பி.எம்.இந்தியா
பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், அவர்களை காப்பாற்றுவது, மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்புவது, அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திருப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்காக, இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாட்டுக்கிடையே உள்ள உறவை மேம்படுத்துவதோடு, பெண்கள் மற்றும் கடத்தலை தடுப்பது, காப்பாற்றுவது, மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை விரைந்து எடுக்க உதவும்.
இந்த ஒப்பந்தம், இரு நாட்டின் உள்துறை அமைச்சர்களால், பஹ்ரைன் நாட்டில் ஏப்ரல் 2016 முதல் வாரத்தில் கையெழுத்திடப்பட உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின் வருமாறு :
1) அனைத்து வகையான மனித கடத்தல்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, விரைவான புலனாய்வு மற்றும் இது தொடர்பான கடத்தல் கும்பல்கள் மீது விரைந்த நடவடிக்கை.
2) பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது.
3) இரு தரப்பிலும், கடத்தல் தடுப்பு மற்றும் சிறப்பு காவல் படை கடத்தல்களை தடுப்பதற்காக செயல்படும்.
4) இது தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள இரு தரப்பிலும் உள்ள காவல் துறையும் சட்ட அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்கும்.
5) கடத்தப்பட்ட பெண்கள் அல்லது குழந்தைகளை மீண்டும் தாய்நாட்டுக்கு அனுப்பவும், அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
6) இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுவதை கண்காணிக்க இரு தரப்பினரும் பங்கேற்கும் குழு ஒன்று உருவாக்கப்படும்.
பின்னணி :
தெற்காசிய நாடுகள் மற்றும் அருகாமையில் உள்ள நாடுகள் ஆகியவை கடத்தலுக்கான இடங்களாக இருந்து வருகின்றன. இவ்வாறு கடத்தப்படுவதில் பாதிக்கப்படுபவர்கள், மத்திய கிழக்குப் பிரதேசங்களில் கண்டு பிடிக்கப்படுவதும் அதிகமாகி வருகிறது.
பஹ்ரைனுக்கு கடத்தல் நடத்தப்படுவதற்கு இந்தியா ஒரு மையமாக இருந்து வருகிறது. பஹ்ரைன் நாட்டுக்கு கடினமான வேலைக்கும், விபச்சாரத்துக்கும் என ஆட்களை கடத்துவது நடந்து வருகிறது. தெற்காசியாவைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும், பஹ்ரைன் நாட்டில் கட்டுமான வேலைகள், சேவைத் துறையில் பணியாற்றுதல் மற்றும் வீட்டு வேலைக்காக செல்கிறார்கள். இவ்வாறு வேலைக்கு செல்பவர்களிடம் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொள்ளுதல், ஒரு இடத்தில் அடைத்து வைப்பது, ஒப்பந்தத்தில் இல்லாத வேலைக்கு பணிப்பது, ஊதியம் தராமல் நிறுத்தி வைப்பது, மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்தியா மற்றும் பஹ்ரைன் இடையே ஆள் கடத்தலை தடுப்பதற்கு அனைத்து மட்டங்களிலும் நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு அவசியமாகிறது. இதற்கு இரு நாடுகளிடையே உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது, முழுமையான கூட்டுறவு கூட்டு புலனாய்வு ஆகிய நடவடிக்கைகள் அவசியமாகிறது. இதற்காகவே பஹ்ரைன் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அவசியமாகிறது. இது தொடர்பாக ஏற்கனவே இந்தியா வங்காளதேச நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.