Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு. நரேந்திர மோடி பூடானில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டபோது வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்


மேதகு பூடான் பிரதமரும்

என் நண்பருமான டாக்டர் ட்ஷெரிங் அவர்களே,

சிறப்புக்குரிய விருந்தினர்களே,

பெரியோர்களே, தாய்மார்களே,

வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவுடன் ஒருங்கிணைந்த மற்றும் விசேஷ நட்பு நாடான பூடானில் இங்கு உங்கள் மத்தியில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும், எனது தூதுக் குழுவினருக்கும் அன்பான வரவேற்பு அளித்தமைக்காக பிரதமருக்கும், பூடான் ராயல் அரசாங்கத்துக்கும் நான் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேதகு தலைவர் அவர்களே,

இந்தியா- பூடான் இடையே உள்ள இந்த தனித்துவமான நட்புறவு குறித்த உங்களுடைய தாராள சிந்தனைகளுக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 130 கோடி இந்தியர்களின் மனங்களில் பூடானுக்கு விசேஷமான ஓர் இடம் உண்டு. எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், பிரதமர் என்ற முறையில் முதலில் பூடானுக்குப் பயணம் மேற்கொள்வது என்பது இயல்பான தேர்வாக இருந்தது. இந்த முறையும்கூட, எனது இரண்டாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் பூடானுக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இரு நாடுகளின் வளர்ச்சி, வளமை, மக்களின் பாதுகாப்பு என்ற பொதுவான அம்சங்களின் அடிப்படையில் இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையிலான உறவுகள் அமைந்துள்ளன. அதனால் இரு நாட்டு மக்களிடமும் அவற்றுக்கு முழுமையான ஆதரவு உள்ளது.

மேதகு தலைவர் அவர்களே,

இந்திய மக்கள் அளித்த பெரும்பான்மை ஆதரவு காரணமாக உங்களுடன், பூடான் மன்னருடன், இணைந்து, இந்த உறவுகளைப் பலப்படுத்துவதற்காகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது என்று தெரிவித்துக் கொள்வது என்னுடைய கடமை. நமது பங்களிப்பு தொடர்பாக மாட்சிமை பொருந்திய பூடான் மன்னருடன் கலந்துரையாட எனக்கு இன்று வாய்ப்பு கிடைத்தது. இன்னும் சிறிது நேரத்தில், பூடானின் மாட்சிமை பொருந்திய நான்காவது மன்னரையும் நான் சந்திக்கவிருக்கிறேன். பூடான் மன்னர்களின் தொலைநோக்கு சிந்தனையும், நுண்ணறிவுத் திறனும் இருதரப்பு உறவுகளை நீண்ட காலமாகப் பேணி வந்துள்ளன. இது மட்டுமின்றி, வளர்ச்சி என்பது எண்களால் மதிப்பிடப்படுவதில்லை என்றும், மக்களின் மகிழ்ச்சியின் அடிப்படையில் மதிப்பிடப் படுகிறது என்றும் தனித்துவமான உதாரணத்தை உலகிற்கு காட்டியுள்ள பூடானின் தொலைநோக்குத் திட்டங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழலுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளது. இதுபோன்ற நட்பு மற்றும் பக்கத்து நாட்டை யார் தான் விரும்ப மாட்டார்கள்?

 நண்பர்களே,

பூடானின் வளர்ச்சியில் பெரிய பங்காளராக இந்தியா இருப்பதில் பெருமை கொள்கிறோம். பூடானின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இந்தியாவின் ஆதரவு மேலும் தொடரும். அவர்களின் விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளைப் பொருத்து இது தொடரும்.

நண்பர்களே,

நமது இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்புக்கான முக்கிய துறையாக நீர்மின் உற்பத்தித் துறை உள்ளது. பூடானில் உள்ள நதிகளின் சக்தியை மின்சாரமாக மட்டுமின்றி, பரஸ்பர வளமையாகவும் மாற்றுவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டுள்ளன. இன்று மங்கடேச்சு திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, நாம் மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியிருக்கிறோம். இரு நாடுகளின் ஒத்துழைப்பு காரணமாக, பூடானில் நீர்மின் உற்பத்தித் திறன் 2000 மெகாவாட் அளவைத் தாண்டிவிட்டது. மற்ற திட்டங்களையும் விரைவாக நாம் முன்னெடுத்துச் செல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மேதகு தலைவர் அவர்களே,

பூடானின் சாமானிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவில் இருந்து வழங்கப்படும் சமையல் எரிவாயு அளவு மாதத்துக்கு 700 எம்.டி.யில் இருந்து 1000 எம்.டி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பசுமை எரிபொருள் கிடைக்கச் செய்வதற்கு இது உதவிகரமாக இருக்கும்.

நண்பர்களே,

சாமானிய மக்களுக்கு நல்ல சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், தான் அரசியலுக்கு வந்ததாக எங்களுடைய முதலாவது சந்திப்பின் போது டாக்டர் ட்ஷெரிங் என்னிடம் கூறினார். அவருடைய தொலைநோக்கு சிந்தனையால் நான் மிகவும் ஈர்க்கப் பட்டேன். பூடானில் பல துறைகளைக் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைப்பது என்ற அவருடைய கனவை நனவாக்க, சாத்தியமான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்.

மேதகு தலைவர் அவர்களே,

சார்க் கரன்சி மாற்று கட்டமைப்பின் கீழ், பூடான் கரன்சி மாற்று வரம்பை அதிகரிப்பதில் நாங்கள் ஆக்கபூர்வமாக இருக்கிறோம். இதற்கிடையில், அன்னியச் செலாவணி தேவையை பூர்த்தி செய்வதற்காக, கரன்சி மாற்று ஏற்பாட்டில் ஆயத்தநிலைத் தொகையாக பூடானுக்கு கூடுதலாக 100 மில்லியன் டாலர்களை இந்தியா அளிக்கும்.

நண்பர்களே,

விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூடானில் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிப்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. தெற்காசிய செயற்கைக்கோளின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை இன்று நாங்கள் தொடங்கி வைத்தோம். பூடானில் தொலைத் தொடர்பு, அரசு ஒளிபரப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அம்சங்கள் இதனால் மேம்படுத்தப்படும். இந்தத் தேவைகளுக்காக பூடானின் தேவையைப் பொருத்து கூடுதல் அலைக்கற்றை மற்றும் டிரான்ஸ்பான்டர்களும் அளிக்கப்படும். சிறிய செயற்கைக்கோள்கள் உருவாக்குவது மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படும். இந்தியாவின் தேசிய அறிவுசார் நெட்வொர்க்குடனான தொடர்பு மூலம் பூடான் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் புதிய ஆதாரவள வசதிகள் கிடைக்கும். இரு நாடுகளுக்கு இடையில் பொதுவான அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதில் இது முக்கியமான ஒரு படிக்கல்லாக இருக்கும். இதனால் குறிப்பாக இளைஞர்கள் பயன் பெறுவார்கள். ராயல் பூடான் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஐ.ஐ.டி.கள் மற்றும் சில உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, உறவுகள், கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு உள்ளன. இந்த நாட்டின் திறமைமிக்க இளைஞர்களை ராயல் பூடான் பல்கலைக்கழகத்தில் நாளை சந்திப்பதை நான் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.

நண்பர்களே,

பூடானில் ரூபே (RuPay) கார்டுகளை இன்று தொடங்கியதில் நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். டிஜிட்டல் பட்டுவாடா, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் நமது உறவுகளை  இன்னும் பலப்படுத்துவதாக இது இருக்கும். பொதுவான ஆன்மிக பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகள் தான் நமது உறவுகளின் இதயமாக உள்ளது. இதை மனதில் கொண்டு நாளந்தா பல்கலைக்கழகத்தில் பூடான் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை எண்ணிக்கை இரண்டில் இருந்து ஐந்தாக உயர்த்தப் படுகிறது. இன்று இங்கு ஜாப்டிரங் ஆசியை நான் பெற்றேன். தனித்துவமான இந்தச் சிலை பூடானில் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இருப்பதற்கு இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேதகு தலைவர் அவர்களே,

இந்தியா – பூடான் இடையிலான உறவுகளின் வரலாறு புகழ்மிக்கதாக இருந்தது, எதிர்காலமும் அதுபோலவே இருக்கும். இரு நாடுகளுக்கு இடையில் தனித்துவமான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு முன்மாதிரியாகக் காட்டும் வகையில் இந்தியா, பூடான் உறவுகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த அழகிய டிருக் யூலுக்கு மீண்டும் வருவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு,

உங்களுடைய வரவேற்பு மற்றும் பாசத்துக்கு இன்னொரு முறை பல பல நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டாஷி டெலாக்!

 

*****