Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. அனில் மாதவ் தவே மறைவு – அமைச்சரவைக் இரங்கல்


மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. அனில் மாதவ் தவே மறைவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், என்று பல்வேறு துறைகளில் சிறப்பாக விளங்கியவரின் மறைவில் நாடு சிறந்த தலைவரை இழந்துள்ளது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டம், திரு. அனில் மாதவ் தவேவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் நாட்டின் சார்பாக தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.

நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்;

மத்தியப் பிரதேசம், உஜ்ஜையினில் உள்ள பார் நகரில் 1956 ஜூலை 6 திரு. அனில் மாதவ் தவே பிறந்தார். இந்தூர் குஜராத்தி கல்லூரியிலிருந்து முதுநிலைப் பட்டத்தைப் பெற்ற அவர், ஊரக வளர்ச்சி மற்றும் மேலாண்மையில் தனிச் சிறப்பு பெற்றவர்.

நதி பாதுகாவலர், சுற்றுச்சூழல் நிபுணர் மற்றும் சமூக ஆர்வலராக திரு. தவே விளங்கினார். சிறந்த எழுத்தாளரான அவர், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ஜன் அபியான் பரிஷத்தின் நிறுவனரான அவர், மாத இதழான சாராய்வெட்டி மற்றும் ஜன் அபியான் பரிஷத்தின் ஆசிரியராக பணிபுரிந்தார். பயிற்சி பெற்ற விமானியான இவர், நர்மதா நதி உற்பத்தியாகும் இடம் முதல் முகத்துவாரம் வரை செஸ்னா 173 விமானத்தில் பறந்து, 1312 கி.மீ தூரத்தை கடந்தார். 1000 – ம் முறைக்கு மேல் அரங்கேற்றப்பட்ட சத்திரபதி சிவாஜியின் ஜனதா ராஜா என்ற நாடகத்தை இவர் ஒருங்கிணைத்தார். இதில் ஒன்று லண்டனில் உள்ள வெம்ப்லே – யில் அரங்கேற்றப்பட்டது.

2009 – ல் மாநிலங்கள் அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நீர் வளங்கள் குழு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு மற்றும் பல்வேறு குழுக்களில் இவர் இடம் பெற்றிருந்தார். உலக வெப்பமய மாக்குதல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக விளங்கினார். 2016 – ல் மாநிலங்கள் அவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் முதல் இணை அமைச்சராகப் (தனிப்பொறுப்பு) பொறுப்பேற்றார்.

ஏழை மற்றும் எளியோருக்கான உண்மையான சமூக ஆர்வலராகத் திரு. அனில் மாதவ் தவே அறியப்பட்டார். சுற்றுச்சூழல் பாதுகாவலராக, நர்மதா நதியின் பாதுகாப்புக்கு அவர் அயராது பாடுபட்டார். உண்மையான தேசியவாதியான இவர், தனது பொது பொறுப்புகளை மிக கனிவுடன் கையாண்டார். இவரின் மறைவின் மூலம் மத்தியப் பிரதேசத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவரை நாடு இழந்துள்ளது.