பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆகியவை இணைந்து, மத்திய சாலை நிதியிலிருந்து 2.5 சதவிகித நிதியை தேசிய நீர்வழிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், அதற்காக மத்திய சாலை நிதி சட்டம் 2000த்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் விடுத்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. இந்த கோரிக்கை நிதி தேசிய நீர்வழிகளை பராமரிப்பதற்கான நிதிக்காகவும், தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சிக்கு வழங்கப்படும் நிதியின் அளவை குறைப்பதற்காகவும் வைக்கப்பட்டது. தேசிய நீர்வழி திட்டங்களை செயல்படுத்துகையில் தனியார் அரசு கூட்டு திட்டங்களாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தனியார் முதலீடு இல்லாத நேர்வுகளில் மட்டுமே அரசு நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சரவை உத்தரவு பிறப்பித்தது.
அடுத்து வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்திய சாலை நிதி (திருத்தச்) சட்டம் 2017ஐ, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்.
தாக்கம் :
தற்போது மத்திய சாலை நிதிக்கு வரும் வருவாயை வைத்து கணக்கிட்டால், அதிலிருந்து ஒதுக்கப்படும் 2.5 சதவிகித நிதியானது 2000 கோடியாக இருக்கும். இது தேசிய நீர்வழிப் பாதைகளை பராமரிக்க பயன்படும். 2022-23ம் ஆண்டு வரையில் புதிய நீர்வழிப் பாதைத் திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த 25,000 கோடி நிதி தேவைப்படும் என்று உள்ளுர் நீர்வழிப் பாதைகள் ஆணையம் கணித்துள்ளது. தேசிய நீர்வழி 1ல் (கங்கை நதி) பல்முனை நிறுத்தங்கள், நதி தகவல் வழங்கும் முறை, வழிகளை முறைப்படுத்துதல் ஆகியவை ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படத் தொடங்கி விட்டது. உள்ளுர் நீர்வழிப் பாதைகள் ஆணையம் அடுத்த கட்டமாக 24 தேசிய நீர்வழிப் பாதைகளை அடுத்த மூன்றாண்டுகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டங்களினால் உள்ளுர் நீர்வழிப் போக்குவரத்தினால் அடுத்த ஐந்தாண்டுகளில் 1.8 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வேலை வாய்ப்புகள், நீர்வழிப் பாதைகள், படகுப் போக்குவரத்து, முனையங்கள், ஆகியவற்றில் உருவாகும். கூடுதலாக உருவாக்கப்பட உள்ள 106 தேசிய நீர்வழிப் பாதைகள் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
பின்னணி :
நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில், உள்ளுர் நீர்வழிப் பாதை போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே உள்ள 5 தேசிய நீர்வழிப் பாதைகளை பராமரிக்கவும், 106 புதிய தேசிய நீர்வரிப் பாதைகளை உருவாக்கவும், தேசிய நீர்வழிப் பாதைகள் சட்டம் 2016 உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்தால், தேசிய நீர்வழிப் பாதைகளுக்கு போதுமான நிதி மத்திய சாலை நிதியிலிருந்து ஒதுக்கப்படும். சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் உள்ள நெரிசலை குறைத்து, சுற்றுச் சூழலுக்கு ஏதுவான ஒரு போக்குவரத்து முறையை, ஒரு செலவு குறைந்த போக்குவரத்து முறையை உருவாக்கி, தனியார் நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்ய வைக்கும் நகர்வில், இது ஒரு முக்கிய மைல் கல். 2000 டெட் வெயிட் திறனுள்ள ஒரு கப்பல், 125 லாரிகள் மற்றும் 40 ரயில் கோச்சுகளில் கொண்டு செல்லப்படும் சரக்குகளை எடுத்துச் செல்ல இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
***