பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை புது தில்லி துவாரகா பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கலை-கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மையம் ஒன்றை உருவாக்குவதற்காக மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் அதன் மேலூக்கத்திற்கான துறைக்கு புதுதில்லி, துவாரகா பகுதி, 25ஆவது பிரிவில் 89.72 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை அமைச்சரவை முடிவு செய்த ஆறு வார காலத்திற்குள் பெயரளவிற்கு ரூ.1/- என்ற தொகைக்கு கைமாற்றித் தருவதற்கு தனது அனுமதியை வழங்கியது. இது ஒரு சிறப்பான விஷயம் என்ற வகையில் தில்லி வளர்ச்சி ஆணையத்திற்கு 1957ஆம் ஆண்டின் தில்லி வளர்ச்சி சட்டம் பிரிவு 21(1)இன் கீழ், அதனோடு கூடவே அதே சட்டத்தின் பிரிவு 41(1) இன் படியும் இத்தகைய வழிகாட்டுதல்களை வழங்கலாம்.
இதன் மூலம் வழங்கப்படும் நிலமானது தொழில் கொள்கை மற்றும் அதன் மேலூக்கத்திற்கான துறையிடமே இருக்கும். கண்காட்சி அரங்குகள், கருத்தரங்க அரங்குகள், விழா அரங்குகள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள், நிதி மையங்கள், ஓட்டல்கள், உணவு மற்றும் பானங்களுக்கான அரங்குகள் மற்றும் சில்லறை விற்பனை மையங்கள் போன்று தனித்தனியான மற்றும் ஒன்றுக்கொன்று பயனுடையதான வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய உலகத் தரத்திலான கலை-கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி மையம் ஒன்றை உருவாக்க இந்த நிலம் பயன்படுத்தப்படும். இதற்கான திட்டத்தை வடிவமைப்பது, தனியார்-பொதுத் துறை திட்டத்திற்குள் அடங்காத கட்டமைப்பிற்கான துவக்க நிலை செலவுகள் ஆகியவற்றை அரசு ஏற்றுக் கொள்ளும். இதுபோன்ற முன்கூட்டிய செலவுகள் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்குத்தொகையாக இருக்கும்.
இத்திட்டத்தை வடிவமைப்பது, இதை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை வெளிப்படையான வகையில், போட்டியுணர்வுடன் நடத்திச் செல்வது ஆகியவற்றுக்காக தொழில்கொள்கை மற்றும் அதன் மேலூக்கத்திற்கான துறையின் செயலாளர், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர், மத்திய செலவுத் துறையின் செயலாளர், பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் செயலாளர் மற்றும் நித்தி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்தது.
இத்திட்டம் பொது-தனியார் கூட்டு முறையில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் முழுமையாக நிறைவேறுவதற்கு, தேவைப்படுமானால் மத்திய அரசின் இடைவெளியை நிரப்புவதற்கான நிதியுதவியையும் பயன்படுத்திக் கொள்ளும். இத்திட்டத்தின் பல்வேறு வசதிகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் தனியார் அமைப்புகளுக்கு நிலத்தை குத்தகைக்கோ/ கீழ்குத்தகைக்கோ விடுவதற்கும், இதர சலுகைகள் வழங்கவும் தொழில் கொள்கை மற்றும் அதன் மேலூக்கத்திற்கான துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஒதுக்கப்பட்ட நிலத்தை கலப்பு வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியும் தில்லி வளர்ச்சி ஆணையம்/ மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றால் விரைந்து வழங்கப்படும்.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மையத்தையும் அதற்கு உதவும் அமைப்புகளையும் வளர்த்தெடுப்பதென்பது பொதுநிகழ்வுகளின் எண்ணிக்கை என்ற அளவில் ஆசியாவின் பங்கை 2021ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 15% அதிகரிக்க உதவும். திட்டமிடப்பட்டுள்ள கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மையமானது வருடந்தோறும் 100க்கும் அதிகமான சர்வதேச, உள்ளூர் கண்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தேவையை கொண்டுவரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மையம் மற்றும் அதன் உதவிக்கான அமைப்புகளின் வளர்ச்சியானது கூட்டங்கள், ஊக்க நிகழ்வுகள், மாநாடுகள், கண்காட்சிகள் என்ற வகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஆண்டுதோறும் கொண்டுவர உதவும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகளின் மூலம், இத்திட்டத்தின் இரண்டாவது கட்ட வேலைகள் நிறைவு பெற்ற பிறகு ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி (40 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இந்தியாவில் செலவழிக்க வழியமைக்கும். இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலை உருவாக்கம் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களான கண்காட்சி, கருத்தரங்கு, அதன் தொடர்புடைய வசதிகள் ஆகியவற்றில் மட்டுமின்றி, இந்த நிலத்தினை பயன்படுத்தவிருக்கும் சில்லறை விற்பனை, அலுவலகம், விருந்தினர் உபசரிப்பு போன்ற இதர துறைகளிலும் முறையான, நீடித்த வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
பின்னணித் தகவல்
சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்துவோர் எதிர்பார்க்கும் பரந்த இடம், திட்ட வசதிகள், போக்குவரத்திற்கான தொடர்புகள் போன்ற தேவைகளை நிறைவேற்றும் வகையில் உலகத் தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசதி இந்தியாவில் தற்போது இல்லை. ஒழுங்கமைக்கப்பட்ட இடம் என்ற வகையில் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது உள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே தில்லியில் பிரகதி மைதானில் உள்ள கண்காட்சி மையம் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு இடமாக இருந்து வருகிறது. அதுவும் கூட அதன் கொள்ளளவும் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் ஆகியவற்றால் குறிப்பாக அந்த மையத்திற்கு வருகை தருவோர் மற்றும் மாநகரத்தில் குடியிருப்போர் ஆகியோருக்கும் நெருக்கடியை தருவதாகவே உள்ளது. மேலும் தற்போது இருக்கும் இத்தகைய கண்காட்சி வசதிகளுக்கு தொடர்ந்து எழுந்து வரும் தேவைகளின் காரணமாக, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவதற்கு உரிய வகையில் அவற்றை பராமரிப்பதற்கும், சர்வதேச தரத்தில் அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும் இயலாத நிலையே தற்போது உள்ளது.
உலகளாவிய கூட்டங்கள், ஊக்க நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கான சந்தை என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதும் சுமார் 4,00,000 மாநாடுகளையும் கண்காட்சிகளையும் நடத்தி வருவதாக, $280 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ளதாக, உலகின் பெருமளவிலான நாடுகளின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இதில் ஆசிய கண்டத்தின் பங்கு என்பது 60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்பதோடு , 2006ஆம் ஆண்டிலிருந்து சுமார் 38% வளர்ச்சி பெற்று வருவதாகவும் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்க வசதிகள் நம்மிடம் இல்லாத நிலையில் இந்த வளர்ச்சிப் போக்கின் பயன்களை இந்தியாவினால் பெற முடியாத நிலையே உள்ளது. இந்த மாபெரும் சந்தையை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும், இந்தியாவின் தொழில், வணிகம், வர்த்தகம், சுற்றுலா ஆகிய துறைகளுக்கு ஊக்கமளிக்கவுமே, தொழில்கொள்கை மற்றும் மேம்படுத்தலுக்கான துறை புதுதில்லியில் உலகத்தரத்திலான கண்காட்சி மற்றும் மாநாடுகளுக்கான மையம் ஒன்றை வளர்த்தெடுப்பது என்ற முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது.