Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“சுரங்கங்களில் இருந்து சந்தைக்கு 2017” என்ற சர்வதேச வைர மாநாட்டில் 2017 மார்ச் 19 ஆம் தேதி பிரதமர் (காணொலிக் காட்சி மூலம்) ஆற்றிய உரை

“சுரங்கங்களில் இருந்து சந்தைக்கு 2017” என்ற சர்வதேச வைர மாநாட்டில் 2017 மார்ச் 19 ஆம் தேதி பிரதமர் (காணொலிக் காட்சி மூலம்) ஆற்றிய உரை


இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மதிப்புக்குரிய விருந்தினர்களே

பிரதிநிதிகளே

சீமான்கள் மற்றும் சீமாட்டியர்களே

சர்வதேச வைர மாநாட்டில் இந்த அறப்பணி இரவு விருந்தில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் பொன்விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெறுகிறது. “சுரங்கங்களில் இருந்து சந்தைக்கு 2017” என்பதை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாடு, உலகெங்கும் இருந்து சுரங்கத்தினர், வைர நிறுவனங்கள், நிபுணர்கள், சில்லறை வியாபாரிகள், வங்கியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை ஒன்று சேர்த்துள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கவுன்சில் உருவாக்கப்பட்டதில் இருந்து, இந்தத் துறையில் இந்தியா பெரிய அடையாளங்களைப் பதித்துள்ளது. நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பதைப் போல, வெட்டிய மற்றும் மெருகூட்டிய வைரங்கள் தயாரிப்பில் உலகில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களாக வைர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா ஒரு முன்னோடியாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி, இந்தியாவின் மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் பதினைந்து சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் வெற்றி பதிவுகளில் ஒன்றாக உள்ளது. 1966-67-ல் வெறும் இருபத்தியெட்டு மில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், 1982-83ல் ஏற்றுமதி ஒரு பில்லியன் டாலர்களாக அதிகரித்து, 1987-88ல் இரண்டு பில்லியன்களாக உயர்ந்தது. 2003-04-ல் அது பத்து பில்லியன் டாலர்களைக் கடந்தது. 2007-08-ல் இருபது பில்லியன் டாலர்களாக இருந்தது. இப்போது சுமார் நாற்பது பில்லியன் டாலர்களாக உள்ளது.

நண்பர்களே, கச்சா வைரங்களை பார்க்கவும் கொள்முதல் செய்யவும் இதுவரையில் இந்திய இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. விநியோக சங்கிலியில் செயல்திறனை குறைப்பதாக இது இருந்தது. பார்ப்பதும் வர்த்தகமும் இந்தியாவில் நடைபெற வேண்டும் என்று உங்களில் பலர் விரும்பினீர்கள். 2014 டிசம்பரில், டெல்லியில் நடைபெற்ற உலக வைர மாநாட்டில், இந்த நோக்கத்தை எட்டுவதற்கு விசேஷ ஒதுக்கீட்டு மண்டலத்தை நாம் உருவாக்குவோம் என்று ரஷிய அதிபர் முன்னிலையில் நான் அறிவிப்பு செய்தேன். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கச்சா வைரங்களை பார்ப்பதற்கான தேவைக்காக சுங்கக் கட்டணம் ஏதுமின்றி கொண்டு வரவும் கொண்டு செல்லவும் அனுமதிக்கும் வகையில் நமது சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. பாரத் வைர மாற்றகத்தில் உள்ள விசேஷ ஒதுக்கீட்டு மண்டலம் 2015 நவம்பரில் செயல்படத் தொடங்கியது. இது ஏற்கெனவே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முன்பு எண்பது முதல் தொண்ணூறு பெரிய வியாபாரிகள்தான் பெல்ஜியம், ஆப்பிரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்து கச்சா வைரத்தை பார்க்க முடிந்தது. இப்போது சுமார் மூவாயிரம் சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள், புதிய விசேஷ ஒதுக்கீட்டு மண்டலம் மூலமாக அந்த முன்னுரிமையைப் பெற்றுள்ளார்கள். வைர தொழிலில் மிகவும் பிரபலமான சர்வதேச பெயர்கள் பலவும், 244 நாட்களுக்கும் மேல் பார்வையிடலுக்கு ஏற்பாடு செய்துள்ளன. ஏற்கெனவே வெட்டுதல் மற்றும் மெருகூட்டுதல் மையமாக இருக்கும் இந்தியாவை, சர்வதேச வைர வர்த்தக மையமாக ஆக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

சீமான்களே சீமாட்டியர்களே, ஒரு தலைமுறைக்குள் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது நமது இலக்கு. பதவி ஏற்றதில் இருந்து, மாற்றத்துக்கான நிறைய நடவடிக்கைகளில் இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அவற்றில் ஒன்று `இந்தியாவில் தயாரியுங்கள்’ திட்டம். உற்பத்திக்கு விரும்பத்தக்க இடமாக இந்தியாவை ஆக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் துறை 475 பில்லியன் டாலர் ஏற்றுமதியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் சிறிதளவே வைரம் அல்லது தங்கம் உற்பத்தி உள்ள நிலையிலும் இது நடந்துள்ளது. மற்றொரு முக்கியமான முயற்சி திறன்மிகு இந்தியா. புதிதாக வேலைவாய்ப்புத் துறையில் நுழையும் இளைஞர்கள் 21வது நூற்றாண்டில் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்யத் தேவையான தொழில் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வது திறன்மிகு இந்தியா முயற்சியின் நோக்கம். ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் துறை 4.6 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது. இதில் ஒரு மில்லியன் பேர் வைர தொழிலில் மட்டும் உள்ளனர். அந்த வகையில் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் துறை `இந்தியாவில் தயாரியுங்கள்’ மற்றும் திறன்மிகு இந்தியா திட்டங்களின் வாய்ப்புகளுக்கான முதன்மையான உதாரணமாக உள்ளன.

இன்றைக்கு நம்மிடையே பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவுடன் உள்ள அருமையான உறவு குறித்து இந்தியா பெருமை கொள்கிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குப் பிந்தைய நமது பாரம்பரியம் மற்றும் நாம் சந்திக்கும் ஒரே மாதிரியான சவால்கள், நம்மை இயல்பான பங்காளர்களாக ஆக்கியுள்ளது. அந்த நாடுகள் தங்கள் ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் துறையை வளர்ப்பதிலும், தங்கள் தொழில்நுட்ப நபர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் ஆதரவு அளிப்பதில் இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது என்று ஆப்பிரிக்காவைச் சேர்ந்த என் நண்பர்களுக்கு உறுதி அளிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இந்தத் துறை நீண்ட தொலைவு வந்திருப்பதாக நான் தொடங்கினேன். இருந்தபோதிலும், அது இருக்க வேண்டிய இடத்திற்கு சற்று பின்தங்கியே இருக்கிறது. வைரம் வெட்டுதல் மற்றும் மெருகூட்டுதல்தான் நமக்கு பலம் தரும் விஷயங்கள். ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் சந்தையில் உலக மதிப்பு அடிப்படையில் பார்த்தால் நமது பங்கு, நாம் பெற்றிருக்க வேண்டியதைவிட கீழாகவே உள்ளது. நமது எதிர்காலம் வெட்டுதல் மற்றும் மெருகூட்டுதலை விட மிகவும் பெரியது. பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் நிறைய நம்மிடம் உள்ளன. உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்:

கைகளால் தயாரிக்கப்படும் நகைகள் சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பதற்கு உங்களுடைய அணுகுதல் திட்டம் என்ன?

ஒரு குறிப்பிட்ட அளவுக்கு, இந்திய ஏற்றுமதிகள், இறக்குமதியால் வழிநடத்தப்படுவதாக எனக்கு சொன்னார்கள்: வடிவமைப்புகளும் தரவரைவுகளும் இறக்குமதியாளர்களால் தரப்படும் முன்விருப்பங்களின் அடிப்படையில் உள்ளன. அதாவது உலகளாவிய பேஷனைத்தான் இந்தியா பின்பற்றுகிறதே தவிர, உலக ரசனையில் ஒரு முன்னோடியாக இல்லை என்பது இதன் பொருள். நம்மிடம் உள்ள மிகுந்த அனுபவத்துக்கும், அபரிமிதமான வடிவமைப்பு திறமைக்கும் இது நியாயமானதாக இல்லை. உங்களுக்கு ஓர் உதாரணத்தை நான் சொல்கிறேன். இந்தியாவில் பல பிரபலமான உருவங்கள், சிற்பங்கள் மற்றும் சிலைகள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக உள்ளன. அவற்றில் பலவும் நகைகள் அணிந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளன. இந்த கலையம்சங்கள் உலகெங்கும் இருந்து மக்களை ஈர்ப்பதாக உள்ளன. இவற்றை நாம் ஆவணப்படுத்தி இருக்கிறோமா? இந்த கலையம்சங்களின் அடிப்படையில் நகை தொழிலை மேம்படுத்துவது பற்றி நாம் சிந்தனை செய்திருக்கிறோமா?

நண்பர்களே. மக்களின் முன்விருப்பங்களை மாற்றுபவர்களாக துணி சில்லறை வியாபாரிகள் உள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். முடிதிருத்துபவர்கள்கூட தங்கள் வாடிக்கையாளர்களின் முடி அலங்காரத்தை மாற்றுபவர்களாக இருக்கிறார்கள். மூக்குக் கண்ணாடிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் பேனாக்களில் வைரங்களை பயன்படுத்தும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். உங்கள் நகை தயாரிப்பாளர்கள், தங்களுடைய திறமை, அனுபவம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டு, உலக ரசனையை மாற்றும் வகையில் புதிய பேஷன்களை உருவாக்க முடியாதா?

உலகளாவிய பேஷனில் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றுவதற்கு, முதலில் நமது தொழில் துறைக்கு அதன் சந்தையைப் பற்றிய முழுமையான அறிவு தேவைப்படுகிறது. இறுதிநிலை பயனாளர்களை அறிந்து கொள்ள, அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த தொழில் துறை கூட்டாக ஆய்வு செய்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உதாரணத்துக்கு, சில பகுதிகளில் மற்றும் சில குழுக்கள் தங்கத்தை அதிகம் விரும்பலாம், மற்றவர்கள் வெள்ளியை விரும்பலாம். மற்றும் வேறு சிலர் பிளாட்டினத்தை விரும்பலாம். வாடிக்கையாளருடன் பலமாக முதலில் தொடர்பை ஏற்படுத்தாமல் நம்மால் உலக முன்னணியினராக மாற முடியாது என்பதுதான் அடிப்படை விஷயம். இறுதிநிலை பயனாளருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதை மின்னணு வணிகம் மிகவும் எளிதாக்கிவிட்டது. ஆர்டருக்கு ஏற்ப தயாரித்தல் என்ற இந்திய நகைத் துறையில் வளரும் சந்தையை உருவாக்கக் கூடிய இளம் தொழில்முனைவோர்கள் புதிதாக தொழில் தொடங்க ஊக்குவிப்பது பற்றி இந்தத் துறை யோசிக்கலாம்.

இந்தியாவில் இருந்து சில பொருட்கள் உலக அளவில் பெயர் பெற்ற காலம் ஒன்று இருந்தது. இன்றைக்கு, மென்பொருள் துறையில் உயர் திறன்கள் மற்றும் தனிச்சிறப்பு நிலையில் உலக அளவில் இந்தியா முத்திரை பதித்துள்ளது. அதை நகைத் துறையில் இன்னும் செய்ய வேண்டியுள்ளது. அதை நாம் செய்துவிட்டால், வாய்ப்புகள் ஏராளம். சரியான ஊக்கத்துடன் இந்தப் பணியை கவுன்சில் மேற்கொள்ள வேண்டும். ஆனால் மாநிலங்களும் இதில் பங்காற்ற வேண்டியுள்ளது. இந்த அரசு பதவி ஏற்றதில் இருந்து, ஏற்றுமதி மேம்பாட்டில் மாநில அரசுகள் முக்கிய பங்காற்றுவதை நாங்கள் ஊக்குவித்து வந்துள்ளோம். தொழில்துறை அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஏற்றுமதிகளுக்கு அப்பாற்பட்டு, உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ள இந்தியா, உள்நாட்டுத் தேவைகளும் அதிகரிப்பதையும் காணும்.

தனது வளர்ச்சிக்கு தொழில் துறை திட்டமிடுவது முக்கியம். ஆனால் அது மட்டும் போதாது. உங்களிடையே உள்ள அதிக பலவீனங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது அவசியம். உங்கள் தொழில் துறையில் மிகக் குறைவாக சம்பளம் தரப்படும் மற்றும் மிகவும் குறைவான வளம் உள்ள நபர்களை கணக்கெடுப்பது பற்றி கவுன்சில் பரிசீலிக்க வேண்டும். உதாரணத்துக்கு ஜெய்ப்பூர், திருச்சூர், வாரணாசி, ராஜ்கோட், ஜெய்ப்பூர் மற்றும் கோவையில் உள்ள தொழிலாளர்கள். அரசின் பின்வரும் குறைந்த செலவிலான சமூக பாதுகாப்புத் திட்டங்களில் அவர்கள் ஒவ்வொருவரும் பதிவு செய்வதை இந்தத் தொழில் துறை உறுதி செய்ய முடியுமா

— விபத்துக் காப்பீட்டுக்கான பிரதமரின் காப்பீட்டுத் திட்டம்

— ஆயுள் காப்பீட்டுக்கான பிரதமரின் ஜீவன்ஜோதி காப்பீட்டுத் திட்டம்

மற்றும்

–உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியத்துக்கு அடல் ஓய்வூதியத் திட்டம்?

விபத்துக் காப்பீடுக்கு செலவு மாதம் ஒரு ரூபாய். ஆயுள் காப்பீட்டுக்கு செலவு ஒரு நாளுக்கு ஒரு ரூபாய். வங்கியில் சுமார் ஐந்தாயிரம் ரூபாய் டெபாசிட் இருந்தால் இந்த சந்தாக்களை கட்டுவதற்கான நிரந்தரமாக செலுத்தும் அளவுக்கு வட்டியை ஈட்டித் தரும்.

நண்பர்களே. இந்தியா தனது சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை 2022-ல் கொண்டாடும். அந்த தேதிக்கு ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் தொழில் துறை என்ன இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறது? அதற்குள் நாட்டுக்கு உங்களால் என்ன செய்ய முடியும்? அப்போது இந்தத் தொழில் துறை எங்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதை தீவிரமாக சிந்தித்து, ஒரு திட்டத்தை உருவாக்குங்கள் என்று உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். விதிமுறைகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால், சொல்லுங்கள், குறிப்பிட்ட மற்றும் நடைமுறை சாத்தியமான ஆலோசனைகளை தெரிவியுங்கள். அவை நாட்டின் நலனுக்கு உகந்தவையாக இருந்தால் நிச்சயமாக நாம் அதை பரிசீலிக்கலாம்.

என் சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு நான் நிறைவு செய்கிறேன். இந்த மாநாடு அனைத்து வெற்றிகளும் பெற வாழ்த்துகிறேன்.

******