பி.எம்.இந்தியா

2019 பொதுத் தேர்தலில் தமது கட்சிக்கு மகத்தான வெற்றித் தேடி கொடுத்தமைக்காக பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் திரு.ஷின்சோ அபே, மே 23 அன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இரு தலைவர்களும் தொலைபேசி உரையாடலில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா-ஜப்பான் பரஸ்பர உறவில் ஏற்பட்டுள்ள மேம்பாடு குறித்து விவாதித்தார்கள். இந்த உறவையும், ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தி முன்னோக்கி எடுத்துச் செல்வது குறித்து உறுதிப்படுத்தினார்கள். உலக அளவில் இந்தியா-ஜப்பான் பிரத்யேக உறவை அமைதி, முன்னேற்றம், வளம் நோக்கி அழைத்துச் செல்வது என்றும் உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
அடுத்த மாதம் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டின்போது இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கும் சந்திப்பு குறித்தும் தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்கள்.
இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
*****