பி.எம்.இந்தியா
பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ‘ஜார்க்கண்ட் இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம்(ஐ.ஏ.ஆர்.ஐ.) அமைத்தலுக்கான விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை/இந்திய விவசாய ஆராய்ச்சி குழுமம் (டீ.ஏ.ஆர்.ஈ./ஐ.சி.ஏ.ஆர்.) திட்டத்தின் 12வது திட்ட முன்மொழிவிற்கு தனது ஒப்புதலை அளித்தது. ஜார்க்கண்ட் அரசு, ஹசரிபாக், பார்ஹி வட்டாரம், கவுரிய கர்மா கிராமத்தில் வழங்கிய 1,000 ஏக்கர் நிலத்தில் ரூ.200.78 கோடி (100% ஐ.சி.ஏ.ஆர். பங்களிப்பு) மதிப்பீட்டில் இந்நிறுவனம் ஏற்படுத்தப்படும்.
ஐ.ஏ.ஆர்.ஐ.-ஜார்க்கண்ட், தள பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், விவசாய-வனம், கால்நடை, மீன்வளம், கோழி வளர்ப்பு, பன்னி வளர்ப்பு, பட்டுப்புழு மற்றும் அரக்கு வளர்ப்பு, தேன் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விவசாய துறைகளையும் தனியம்சங்களாக கொண்டுள்ள புதுதில்லி ஐ.ஏ.ஆர்.ஐ. போன்ற உயரிய நிறுவனமாக விளங்கும்.
ஐ.ஏ.ஆர்.ஐ.-ஜார்க்கண்ட், அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து கிழக்கு இந்தியாவின் விவசாய நிலம் சார்ந்த சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண செயல்படும். இந்நிறுவனமானது தரமான மனிதவளத்தை உருவாக்குதல், உற்பத்தி, தரம் மற்றும் லாபத்தை உயர்த்துவதற்கான விவசாயிக்கேற்ற தொழில்நுட்பத்தை உருவாக்குவதை இலக்காக கொண்டு ஆராய்ச்சி, கல்வி, விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ளும். இது கிழக்குப் பகுதியில் விவசாயத் துறையில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக விவசாயம்-சார்ந்த தொழிற்சாலையை துவங்க ஊக்குவிப்பதுடன், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இது ஐ.ஏ.ஆர்.ஐ., புதுதில்லியின் தொலைதூர வளாகமாக விளங்க உள்ளதுடன், பயிர் அறிவியல்களுக்கான பள்ளிகள், இயற்கை வள ஆதார மேலாண்மை, மற்றும் கால்நடை அறிவியல்கள் உள்ளிட்டவை குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த பல்வகை ஆராய்ச்சிப் பள்ளியாக விளங்கும்.