பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, தேசிய தொழிற்பயிற்சி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. 2019-20ம் ஆண்டுக்குள் 50 லட்சம் நபர்களுக்கு தொழிற்பயிற்சியினை 10,000 கோடி செலவில் வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய திறன் மற்றும் தொழில் வளர்ச்சித் துறையின் கீழ், பயிற்சி இயக்குநர் அவர்களால், இத்திட்டம் செயல்படுத்தப்படும். தொழில் நடத்துபவர்கள் தொழிற்பயிற்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த இத்திட்டம் முயற்சி எடுக்கும். தொழிற்பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் 25 சதவிகிதம் தொழில் நடத்துபவர்களுக்கு மத்திய அரசால் நேரடியாக வழங்கப்படும். தொழிற்பயிற்சியில் உள்ளோரை பணியில் அமர்த்துவதற்காக தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை வழங்குவது இதுவே முதல் முறை. தொழிற்பயிற்சியின் முக்கிய கூறான, அடிப்படை பயிற்சியும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி அளிப்பதற்காக ஆகும் செலவில் 50 சதவிகிதத்தை மத்திய அரசு ஏற்கும்.
இத்திட்டம் தொழிற்பயிற்சியில் ஈடுபடுவோர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே வெற்றியைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பயிற்சித் திட்டங்களில் இது ஒரு முக்கியமான திட்டமாக உருவாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பின்னணி :
இந்தியாவில், தொழில் திறனை வளர்க்க, தொழிற்பயிற்சி வழங்குவது என்பது முக்கியமான வழிமுறைகளில் ஒன்றாகும். தொழிற்சாலைகளை சார்ந்து, நடைமுறை பயிற்சியோடு, முழுமையான பயிற்சியாக தொழிற்பயிற்சி உள்ளது. பிரதமர் அவ்ரகளால் 2015ல் தொடங்கி வைக்கப்பட்ட திறன் வளர்ச்சி மற்றும் தொழில்திறன் வளர்ச்சிக்கான கொள்கைத் திட்டம், தொழிற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறது. மனிதவள மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேசிய கொள்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய இத்திட்டம் உதவும். நடுத்தர மற்றும் சிறு குறுந்தொழில் முனைவோரோடு இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 2020-ம் ஆண்டிற்குள் வேலை வாய்ப்புகளை பத்து மடங்கு அதிகரிக்கச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.