பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவிக்காலத்தில், இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களுக்கான இருவார கால ஏலம், சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.
இந்த ஏலத்திற்கு இந்திய மக்களிடமிருந்து அமோக வரவேற்பு காணப்பட்டது. தேசிய கலைப்பொருட்கள் அருங்காட்சியகத்தில் நேரில் இரண்டு நாட்களும், மின்னணு முறையில் pmmementos.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் இரண்டு பிரிவுகளாக இந்த ஏலம் நடைபெற்றது.
இந்த காலகட்டத்தில், 1,800-க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள், அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர்களுக்கு வெற்றிகரமாக ஏலத்தில் விடப்பட்டது.
இந்த ஏலம் மூலம் கிடைத்த தொகை, கங்கையை தூய்மைப்படுத்தும் உன்னத பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
ஏலத்தின் முக்கிய அம்சங்கள்
தேசிய கலைப்பொருட்கள் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஏலத்தின் போது, பிரத்யேகமாக கையால் தயாரிக்கப்பட்ட மரத்தாலான மோட்டார் சைக்கிள் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனது. ரயில்வே துறையுடன் நரேந்திர மோடிக்கு உள்ள சிறப்பு பிணைப்பை எடுத்துரைக்கும் விதமாக பிரதமர் மோடி ரயில் நிலைய நடைமேடையில் இருப்பது போன்ற, அரிய கலை அம்சத்துடன் தயாரிக்கப்பட்ட ஓவியமும் இதேபோன்று அதிக விலைக்கு ஏலம் போனது.
மின்னணு ஏல முறையிலும் சில பொருட்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் விடப்பட்டன.
இதேபோன்று வேறு ஏராளமான பரிசு பொருட்களும் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையை விட, பன்மடங்கு அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளன.
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போதும், தமக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலத்தில் விட்டு, அதன்மூலம் கிடைத்த தொகையை பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தினார். அதே நடைமுறையை தற்போதும் பின்பற்றி, அதன் மூலம் கிடைத்த தொகையை கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்த உள்ளார்.
****