பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, மொசாம்பிக் நாட்டிலிருந்து நீண்ட கால அடிப்படையில் இரு நாடுகளும் தேர்ந்தெடுக்கும் அரசு அமைப்பின் மூலமாகவோ, அல்லது தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ, பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு ஒப்புதல் அளித்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், பட்டாணி மற்றும் துவரம் பருப்பு வகைகளை மொசாம்பிக் நாடு அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவும். மொசாம்பிக் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளின் அளவை 2016-17 ஆண்டில் 1,00,000 டன்களில் இருந்து 2020-21ம் ஆண்டில் 2,00,000ஆக அதிகரிக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இறக்குமதியின் மூலம், உள்நாட்டில் பருப்பு வகைகள் அதிக அளவில் கிடைப்பதனால், பருப்பு வகைகளின் விலை ஸ்திரமாகும்.
2015-16ல், இந்தியாவின் மொத்த பருப்பு உற்பத்தி 17 மில்லியன் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5.79 மில்லியன் டன் உள்நாட்டுத் தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்படுகிறது. 2015-16ம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி, இறக்குமதி ஆகிய இரண்டையும் சேர்த்தும், உள்நாட்டுத் தேவைக்கு குறைவாக அது இருந்ததனால் பருப்பு வகைகளின் விலை உயரும் சூழல் ஏற்பட்டது.
இந்த பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், இந்தியா மற்றும் மொசாம்பிக் இடையே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் பருப்பு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மொசாம்பிக் நாட்டுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் போலவே, இதர நாடுகளுடனும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.