பி.எம்.இந்தியா
“துடிப்புமிக்க குஜராத் சர்வதேச மாநாடு – 2019”-ல் உறுப்பு நாடாக பங்கேற்றுள்ள டென்மார்க் நாட்டின் பிரதமர் திரு. லார்ஸ் லோக்கே ராஸ்முசேன், 2019 ஜனவரி 18-19 இந்தியா வருகை தந்தார். பிரதமர் திரு. ராஸ்முசேனுடன், டேனிஷ் நாட்டின் பெரிய தொழில்நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட வர்த்தக தூதுக்குழுவும் இந்தியா வந்துள்ளது.
துடிப்புமிக்க குஜராத் மாநாட்டின் இடையே, 2019 ஜனவரி 18 அன்று காந்திநகரில் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், டென்மார்க் பிரதமர் திரு. ராஸ்முசேனும், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே 2018 ஏப்ரலில், ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற முதலாவது இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டின் போது இருதலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தற்போதைய சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்புக்கான பல்வேறு துறைகள் குறித்து விவாதித்த இருதலைவர்களும், இருதரப்பு நலன் சார்ந்த சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இருநாடுகளிடையே, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க பெரும் வாய்ப்பு இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவிற்கு தேவைப்படும் முக்கிய தொழில்நுட்பங்களில் டென்மார்க் உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ளது. திறன் மிக்க நாடாக டென்மார்க் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, புதிய தொழில்நுட்பங்கள் உலகில் எங்கு கிடைத்தாலும், அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருப்பதாகக் கூறியதோடு, உணவு பாதுகாப்பு, நீர்மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை இந்தியாவும் டென்மார்க்கும் உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, மத்திய அரசின் கப்பல் துறை மற்றும் டென்மார்க் அரசின் தொழில், வணிகம் மற்றும் நிதித்துறை இடையே கடல்சார் அம்சங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கோவா மாநிலம் பனாஜியில் நகர்ப்புற வாழ்வியல் ஆய்வகம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பாக, பனாஜி பொலிவுறு நகர மேம்பாட்டு நிறுவனம் மற்றும் புதுதில்லியில் உள்ள டேனிஷ் தூதரகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்தியாவில் கப்பல் தொழில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுச்சூழல், வேளாண்மை மற்றும் உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் சுமார் 130 டேனிஷ் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், பொலிவுறு நகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் கழிவுப் பொருட்களிலிருந்து மின் உற்பத்தி செய்வது போன்றவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ஆர்வமுடன் உள்ளன. குஜராத்தின் கப்பல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் டேனிஷ் நாட்டின் பல்வேறு பெரும் தொழில்நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்துள்ளன.
தமது இந்தப் பயணத்தின் போது, 2019, ஜனவரி 19 அன்று புதுதில்லியில் டேனிஷ் கலாச்சார நிறுவனம் மற்றும் டேனிஷ் தூதரகத்தின் புதிய கட்டடத்தையும் அந்நாட்டுப் பிரதமர் ராஸ்முசேன் திறந்துவைக்கிறார். ஆக்ராவுக்கும் அவர் பயணம் மேற்கொள்கிறார்.
***
Had an excellent meeting with PM @larsloekke of Denmark.
— Narendra Modi (@narendramodi) January 18, 2019
Denmark is a valued friend and we discussed deepening cooperation in energy, trade, agriculture and other areas. pic.twitter.com/p3eP0jqUMW