பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று 2015 டிசம்பர் பாரீஸ் நகரில் நடைபெற்ற 21 – வது தரப்பினர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பாரீஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரகாஷ் ஜவடேகர் இந்தியாவின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் 2016 ஏப்ரல் 22 – ந் தேதி ஐ.நா. தலைமைச் செயலாளர் திரு பான் கி மூன் ஏற்பாடு செய்திருக்கும் உயர்மட்டத்திலான கையெழுத்திடும் நிகழ்ச்சியின் போது கையொப்பமிடுவார்.
உலக பருவநிலை மாற்ற ஒத்துழைப்பில் பாரீஸ் உடன்பாடு முக்கியமான மைல் கல்லாகும். மாநாட்டுத் தீர்மானங்கள் அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும் சமத்துவ கொள்கைகளை அங்கீகரிப்பதற்கும் பொதுவான ஆனால் வித்தியாசப் படுத்தப்பட்ட பொறுப்புகள் கொள்கையை அங்கீகரிக்கவும் பல்வேறு தேசிய சூழ்நிலகளைக் கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அவற்றின் திறன்களை ஏற்கவும் பாரீஸ் ஒப்பந்தம் வகை செய்கிறது.
பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
a) பாரீஸ் ஒப்பந்தம் வளரும் நாடுகளின் வளர்ச்சிக் கட்டாயங்களை ஏற்றுக் கொள்கிறது. வளரும் நாடுகளின் மேம்பாட்டுக்கான உரிமைகளை அது அங்கீகரிக்கிறது. வளரும் நாடுகளின் மேம்பாட்டினை சுற்றுச்சூழலுடன் நல்ல முறையில் இணைப்பது அதே சமயம் மிகவும் பாதிப்படையக் கூடியவற்றின் நலன்களைப் பாதுகாப்பது தொடர்பான முயற்சிகளையும் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்கிறது.
b) நிலைத்திருக்கக் கூடிய வாழ்க்கை முறைகள் மற்றும் நிலைத்திருக்கக் கூடிய நுகர்வு நடைமுறைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பாரீஸ் ஒப்பந்தம் ஏற்றுக் கொள்கிறது. இவற்றில் வளர்ச்சியடைந்த நாடுகள் முன்னின்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பருவநிலை நீதியின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது என்றும் ஒப்பந்தத்தின் முன்னுரை வாசகம் கூறுகிறது.
c) மாநாட்டு முடிவுகளின் அமலாக்கத்தை வலுப்படுத்த வேண்டும் எனக் கோரும் பாரீஸ் ஒப்பந்தம் சமத்துவக் கொள்கைகளை வலியுறுத்தி பல்வேறு தேசியச் சூழ்நிலைகளில் பொதுவான ஆனால் வித்தியாசப்படுத்தப்பட்ட பொறுப்புகள் மற்றும் திறன்களை வலியுறுத்துகிறது.
d) ஒப்பந்தத்தின் நோக்கம் துயர்துடைப்பை மத்தியமாகக் கொண்டதல்ல என்று வலியுறுத்தும் இந்த ஒப்பந்தம் இதர முக்கிய கூறுகளான தழுவல், இழப்பு மற்றும் சேதம், நிதி, தொழில் நுட்பம், திறன் உருவாக்கம், நடைமுறை வெளிப்படைத் தன்மை மற்றும் ஆதரவு ஆகியவற்றை இணைத்துக் கொள்கிறது.
e) 2020 -ம் ஆண்டுக்கு முந்தைய செயல்களும் முடிவுகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளன. வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது நிதி ஆதரவு நிலைகளை உயர்த்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன. 2020 – ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க டாலர் 100 கோடியைக் கூட்டாக வழங்கும் இலக்கை அடைய வேண்டும் என்றும் அதன் மூலம் துயர்துடைப்பு மற்றும் தக அமைவு நிதி ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தி உகந்த தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவையும் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டின் கொள்கைகள் முடிவுகள் அடிப்படையில் வலுவான நிலைத்திருக்கக் கூடிய பருவ நிலை ஒப்பந்தம் அவசியம் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்தியாவின் முக்கிய அக்கறையுள்ள விஷயங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
*******