ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த சிக்கிமிலிருந்து மற்றவர்களும் கற்றுக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

எனக்கு கிடைத்த தகவலின்படி “தூய்மையே சேவை” என்ற நோக்கங்களை சிக்கிம் மக்கள் தழுவி மேம்படுத்தி உள்ளனர். உங்கள் அனைவரின் முயற்சிகள் மற்றும் விழிப்புணர்வுகள் காரணமாக திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத முதல் மாநிலம் என 2016-ல் சிக்கிம் அறிவிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதில் நீங்கள் அனைவரும் பாராட்டத்தக்க பணியை செய்திருக்கிறீர்கள்.

சகோதர, சகோதரிகளே

நான் ஏற்கனவே கூறியது போல் ஆயுஷ்மான் பாரத் என்ற வடிவில் நாட்டில் மிகப் பெரிய சுகாதாரத் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சிக்கிம் கூட இணைந்துள்ளது. தற்போது சிக்கிமில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் கடுமையான நோய்களுக்கான சிகிச்சைக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் அரசு செலவிடவிருக்கிறது. நாட்டின் வேறெந்த பகுதிகளிலிருந்தும் ஒருவர் இங்கே பயணம் செய்யும் போது மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டால் இந்த இடத்திலிருந்தும் பணத்தை அவர் பெற்றுக் கொள்ள முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பாதுகாப்பு அம்சம் என்பது நோயாளி எங்கே சென்றாலும் அங்கே அவரைப் பின் தொடரும்.

நண்பர்களே

மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றின் மூலம் சிக்கிம் கூட பயன்களைப் பெற்றுள்ளது. ஜன் தன் திட்டத்தின் கீழ் சிக்கிமில் சுமார் 1 லட்சம் பேர் வங்கிக் கணக்குகளை தொடங்கி உள்ளனர். மாதம் ஒரு ரூபாய் மற்றும் தினமும் 90 பைசா பிரீமியம் என்பதுடனான காப்பீட்டுத் திட்டங்களில் இங்குள்ள சுமார் 80 ஆயிரம் சகோதர, சகோதரிகள் சேர்ந்துள்ளனர்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் சுமார் 38 ஆயிரம் ஏழைக் குடும்பங்களின் சமையல் அறைகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே

கிழக்கு இந்திய மக்கள் மற்றும் வடகிழக்கு இந்திய மக்கள் வாழ்க்கையை எளிதாக்கும் உறுதிப்பாட்டுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியை வளர்ச்சியின் புதிய சகாப்தத்துடன் இணைக்கவும் புதிய இந்தியாவின் புதிய மையமாக உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.

இந்த விமான நிலையம் பல புதிய வசதிகளை உருவாக்க உதவும். இது சிக்கிமை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும். உங்களின் முதலாவது விமான நிலையத்திற்காக எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒரு முறை பாராட்டுத் தெரிவிக்கிறேன்.

பல பிரச்சனைகளை முதலமைச்சர் குறிப்பிட்டார். இவை குறித்து நாங்கள் இருவரும் விவாதித்திருக்கிறோம். எனவே இவற்றை வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் இல்லையென்று நான் கருதுகிறேன். இருப்பினும் நமது நாட்டை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல நாம் விரும்பினால் சிக்கிமை முன்னோக்கிக் கொண்டு செல்வது அவசியம் என்பதை உங்களுக்கு மறுஉறுதி அளிக்க நான் விரும்புகிறேன். எனவே ஒவ்வொரு சமூகம், தனிநபர் மற்றும் சிக்கிம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் மீண்டும் நான் எனது நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.