Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரகதி மூலம் பிரதமரின் கலந்துரையாடல்

பிரகதி மூலம் பிரதமரின் கலந்துரையாடல்


புது தில்லி ஆகஸ்ட் 24, 2016

மக்களும் பங்குபெறக்கூடிய வகையிலான முனைப்பான நிர்வாகத்திற்கும், உரிய நேர செயல்பாட்டுக்கும் உதவும் ICT சார்ந்த பிரகதி (PRAGATI) எனும் பன்முக இயக்குதளம் மூலம் இன்று தனது பதினான்காவது கலந்துரையாடலை பிரதமர் மோடி நிகழ்த்தினார்.

பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு சம்பந்தமான குறைகளை கண்டறிவதிலும், தீர்ப்பதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை பிரதமர் மதிப்பிட்டார். இந்தத் துறைகளில் உள்ள குறைகளை அரசு தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மேலும் மாணவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை திட்டமிட்டு செய்யவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி பள்ளி குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். அனைத்து அமைச்சகங்களையும் விண்வெளி தொழில்நுட்பத்தை பரவலாக பயன்படுத்துமாறு தான் அறிவுறுத்தியதை நினைவுகூர்ந்த பிரதமர், தேர்வு மையங்களை சரியாக தேர்ந்தெடுக்கவும், மாணவர்கள் தேர்வு மையங்களை சுலபமான முறையில் சென்றடையவும் விண்வெளி தொழில்நுட்பம் உதவும் என்றார்.

சுகம்யா பாரத் அபியான் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை பிரதமர் மதிப்பிடும்போது, பள்ளி, பொது அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றை அணுகுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் காட்டிவரும் அக்கறையை பிரதமர் பாராட்டினார்.

ஆதார் அட்டை பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி தெரிவிக்கும் போது, இதுவரை 105 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் பின் தங்கியிருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் இப்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கல்வி உதவித்தொகை மற்றும் பிற கல்விசார் உதவிகளை பெற வசதியாக, 5 முதல் 18வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதில் மாநிலங்கள் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

பஞ்சாப், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம், சிக்கிம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முக்கியமான உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், ரயில், ஆற்றல், ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை பிரதமர் மதிப்பிட்டார். 1981-82ல் அனுமதி வழங்கப்பட்டு இன்னமும் நிலுவையில் இருக்கும் நங்கல் அணை-தல்வாரா ரயில்பாதை திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் மதிப்பிட்டார். இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலைமைச் செயலாளர்களிடம் இனியும் தாமதிக்காமல் இந்த திட்ட வேலைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

***