பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய அமைச்சரவை பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்த தற்போதுள்ள கொள்கையை மாற்றி, தங்களுக்கே உரிய வகையில் கொள்கைகளை உருவாக்கிக் கொள்வதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கு தனது ஒப்புதலை வழங்கியது. இறுதியில் நுகர்வோர் பயன் பெறும் வகையில் மேலும் திறமையான, இணக்கமுள்ள, ஆற்றல்நிறைந்த கச்சா எண்ணெய் இறக்குமதிக் கொள்கையை வழங்குவதாக இந்த மாற்றம் இருக்கும்.
தற்போது நடைமுறையில் உள்ள கச்சா எண்ணெய் இறக்குமதிக் கொள்கையானது 1979ஆம் ஆண்டில் அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகும். இந்தக் கொள்கையில் ஒரு சில மாற்றங்களை கொண்டுவர மத்திய அமைச்சரவை 2001ஆம் ஆண்டில் ஒப்புதல் அளித்தது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் தற்போதைய கொள்கை இருந்த போதிலும், மாறிக்கொண்டே வரும் காலத்திற்கேற்ப இந்தக் கொள்கை உருவாக்கப்பட வேண்டிய தேவையும் உள்ளது. மாறிக் கொண்டே வரும் புவி-அரசியல் சூழ்நிலையில் தற்போதைய தேவைகளுக்கு உகந்தவகையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான கொள்கையும் மாற்றப் படவேண்டிய தேவை உள்ளது. சந்தையில் சிறப்பான முறையில் போட்டியிட வேண்டுமெனில், தற்போதைய சந்தையில் உள்ள வழக்கமான எண்ணெய் உற்பத்தியிடத்திலேயே சென்று நேரடியாக விலையை நிர்ணயிப்பது போன்ற முறைகளையும் இவை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இந்த விஷயத்தில் தற்போதைய கொள்கையானது ஒரு சில கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் கொண்டதாக உள்ளது. இதன் விளைவாக திறமையான ஆதாரங்கள் மற்றும் கொள்முதல் முறைகள் ஆகியவை மட்டுப்படுத்தப்படுகின்றன.
2001ஆம் ஆண்டில் அமைச்சரவை எடுத்த முடிவிற்குப் பிறகு, இந்த பொதுத் துறை நிறுவனங்களில் நவரத்தினா, மகாரத்னா தகுதிபெற்ற நிறுவனங்களுக்கு கணிசமான அதிகாரங்களை வழங்கியுள்ளது. செயல்முறை, நிதி மற்றும் முதலீடு தொடர்பான பல்வேறு விஷயங்களில் பெருமளவிற்கு இந்த நிறுவனங்களுக்கு சுயாட்சி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய கண்காணிப்பு குழுவின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உகந்த வகையில், மத்திய அரசின் பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துகொள்ள தங்களுக்கே உரிய கொள்கைகளை வகுத்துக் கொள்ளவும், அந்தந்த நிர்வாகக் குழுக்களில் அதற்கான ஒப்புதல்களை பெறவும் அனுமதித்து மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியது. குறைந்த அரசுத் தலையீடு; அதிகபட்சமான நிர்வாகம் என்ற அரசின் குறிக்கோளுக்கு உகந்த இந்த நடவடிக்கையானது எண்ணெய் நிறுவனங்களின் செயலளவிலும், வணிகரீதியாகவும் இணக்கமான வகையில் செயல்படுவதை மேம்படுத்துவதோடு, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு மிகச் சிறப்பான கொள்முதல் நடைமுறைகளை மேற்கொள்ளவும் உதவும்.