Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு நாளை பயணத்தைத் தொடங்குகிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஆகஸ்ட் 29) முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை இருதரப்பு அரசு முறைப் பயணமாக உஸ்பெகிஸ்தானுக்கும், 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக கிர்கிஸ்தானுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

 

உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ்-ன் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஆகஸ்ட் 29 முதல் 30 வரை தாஷ்கண்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இது உஸ்பெகிஸ்தானுக்கு பிரதமர் மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும். இந்தப் பயணத்தின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி, உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவ்-வுடன் பிரதிநிதிக்குழு நிலையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி, மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் ஆய்வு செய்து, எதிர்காலத்திற்கான செயல்திட்டத்தை வகுப்பார்கள். மேலும்,  வளர்ச்சிக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்த கண்ணோட்டங்களையும் அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள். பிரதமர் தாஷ்கண்டில் உள்ள சாஸ்திரி நினைவிடம், தாஷ்கண்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள மகாத்மா காந்தி மையம் ஆகியவற்றையும் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 கிர்கிஸ்தான் அதிபர் திரு சதிர் ஜபரோவ் அவர்களின் அழைப்பின் பேரில், தாஷ்கண்டிலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை கிர்கிஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு பிஷ்கெக்கில் நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த உச்சிமாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இதில் இந்தியா 2017 முதல் முழு உறுப்பினராக உள்ளது. பிரதமர் இந்த உச்சிமாநாட்டில் உரையாற்றவுள்ளார். அதில் அவர் இந்தியாவின் முன்னுரிமைகளை எடுத்துரைப்பார். பிரதமர் இந்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார். மத்திய ஆசியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடும் 6-வது உலக பாரம்பரிய நாட்டுப்புற விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2304395&reg=3&lang=1

(Release ID : 2304395)

****

SS/PLM/SH