பி.எம்.இந்தியா
நமாமி கங்கைத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்தார்.
இத்திட்டம் குறித்த விளக்கக் காட்சியின் போது அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கினர்.
நகரங்களில் உள்ள நதிக்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கங்கை நதியின் முக்கிய பாதைகளாக கருதப்படும் ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பாட்னா, பகல்பூர், ஹவுரா, கொல்கத்தா ஆகிய பெரு நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் மீது அதிக கண்காணிப்பும் ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கங்கை நதியின் கிளை ஆறுகளின் நீரின் தரம் வெகுவாக மேம்பட்டுள்ளது. நீரில் கரைக்கப்பட்ட ஆக்சிஜன் மற்றும் உயரி ரசாயன ஆக்சிஜன் தேவை குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்று அலுவலர்கள் குறிப்பிட்டனர்.
கங்கை நதிக்கரையோரம் உள்ள கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக சுகாதாரத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. கங்கை நதியின் தூய்மைப்படுத்தும் பணி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குவதுடன் இப்பணியில் மக்கள் பங்கேற்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், மத்திய நீர் வள அமைச்சகம், மத்தியக் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், தூய்மையான கங்கைக்கான தேசிய இயக்கம், மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகிய துறைகளின் மூத்த அலுவலர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.