Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்.


இங்கு ஏராளமான எண்ணிக்கையில் கூடியிருக்கும் இளைஞர்களே,

பாட்னா பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் முதன்முறையாக கலந்துகொள்ளும் பிரதமர் நான்தான் என முதல்வர் கூறினார்.  எனக்கு முன்னால் இப்பதவியில் இருந்தவர்கள் அந்த வாய்ப்பை எனக்காக விட்டுச் சென்றதில் பெருமகிழ்ச்சி எனக்கு.

முதற்கண், நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியிருக்கும் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் இப்புனிதமான மண்ணை வணங்குகிறேன்.  புகழ்பெற்ற சீனப்பழமொழி ஒன்று உண்டு, “உங்கள் லட்சியம் ஓராண்டுக்கானது என்றால் தானியங்களை விதையுங்கள்.  உங்கள் லட்சியம் 10-20 ஆண்டுகளுக்கானது என்றால் பழ-வகைகளை விதையுங்கள்.  உங்கள் லட்சியம் தலைமுறைகளுக்கானது என்றால் நல்ல மனிதர்களை உருவாக்குங்கள்.”  இந்த பழமொழிக்கு நல்லதொரு உதாரணமாக பாட்னா பல்கலைக்கழகம் விளங்குகிறது.  நூறாண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பல தலைமுறை மாணவர்கள் வந்து படித்து பயன் பெற்றிருக்கிறார்கள்.  அவர்களில் சிலர் அரசியல்வாதிகளாகவும், பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.  எந்த மாநிலத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கு அரசு ஆட்சிப்பணியில் இருக்கும் அதிகாரிகளில் முதல் ஐந்து பேரில் ஒருவராவது பாட்னா பல்கலைக்கழகத்தில் படித்தவராகத்தான் இருப்பார்.

நான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளை தினமும் சந்திக்கிறேன்.  அன்றாடம் 80ல் இருந்து 100பேர் வரை இரண்டு மணி நேரத்தில் சந்திக்கிறேன்.  அவர்களில் பல அதிகாரிகள் பீகாரில் இருந்து வருகிறவர்களாகவே இருக்கிறார்கள்.  சரஸ்வதிதேவி அவர்களை ஆசீர்வதித்துள்ளார்.  ஆனால் பீகாருக்கு லட்சுமிதேவியின் ஆசியும் தேவைப்படுகிறது.  இந்திய அரசு இரண்டு தேவிகளின் ஆசியுடன் பீகாரை முன்னேற்ற உறுதிபூண்டுள்ளது.

நிதிஷ் அரசு பீகாரை முன்னேற்ற உறுதியேற்றுள்ளதைப் போலவே, இந்திய அரசும் கிழக்கு மாநிலங்களை முன்னேற்ற உறுதி பூண்டுள்ளது.  நம் உறுதியின் மூலம், இந்தியாவின் 75ஆவது சுதந்திர ஆண்டான 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக பீகாரையும் ஆக்க வேண்டும்.

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது பாட்னா நகர்.  பீகாரின் அறிவுச் செழுமையும், பாரம்பரியமும் கங்கை நதியைப் போலவே பழமையானது.  இந்தியாவின் கல்வி வரலாற்றை குறிப்பிடும்போது நாலந்தா பல்கலைக்கழகத்தையும், விக்ரம்ஷீலா பல்கலைக்கழகத்தையும் யாரும் குறிப்பிடாமல் இருக்கவே முடியாது.

மனித வாழ்க்கையை மேம்படுத்தும் அனைத்து துறைகளிலும் இம்மண்ணின் பங்கு இருக்கிறது.  இம்மண்ணின் வரலாறும், பாரம்பரியமும் மனிதசேவையில் ஆர்வம் உள்ளவர்கள் எல்லோர்க்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது.  வளமான வரலாற்றை நினைவுகூர முடிந்தவர்கள் அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறார்கள்.  வரலாற்றை மறப்பவர்களால் அது முடிவதில்லை.  இம்மண்ணுக்கு ஒட்டுமொத்த பூமியையுமே ஒளிமயமாக்கும் சக்தி இருக்கிறது.  அதற்கு இம்மண்ணின் வரலாற்றுப் பாரம்பரியமும், கலாச்சாரப் பாரம்பரியமும் உதவிபுரியும்.  இந்த அளவிற்கான ஆற்றலும், திறனும் வேறு எங்குமே இல்லை என்பது என் நிலைப்பாடு.

ஒரு காலத்தில் நாம் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று கற்க வேண்டிய சூழல் இருந்தது.  ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.  தொழில்நுட்பங்களின் தாக்கத்தினால் வாழ்க்கை முறையே மாறிவிட்டது.  அதனால் மாணவர்களும் பல சவால்களை சந்திக்கிறார்கள்.  இப்போதிருக்கும் சவால் எப்படி புதிய விஷயங்களை கற்பது என்பதைவிட ஏற்கனவே கற்ற பழைய விஷயங்களையும், நாட்பட்ட விஷயங்களையும் எப்படித் துறப்பது என்பதாகத்தான் இருக்கிறது.

ஒருமுறை ஃபோர்ப்ஸ் இதழின் உரிமையாளர் திரு.ஃபோர்ப்ஸ் சுவாரசியமான கருத்து ஒன்றை தெரிவித்தார்.  கற்றலின் உண்மையான பயன் நமது மூளையை காலி செய்து, அதில் புதிய எண்ணங்களையும், புதிய விஷயங்களையும் நிரப்புவதாகும் என்றார்.  கல்வி நம் மூளையை காலி செய்து, எண்ணங்களை விரிவாக்க வேண்டும் என்றார்.  பொதுவாகவே  நம் சிந்தனைகள் மூளையை சோர்வடைய வைப்பதாய் இருக்கின்றன.  அதனால் உண்மையான மாற்றத்தை நாம் விரும்பினால் சிந்தனையை விரிவாக்குவதில் கவனம் செலுத்தி, அதன்மூலம் புதிய எண்ணங்களை நம் மூளையில் விதைக்க வேண்டும்.  அதற்கேற்ப பல்கலைக்கழகங்கள் கல்வியைத் தரவேண்டுமே தவிர, வெறுமனே கல்வி புகட்டல் மட்டும் பத்தாது.  நம் கல்வி நிறுவனங்களை இந்தப் பாதையில் எப்படி நகர்த்துவது?

மனித கலாச்சாரத்தின் இத்தனை ஆண்டுகால வரலாற்றில் புத்தாக்கமும், கண்டுபிடிப்புகளும் மட்டும் தொய்வுறாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்தில் மனிதர்கள் ஏதாவதொன்றை கண்டுபிடித்து தங்கள் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.  இந்த காலத்தில் புத்தாக்கம் என்பது போட்டி மனப்பான்மையுடன் சேர்ந்து பயணிக்கிறது.  எனவே கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்கும் கல்வி மையங்களைக் கொண்ட நாடுகளினால் மட்டுமே முன்னேற்றத்தை சந்திக்க முடியும்.  ஆனால் மேலோட்டமாக சில மாற்றங்களைச் செய்வதால் மட்டும் ஒரு கல்விமையம் மாறிவிடாது.  பழைய சிந்தனைகளையும், நாட்பட்ட கொள்கைகளையும் விடுத்து வருங்காலத்தை அரவணைக்கும் வகையில் அறிவியல், தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாழ்க்கைமுறையை மேம்படுத்தும் வண்ணம் புதிய பல சிந்தனைகளை உள்வாங்கி, அதன்படி இயங்குவதே காலத்தின் தேவை.  எல்லா துறைகளுக்குமே தொழில்நுட்பத்தின் உதவியுடன் சீரமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.  சமூகத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கு பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் தேவைப்படுகிறது.  எனவே உலகளாவிய போட்டி இருக்கும் இச்சூழலில் வருங்கால தலைமுறைகளின் தேவைகளை தீர்க்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும்.  இந்தக்காலத்தில் நாம் ஒரே ஒரு நாட்டுடன் போட்டியிடவில்லை.  உலகத்துடன் போட்டியிடுகிறோம்.  எனவே அதை ஒரு சவாலாக ஏற்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.  நாடு முன்னேற வேண்டும் என்றால், உலக அளவில் நமக்கான இடத்தை தக்க வைக்க வேண்டும் என்றால், நம் இளைய தலைமுறையை பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில் தயார் செய்ய வேண்டும்.

இந்தியா மீதான உலகத்தின் பார்வை தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்ட பின்னர்தான் மாறியது.  அதற்கு முன்பு இந்தியாவை ஏதோ பாம்பாட்டிகளின் நாடாகத்தான் உலகம் பார்த்தது.  இந்தியர்கள் என்றாலே பில்லி சூனியம், பிசாசு மற்றும் சகுனத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் என்றுதான் உலகம் கருதியது.  தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்ட பின்தான் இந்திய இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவைப்பார்த்து உலகமே வியந்தது.  18-20 வயதுக்குள் இருக்கும் இந்திய இளைஞர்கள் தங்கள் தொழில்நுட்ப திறமையைக் காட்டியவுடன் உலகமே ஆடிப்போனது.  அப்படித்தான் இந்தியா மீதான அவர்களின் மதிப்பு மாறியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தாய்வான் நாட்டுக்குச் சென்றேன்.  அப்போது நான் முதல்வராகவில்லை.  தேர்தல் அரசியலில் கூட இல்லை.  தாய்வான் அரசின் அழைப்பை ஏற்று அங்கே சென்றிருந்த எனக்கு தாய்வான் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.  எனது பத்து நாள் பயணத்தில் அவருடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.  ஒரு ஆறேழு நாட்களுக்குப் பின், “உங்களிடம் நான் ஒன்று கேட்கலாமா?” என்றார்.  நானும், “தாராளமாக கேளுங்கள்,” என்றேன்.  இருந்தும் அவர் தயக்கம் போகவில்லை. பின்னர் ஒருநாள் பயணத்தின்போது, “அன்று ஏதோ கேட்பதாக சொன்னீர்களே, என்ன அது” என நானே அவரிடம் கேட்டேன்.  அவர் மீண்டும் தயங்கினார்.  அவர் ஒரு தொழில்முறை கணினி பொறியாளர்.  நான் எதுவானாலும் தயங்காமல் கேளுங்கள் என சொன்னபின், “இந்தியா இப்போது மாறிவிட்டதா? அல்லது அதே பாம்பாட்டி நாடாகத்தான் இருக்கிறதா?” எனக் கேட்டார். “என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது?” எனக் கேட்டேன்.  அவர் நான் கோபமாக கேட்கிறேனோ என பயந்துவிட்டார்.  உடனே நான், “இல்லை சகோதரா.  இந்தியா இப்போது மாறிவிட்டது. எங்கள் முன்னோர்கள் பாம்புகளுடன் விளையாடினார்கள்.  எங்கள் இளைஞர்கள் ‘மவுஸ்’களுடன் விளையாடுகிறார்கள்,” என்றேன். அவருக்கு புரிந்துவிட்டது.  பின்னர் என்னிடம் தன் கேள்விக்காக மன்னிப்பு கோரினார்.

ஒன்றிரண்டு திட்டங்களை முடித்து நாம் விருதுகளைப் பெறுகிறோம்.  ஆனால் பெரிய அளவில் நிறைய கண்டுபிடிப்புகளை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  புனிதமான மண்ணில் அமைந்திருக்கும் பாட்னா பல்கலைக்கழகத்தின் இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என எல்லோரிடமும் நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.  இந்தியா நிகழ்காலத்தில் சந்திக்கும் சவால்களைத் தீர்க்க புதுமையான கண்டுபிடிப்புகளை தீர்வாகத் தாருங்கள்.  கைக்கு அடக்கமான, உபயோகப்படுத்த எளிதான, விலை குறைவான கண்டுபிடிப்புகளைக் கொடுங்கள்.  இதுபோன்ற சிறிய திட்டங்களை ஊக்குவித்தால் அது பெரிய தொழில்களாக மாறும் வாய்ப்புள்ளது. முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெற்று இளைஞர்கள் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்கும் தொழில்களை தொடங்கலாம்.   புதிய தொழில்களை அதிகமாக தொடங்கும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.  இந்தியா நினைத்தால் முதலிடத்திற்கு வர முடியும்.  ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு புதிய சிந்தனை, எண்ணம் தோன்றினால் ஒரு பெரும் புரட்சிக்கே வாய்ப்புள்ளது.  எனவே அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், குறிப்பாக பாட்னா பல்கலைக்கழகத்திற்கு புத்தாக்கங்களை ஊக்குவிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.   நாம் முன்னேற வேண்டிய தருணமிது.

இந்தியாவில் திறமைக்கு பஞ்சமே இல்லை.  இந்தியாவில் 800மில்லியன், அதாவது நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 65% பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.  இந்தியா இளமையாக இருப்பதோடு, அதன் கனவுகளும் இளமையாகத்தான் இருக்கிறது.  இப்படியான பலத்துடன் விளங்கும் நாடு எதையும் சாதித்து, தன் கனவுகளை நனவாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

முதல்வர் நிதிஷ், பாட்னா பல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகம் ஆக வேண்டும் என பேசியபோது நீங்கள் எல்லோரும் பலமாக ஆரவாரம் எழுப்பி வரவேற்றீர்கள்.  ஆனால் மத்திய பல்கலைக்கழகங்களின் காலம் முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.  நான் இன்னும் அதை ஒருபடி முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்.  இன்று நடக்கும் பல்கலைக்கழக விழாவில் நான் கலந்துகொள்வதே உங்கள் அனைவரையும் அதை நோக்கி அழைக்கத்தான்.  கல்வித்துறையை பொறுத்தவரை அதில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் மெதுவாகத்தான் நடக்கின்றது.  நம் பாடத்திட்டங்களுக்குள் உள்ள வேறுபாடு கடலளவு இருக்கிறது.  எனவே ஒவ்வொரு கட்டத்திலும் ஏராளமான சிக்கல்களை மாணவர்கள் சந்திக்க நேர்கிறது. உலகத்தோடு போட்டியிடத் தேவையான வகையில் நம் கல்வியில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களும், கண்டுபிடிப்புகளும், குறிப்பாக உயர்கல்வியை பொறுத்தவரை சற்று பின் தங்கியே உள்ளது.  எனவேதான் இந்த அரசு சில துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளது.  IIMகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து கொடுப்பதைப் பற்றிய விவாதம் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது.  அரசிடம் இருந்து ஏராளமான உதவித்தொகையை இந்த நிறுவனங்கள் பெற்றாலும், அரசின் எந்த வழிகாட்டுதல்களையும் இவை பின்பற்றுவதில்லை. பல ஆண்டுகளாக நடந்த விவாதங்களின் பலனாக முதன்முறையாக IIMகளுக்கு முழு தன்னாட்சி அதிகாரம் தரப்பட்டுள்ளது.  பல செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிடவில்லை என்றாலும், சில கட்டுரைகள் இதன் பொருட்டு எழுதப்பட்டன.  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்குவதில் பாட்னா பல்கலைக்கழகம் எத்தகைய பங்காற்றுகிறதோ அதே அளவிலான பங்கை CEOக்களை உருவாக்குவதில் IIMகள் ஆற்றுகின்றன.  எனவேதான் மாண்புமிகுந்த இக்கல்வி நிறுவனங்களை அரசின் விதிமுறைகளில் இருந்து விடுவிக்க முடிவுசெய்தோம்.  இப்போது IIMகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பை சரியாக உபயோகித்து நாட்டின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் நிறைவேற்ற அவர்கள் உழைப்பார்கள் என நம்புகிறேன்.  அதே நேரம் IIMகளின் முன்னாள் மாணவர்களையும் அக்கல்வி மையங்களின் நிர்வாகத்தில் பயன்படுத்துமாறு நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  பாட்னா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியிலும் அதன் முன்னாள் மாணவர்களின் பங்கு இருப்பதாக அறிகிறேன்.  உலகின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் அத்தனையின் வளர்ச்சியிலும் அவற்றின் முன்னாள் மாணவர்களின் பங்கு அளப்பரியது.  பொருளாதார பங்களிப்பு மட்டுமல்லாமல், அறிவு, அனுபவம், பதவி என பல வகைகளில் உதவுகிறார்கள்.  பொதுவாக முன்னாள் மாணவர்களை நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து மாலையிட்டு மரியாதை செய்து, அவர்களிடம் நன்கொடை வாங்கும் வழக்கம்தான் பரவலாக உண்டு.  ஆனால் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அதன் முன்னாள் மாணவர்கள் பெரிய பலம். எனவே வெறுமனே பேருக்காக அவர்களின் பங்களிப்பு இல்லாமல் உணர்வுபூர்வமான பங்களிப்பாக இருக்க வேண்டும்.

சில நிமிடங்களுக்கு முன்பு நான் பாட்னா பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகம் என்றில்லாமல், அதைவிட ஒருபடி முன்னோக்கி அழைத்துச் செல்வதில் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டேன்.  அதன்பொருட்டு உங்களை அழைக்கவே வந்திருப்பதாகவும் கூறினேன்.  இந்திய பல்கலைக்கழகங்களின் முன்பு இந்திய அரசு ஒரு கனவை சமர்ப்பித்திருக்கிறது.  உலகின் முதல் 500 இடங்களுக்குள் எந்த ஒரு இந்தியப் பல்கலைக்கழகமும் இல்லை.  நாலந்தா, விக்ரம்ஷிலா, தக்சஷீலா, வல்லபி போன்ற பல்கலைக்கழகங்களில் 1300, 1500 ஆண்டுகளுக்கு முன்பே உலகெங்கும் இருந்து மாணவர்கள் படித்தார்கள் என்கிற வரலாறு நமக்கிருக்கும்போது, முதல் 500ல் ஒரு இந்தியப் பல்கலைக்கழகம் கூட இல்லாதது பெரிய முரணாக இல்லையா? இந்த முரணைக் கலைந்து, நிலைமையை மாற்றுவது நம் கடமை அல்லவா?  நம்மால்தான் இந்த நிலைமையை மாற்ற முடியுமே தவிர வெளியில் இருந்து யாரும் வந்து மாற்ற மாட்டார்கள்.  இந்த உறுதிமொழியை நாம் எடுத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

இதை செயல்படுத்தும் பொருட்டு இந்திய அரசு 10 அரசு பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை அரசின் விதிமுறைகளில் இருந்து விடுவித்து உலகத்தரத்தை எட்டச் செய்வதற்கு முனைந்துள்ளது.  ஐந்தாண்டுகளில் இப்பல்கலைக்கழகங்களுக்கு 10000கோடி ரூபாய் நிதி உதவி கிடைக்கும்.  இந்த முன்னெடுப்பு ஒரு பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகம் என அறிவிப்பதைவிட பெரியதாகும்.  இந்த பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வதில் எந்த அமைச்சருக்கும், முதல் அமைச்சருக்கும், பிரதமருக்கும் பங்கிருக்காது.  வெளிப்படையான போட்டியின் மூலமே பல்கலைக்கழகங்கள் தேர்ந்தெடுக்கப்படும். இறுதி தேர்வு தொழில்முறை நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்படும்.  இந்தப் போட்டியில் பங்குபெறும் பொறுப்பு மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடையதாகும்.    அவர்களுடைய செயல்பாடு மதிப்பிடப்படும்.  சர்வதேச செயல்பாடுகளின் தரமும் மதிப்பிடப்பட்டு, முதல் 10 இடங்களுக்குள் வரும் பல்கலைக்கழகங்கள் அரசின் விதிமுறைகளில் இருந்து விடுவிக்கப்படும்.  அவர்களின் செயல்பாடுகளை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.  ஐந்தாண்டுகளுக்குள் இந்த பல்கலைக்கழகங்களுக்கு 10000கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.  ஒரு பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக அறிவிப்பதை விட, இத்திட்டத்தின் மூலம் அப்பல்கலைக்கழகத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.  இந்த முக்கியமான விஷயத்தில் பாட்னா பின் தங்கிவிடக்கூடாது.  எனவேதான் இதில் பங்குபெற பாட்னா பல்கலைக்கழகத்தையும் அழைப்பதற்காக நான் வந்தேன்.  பல்கலைக்கழகத்தையும், அதன் பேராசிரியர்களையும் இந்த திட்டத்தில் பங்குபெற அழைக்கிறேன்.  பெருமைமிகு இந்த பாட்னா பல்கலைக்கழகம் உலக அளவில் பிரகாசிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  பாட்னா பல்கலைக்கழகத்தை அந்த நாளை நோக்கி கொண்டு செல்ல உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.  எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த நூற்றாண்டு விழாவில் நீங்கள் எடுத்த அனைத்து உறுதிமொழிகளையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அந்த உணர்வு மற்றும் நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நன்றி.

***