பி.எம்.இந்தியா
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2026ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் இது. நாளை ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நாமனைவரும் குடியரசுத் திருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்த நாளன்று தான் நமது அரசியலமைப்புச் சட்டம் அமல் செய்யப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதி என்ற தினம் குறிப்பாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களை நினைவுகூரக்கூடிய சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. இன்று ஜனவரி மாதம் 25ஆம் தேதியும் கூட மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்காளர் தான் ஜனநாயகத்தின் ஆன்மா.
நண்பர்களே, பொதுவாகவே யாருக்கு 18 வயதாகிறதோ, அவர் வாக்காளர் ஆகி விடுகிறார், இது வாழ்க்கையின் ஒரு பொதுவான நிலையாகக் கருதப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் எந்த ஒரு இந்தியரின் வாழ்க்கையிலேயும் இது வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கல்லாகும். ஆகையால், நாம் தேசத்தின் வாக்காளராக ஆவதை ஒரு கொண்டாட்டமாகவே கொண்டாடுவோம். எப்படி நாம் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாடுகிறோமோ, அதே போல எந்த ஒரு இளைஞரும் முதன்முறையாக வாக்காளராக ஆகிறார் என்றால், அந்தப் பகுதி, கிராமம் அல்லது நகரம் முழுவதும் அவரை வரவேற்று இனிப்புக்களை வழங்க வேண்டும். இதனால் மக்களிடம் வாக்குரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இதோடு கூடவே, வாக்காளர் ஆவது எத்தனை மகத்துவமானது என்ற உணர்வு மேலும் வலுவடையும்.
நண்பர்களே, தேசத்திலே தேர்தல் நடைமுறையோடு இணைந்திருப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் நமது ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க கள அளவில் பணியாற்றி வருகின்றார்கள். நான் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இன்று வாக்காளர் தினத்தன்று நான் நமது இளைய நண்பர்களிடம் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன், உங்களுக்கு 18 வயதான உடனேயே நீங்கள் உங்களை வாக்காளராகக் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ளுங்கள். அரசியல் அமைப்புச் சட்டமானது எந்த கடமையுணர்ச்சியை அனைத்து வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதோ, நீங்கள் பதிவு செய்து கொண்டு வாக்களிப்பதன் வாயிலாக அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுவதோடு, பாரதத்தின் ஜனநாயகமும் பலமடையும்.
எனதருமை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் சமூக ஊடகத்திலே ஒரு சுவாரசியமான போக்கு காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் தங்களுடைய நினைவுகளை மக்கள் மீண்டும் பசுமையாக்கிக் கொள்கிறார்கள். இந்த உணர்வுடனே கூட, இன்றும் கூட, உங்களோடு நான் என்னுடைய ஒரு நினைவலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பத்தாண்டுகள் முன்னால், ஜனவரி மாதம் 2016ஆம் ஆண்டிலே, நாம் ஒரு சாகஸமான பயணத்தைத் தொடங்கினோம். எங்களுடைய முயற்சி சிறியதாக இருக்கலாம் ஆனால், நமது இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அப்போது யாருக்கும் இதுபற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. நண்பர்களே, நான் எந்தப் பயணம் குறித்துப் பேசுகிறேன் தெரியுமா?
நண்பர்களே, நான் எந்தப் பயணம் பற்றி பேசுகிறேன் என்றால், அது தான் ”ஸ்டார்ட் அப் இண்டியா”வின் பயணம் அது பற்றித்தான். இந்த அற்புதமான பயணத்தின் நாயகர்கள் நமது இளைய நண்பர்கள் தான். தங்களுடைய சொகுசான வாழ்க்கையை விடுத்து வெளியேறி, அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் நூதனங்கள் எல்லாம் வரலாற்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நண்பர்களே, பாரதத்திலே இன்று உலகின் 3ஆவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலமைப்பு உருவாகி விட்டது. இந்த ஸ்டார்ட் அப்புகள் வாடிக்கையானவற்றை விட்டு சற்று விலகி, பத்தாண்டுகளுக்கு முன்னால் வரை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத துறைகளில் எல்லாம் பணியாற்றி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு, அணுசக்தி ஆற்றல் குறைகடத்திகள், இடப்பெயர்வு, பசுமை ஹைட்ரொஜன், உயிரி தொழில்நுட்பம் என நீங்கள் கூறுவது எதுவாக இருந்தாலும், ஏதாவது ஒரு இந்திய ஸ்டார்ட் அப் அந்தத் துறையில் பணியாற்றி வருவதை நீங்கள் காணலாம். ஏதோ ஒரு ஸ்டார்ட் அப்போடு தொடர்புடைய அல்லது ஸ்டார்ட் அப் தொடங்க நினைக்கும் அனைத்து இளைய நண்பர்களுக்கும் நான் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, இன்று மனதின் குரல் வாயிலாக நான் நாட்டுமக்களுக்கு, குறிப்பாக தொழில்துறை மற்றும் ஸ்டார்ட் அப்புகளோடு இணைந்த இளைஞர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். பாரதத்தின் பொருளாதாரம் விரைந்து முன்னேறி வருகின்றது. பாரதத்தின் மீது உலகத்தின் பார்வை இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் நம்மனைவருக்கும் ஒரு பெரும் பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பு என்னவென்றால், தரத்தின் மீது கவனம் செலுத்துவது தான். அதுவா நடக்கும், பார்த்துக்கலாம், செஞ்சுக்கலாம் என்ற காலகட்டம் மலையேறி விட்டது. வாருங்கள், நாம் முழு சக்தியோடு தரத்திற்கு முதன்மை அளிப்போம். நம்மனைவரின் மந்திரமும் ஒன்று தான், அது தரம், தரம், தரமாக மட்டுமே இருக்க வேண்டும். நேற்றைய தரத்தை விடச் சிறப்பாக இன்றைய தரம் இருக்க வேண்டும். நாம் எதைத் தயாரித்தாலும், அதன் தரத்தைச் சிறப்பாக ஆக்கும் உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அது நமது ஜவுளித்துறையாக்ட்டும், தொழில்நுட்பத்துறையாகட்டும், மின்னணுத்துறையாகட்டும், ஏன் பேக்கேஜிங்காகட்டும், இந்தியப் பொருட்களின் அடையாளம், தலைசிறந்த தரம் என்றாக வேண்டும். வாருங்கள், நம்முடைய சிறப்பம்சத்தை நாம் நமது அளவுகோலாக ஆக்கிக் கொள்வோம். தரத்திலே எந்த விதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று உறுதியேற்போம், நான் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய வேளையில், Zero Defect Zero Effect, குறைபாடும் இல்லை, சூழல் பாதிப்பும் இல்லை என்று கூறியபடி செயல்பட்டால், வளர்ச்சியடைந்த பாரதத்தின் பயணத்தை மேலும் விரைவாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
என் மனம் நிறை நாட்டுமக்களே, நமது தேசத்தின் மக்கள் மிகவும் புதுமைகள் படைப்பவர்களாக இருக்கிறார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுவது நமது நாட்டுமக்களின் இயல்பிலேயே இருக்கிறது. சிலர் இந்தப் பணியை ஸ்டார்ட் அப்புகள் வாயிலாகச் செய்கிறார்கள், சிலர் சமூக சக்தி என்ற பாதையைத் தேர்ந்தெடுத்து முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இப்படிப்பட்டதொரு முயற்சி தான் உத்தர பிரதேசத்தின் ஆஸம்கட்டிலே தெரிய வந்திருக்கிறது. இங்கே பெருகியோடும் தமஸா நதி மக்களுக்குப் புதிய வாழ்க்கையை அளித்திருக்கிறது. தமஸா வெறும் நதி மட்டுமல்ல, நமது கலாச்சார மற்றும் ஆன்மீக மரபின் உயிர்ப்புடைய பெருக்காகும். அயோத்தியிலிருந்து தொடங்கி கங்கையிலே கலக்கும் இந்த நதி இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையை வளமாக்கி வந்தது. ஆனால் மாசு காரணமாக இதன் தொடர் பெருக்கிலே தடையேற்பட்டது. வண்டல், குப்பை கூளங்கள் மற்றும் மாசு காரணமாக இந்த நதியின் பிரவாகம் தடைப்பட்டுப் போனது. இதன் பிறகு இங்கே இருக்கும் மக்கள் இந்த நதிக்குப் புதியதோர் உயிர்ப்பளிக்க வேண்டி இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். நதி தூய்மைப்படுத்தப்பட்டது, அதன் கரையோரங்களிலே நிழல்தரும், பழம்தரும் தருக்கள் நடப்பட்டன. வட்டார மக்கள் கடமையுணர்வுடன் இந்தப் பணியில் ஈடுபட்டார்கள், அனைவரின் முயற்சிகளாலும் நதி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.
நண்பர்களே, மக்களின் பங்களிப்பு தொடர்பான இப்படிப்பட்ட ஒரு முயற்சி ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூரிலும் காணக் கிடைக்கிறது. இந்தப் பகுதி வறட்சி என்ற தீவிரமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்தது. இங்கிருக்கும் மண் செந்நிறம் உடையது, மணல் பாங்கானது. இதன் காரணமாகவே மக்கள் நீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பல இடங்களிலே நீண்ட காலமாகவே மழை பொழிவதில்லை. பலவேளைகளில் மக்கள் அனந்தபூரை பாலைவன நிலைமையோடு கூட ஒப்பிட்டுக் கூறுவதுண்டு.
நண்பர்களே, இந்தப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடி வட்டார மக்கள் இணைந்து நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்த உறுதி பூண்டார்கள். பிறகு நிர்வாகத்தின் துணையோடு இங்கே அனந்த் நீரூ சம்ரக்ஷண் ப்ராஜெக்ட் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின்படி, பத்துக்கும் அதிகமான நீர்நிலைகளுக்கு மீளுயிர் வாய்த்தது. அந்த நீர்நிலைகளில் எல்லாம் இப்போது நீர் நிரம்பத் தொடங்கிவிட்டது. இதோடு கூடவே, 7000த்திற்கும் அதிகமான மரங்களும் நடப்பட்டன. அதாவது அனந்தபூரிலே நீர் பாதுகாப்போடு கூடவே, பசுங்கூரையும் அதிகரித்துவிட்டது. இங்கே ஆனந்தமாக நீந்தி மகிழலாம். ஒரு வகையிலே பார்த்தோமென்றால், இங்கே இருக்கும் மொத்த சூழலமைப்பும் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது எனலாம்.
நண்பர்களே, ஆஸம்கட்டாகட்டும், அனந்தபூராகட்டும், அல்லது தேசத்தின் எந்தவொரு இடமாகட்டும், மக்கள் ஒன்றிணைந்து கடமை உணர்வோடு பெரியபெரிய உறுதிப்பாடுகளையும் சாதித்து வருகிறார்கள். மக்கள் பங்களிப்பும், சமூக செயல்பாடும் என்ற உணர்வுகள் தாம் நமது தேசத்தின் மிகப்பெரிய பலம்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது தேசத்திலே பஜனை மற்றும் கீர்த்தனைகள் எல்லாம் பல நூற்றாண்டுகளாகவே, நமது கலாச்சாரத்தின் ஆன்மாவாகவே இருந்து வந்திருக்கின்றன. நமது ஆலயங்களில் நாம் பஜனைப்பாடல்களைக் கேட்டிருப்போம், கதாகாலக்ஷேபத்தைக் கேட்டிருப்போம், ஒவ்வொரு காலத்திலும் நாம் பக்திக்கு என ஒரு வேளையை நம் வாழ்கையில் ஒரு பங்கினை அளித்திருக்கிறோம். இன்றைய தலைமுறையும் கூட சில புதிய அதிசயங்களைச் செய்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் பக்தி உணர்வைத் தங்களுடைய அனுபவம் மற்றும் தங்களுடைய வாழ்க்கைமுறையால் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணம் காரணமாக ஒரு புதிய கலாச்சார வழிமுறை வெளியாகி வந்திருக்கிறது. இப்படிப்பட்ட காணொளிகளை நீங்கள் சமூக ஊடகங்களிலே கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். தேசத்தின் பல்வேறு நகரங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் திரண்டு வருகிறார்கள். அலங்கரிக்கப்பட்ட மேடை, ஒளிவெள்ளம், இசைப்பெருக்கு, எல்லாம் தடபுடலாக இருக்கிறது, சூழல் எல்லாம் ஏதோ பெரிய இசைக்கச்சேரிக்கு சற்றும் குறைந்தது கிடையாது. ஏதோ பெரிய இசைக்கச்சேரி நடப்பது போல இருக்கும், ஆனால் அங்கே என்ன நடக்கிறது என்றால் முழு ஈடுபாட்டோடு, பக்தி சிரத்தையோடு, லயம் நிறைந்த பஜனைப் பாடல்கள் எதிரொலிக்கின்றன. இந்தச் செயல்பாட்டை இன்று பஜன் க்ளப்பிங் என்று அழைக்கிறார்கள்; குறிப்பாக இதை ஜென்ஸீ என்று அழைக்கப்படும் புதிய தலைமுறையினருக்கு இடையே இது விரைவாக விரும்பப்படு பொருளாக ஆகி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பஜனைப்பாடல்களின் கண்ணியம் மற்றும் தூய்மையின் மீது கவனம் செலுத்தப்படுவது மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. பக்தி லேசாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, சொற்களுக்கான மரியாதை விடுபடுவதில்லை, பாவமும் குறைபடுவதில்லை. ஆன்மீகத்தின் தொடர் பிரவாகத்தை அங்கே அனுபவிக்க முடியும்.
என் உளம்நிறை நாட்டுமக்களே, இன்று நமது கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள், உலகம் முழுவதிலும் தங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றன. உலகெங்கிலும் பாரதத்தின் பண்டிகைகள், பெரும் உல்லாசம்–உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றன. அனைத்து வகையான கலாச்சார அதிர்வினை போற்றிப் பாதுகாப்பதில் நமது அயல்நாடுவாழ் சகோதர சகோதரிகளுக்கு விசேஷமான பங்களிப்பு இருக்கின்றது. அவர்கள் எங்கே இருந்தாலும், அங்கே தங்களுடைய கலாச்சாரத்தின் அடிப்படை உணர்வைப் பாதுகாத்து, அதை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இது தொடர்பாக மலேஷியாவிலும் நமது பாரத சமூகத்தினர் மிகவும் போற்றுதலுக்குரிய பணியை ஆற்றி வருகின்றார்கள். மலேஷியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். இவற்றிலே தமிழ் கற்பிக்கப்படுவதோடு, பிற விஷயங்களையும் கூட தமிழிலேயே கற்பிக்கின்றார்கள். இதைத் தவிர, இங்கே தெலுகு–பஞ்சாபி மொழிகளோடு சேர்த்து, பிற பாரதநாட்டு மொழிகளின் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
நண்பர்களே, பாரதம் மற்றும் மலேஷியாவுக்கு இடையே வரலாற்றுரீதியான, கலாச்சார உறவுகளை பலப்படுத்துவதிலே ஒரு சொஸைட்டி–சங்கத்தின் பெரிய பங்களிப்பு இருக்கின்றது. இதன் பெயர் Malaysia India Heritage Society. பல்வேறு நிகழ்ச்சிகளோடு கூடவே, இந்த அமைப்பு ஒரு மரபுசார் நடைபயணத்திற்கும் ஏற்பாடு செய்கிறது. இதிலே இரு நாடுகளையும் பரஸ்பரம் இணைக்கும் கலாச்சார இடங்கள் இடம் பெறுகின்றன. கடந்த மாதம் மலேஷியாவிலே லால் பாட் சாடீ (लाल पाड़ साड़ी), மரபுசார் நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சாடிக்கும் நமது வங்காளி கலாச்சாரத்திற்கும் சிறப்பானதொரு தொடர்பு இருந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலே அதிக எண்ணிக்கையில் இந்த புடவையை அணிந்ததற்கான பதிவு ஏற்படுத்தப்பட்டது, இது மலேஷியன் சாதனைகள் புத்தகமான Malaysian Book of Recordsஇல் பதிவு செய்யப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலே ஒடிஸீ நடனமும், பவுல் இசையும் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டன. நான் என்ன சொல்கிறேன் என்றால் –
ஸாயா பர்பாங்கா / தேங்கான் டீயாஸ்போரா இண்டியா / தி மலேஷியா //
மேரேகா மம்பாபா / இண்டியா தான் மலேஷியா / ஸேமாகின் ராபா //
மலேஷியாவாழ் பாரதநாட்டவரை நினைத்து எனக்கு பெருமிதம் ஏற்படுகிறது. பாரதத்திற்கும் மலேஷியாவிற்கும் இடையே இவர்கள் தாம் நெருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், என்பதே இதன் பொருள். மலேஷியாவாழ் பாரதநாட்டவருக்கெல்லாம் எனது பலப்பல நல்வாழ்த்துக்கள்.
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நாம் பாரதத்தின் எந்தவொரு பகுதிக்குச் சென்றாலும், அங்கே ஏதாவது அசாதாரணமான, இதுவரை காணாத ஒன்று கண்டிப்பாக கண்ணில் படும். பலவேளைகளில் ஊடகங்களின் பகட்டு–பளீரொளியில் இந்த விஷயங்கள் எடுபடாமல் போவதுண்டு. ஆனால் நமது சமூகத்தின் மெய்யான சக்தி யாது என்பது இவற்றிலிருந்து நமக்குத் தெரியவரும். இவற்றிலிருந்து ஒற்றுமை உணர்வு அனைத்திலும் உயர்வானதாகக் கருதும் நமது நன்மதிப்புகள் பற்றிய ஒரு காட்சியும் நமக்குக் கிடைக்கிறது. குஜராத்திலே பேச்ராஜீ பகுதியின் சந்தன் கிராமத்தின் பாரம்பரியம் மிகவும் விசித்திரமானது. இங்கே இருக்கும் மக்கள், குறிப்பாக மூத்தவர்கள் தங்களுடைய வீடுகளில் உணவு சமைப்பதில்லை என்று நான் சொல்லும் போது நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். கிராமத்திலே இருக்கும் சமுதாய சமையற்கூடம் தான் இதற்குக் காரணம். இந்த சமுதாய சமையற்கூடத்திலே ஒரே நேரத்தில் கிராமம் முழுவதில் இருக்கும் அனைவருக்கும் உணவு சமைக்கப்படுகிறது, மக்களும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்ல, யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களுக்கான டிஃபன் சேவையும் இங்கே உண்டு, அதாவது வீட்டுக்கே சென்று அளிக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் தயார். கிராமத்தின் இந்த சமூக சாப்பாடு, மக்களிடம் ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த முன்னெடுப்பு, மக்களை பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் இணைப்பதோடு, இதனால் குடும்பரீதியான உணர்வுக்கும் ஊக்கம் கிடைக்கிறது.
நண்பர்களே, பாரதத்தின் குடும்பமுறை நமது பாரம்பரியத்தின் இணைபிரியா அங்கமாகும். உலகின் பல நாடுகளில் இது மிகவும் ஆர்வத்தோடு பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் இப்படிப்பட்ட குடும்பமுறை தொடர்பாக மிகவும் மதிப்பு அளிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான், என்னுடைய சகோதரர், ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ஷேக் மொஹம்மத் பின் ஜாயத் அல் நாஹயான் பாரதம் வந்திருந்தார். ஐக்கிய அரபு அமீரகம் 2026ஆம் ஆண்டினை குடும்ப ஆண்டாகக் கொண்டாடுவதாக அவர் என்னிடம் கூறினார். அதாவது அங்கே இருப்போருக்கு இடையே சகோதரத்துவம் மற்றும் சமூக உணர்வு மேலும் உறுதிப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். உள்ளபடியே இது மிகவும் பாராட்டுதற்குரிய முன்னெடுப்புத் தான்.
நண்பர்களே, குடும்பம்–சமூகம் ஆகியவற்றின் பலம் கிடைக்கும் வேளையில், நம்மால் பெரியபெரிய சவால்களையும் தோற்கடிக்க முடியும். அனந்தநாகின் ஷேக்குண்ட் கிராமம் பற்றிய தகவல் கிடைத்தது. இங்கே போதைப்பொருள், புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானம் ஆகியவற்றோடு தொடர்புடைய பல சவால்கள் அதிகரித்திருந்தன. இவை அனைத்தையும் பார்த்த பிறகு, இந்தப் பகுதியைச் சேர்ந்த மீர் ஜாஃபர் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளானார், இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கட்டியே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டார். இவர் கிராமத்தின் இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரையும் ஒன்றிணைத்தார். இவருடைய முன்னெடுப்பு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், இங்கே இருக்கும் கடைகள் தாங்கள் புகையிலைப் பொருட்கள் விற்பதையே நிறுத்தி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த முயற்சியால் போதைப் பொருட்கள் அபாயம் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது.
நண்பர்களே, நமது தேசத்திலே இப்படி அநேக அமைப்புகளும் இருக்கின்றன, இவை பல ஆண்டுகளாகவே சுயநலமில்லா வகையிலே சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிபூரின் ஃபரீத்பூரிலே இருக்கும் ஒரு அமைப்பைச் சொல்லலாம். இதன் பெயர் விவேகானந்த் லோக் சிக்ஷா நிகேதனம். இந்த அமைப்பு கடந்த நான்கு பத்தாண்டுகளில் குழந்தைகள் மற்றும் மூத்தவர்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. குருகுல முறைப்படி கல்வியும், ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுவதோடு, இந்த அமைப்பு சமூக நலனுக்காக வேண்டி பல நேரிய காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. தன்னலமற்ற சேவை என்ற இந்த உணர்வு, நாட்டுமக்கள் மத்தியில் தொடர்ந்து மேலும்மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே என் ஆசை.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் தொடர்ந்து தூய்மை விஷயம் பற்றி அடிக்கடி பேசி வருகிறோம். நமது இளைஞர்கள் தங்களுக்கருகே தூய்மை தொடர்பாக மிகவும் விழிப்போடு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெருமிதம் ஏற்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஒரு விநோதமான முயற்சி பற்றி எனக்குத் தெரிய வந்தது. அருணாச்சலத்தின் மண்ணின் மீதுதான் தேசத்தில் முதலில் சூரியன் உதிக்கிறது. இங்கே மக்கள் ஜய் ஹிந்த் என்று சொல்லித் தான் ஒருவருக்கொருவர் வாழ்த்துகிறார்கள். இங்கே ஈடாநகரின் இளைஞர்களின் குழு அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் தூய்மைப்பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்கள் பல்வேறு நகரங்களிலே பொதுவிடங்களிலே தூய்மைப்பணியை தங்களுடைய பெருநோக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். இதன் பிறகு ஈடாநகர், நாஹர்லாகுன், தோயிமுக், ஸேப்பா, பாலின், பாஸீகாட் ஆகிய இடங்களிலும் இவர்கள் இந்த இயக்கத்தைச் செயல்படுத்தினார்கள். இந்த இளைஞர்கள் இதுவரை கிட்டத்தட்ட 11 இலட்சம் கிலோவுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றி இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே, இளைஞர்கள் இணைந்து 11 இலட்சம் கிலோ எடையுடைய குப்பைக் கூளங்களை அகற்றியிருக்கிறார்கள்!!
நண்பர்களே, மேலும் ஒரு எடுத்துக்காட்டு அஸாமைச் சேர்ந்தது. அஸாமிலே நாகாவிலே இருக்கின்ற பழமையான தெருக்களோடு மக்கள் உணர்வுப்பூர்வமாக இணைந்திருக்கிறார்கள். இங்கே சிலர் தங்களுடைய தெருக்களை இணைந்து சுத்தம் செய்யும் உறுதிப்பாட்டை ஏற்றிருக்கிறார்கள். மெல்லமெல்ல அவர்களோடு மேலும் பலர் இணைந்து கொண்டார்கள். இதைப் போலவே மேலும் ஒரு குழு தயாரானது, இது தெருக்களில் தேங்கிக் கிடந்த ஏகப்பட்ட குப்பையை அகற்றியது. நண்பர்களே, இப்படிப்பட்ட மேலும் ஒரு முயற்சி பெங்களூருவிலே நடந்து வருகிறது. பெங்களூருவிலே சோஃபா கழிவு என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்த போது, தொழில்வல்லுநர்கள் ஒன்றிணைந்து இதற்கான தீர்வினை, தங்களுக்கே உரித்தான வகையிலே கண்டுபிடித்தார்கள்.
நண்பர்களே, இன்று பல நகரங்களில் இப்படிப்பட்ட குழுக்கள், பள்ளங்களை இட்டுநிரப்பும் மறுசுழற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் இப்படிப்பட்ட ஒரு குழுவானது மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட உதாரணங்களால் என்ன தெரிய வருகிறது என்றால், தூய்மையோடு தொடர்புடைய அனைத்து முயற்சிகளுமே முக்கியமானவை தாம். நாம் தூய்மைக்காக தனிப்பட்ட முறையிலேயோ, குழுவாகவோ இணைந்து நம்முடைய முயற்சிகளை அதிகரிக்க வேண்டும், அப்போது தான் நமது நகரங்கள் மேலும் சிறப்பாக ஆகும்.
என் இதயம்வாழ் நாட்டுமக்களே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் வேளையிலே நமது மனதிலே பெரிய திட்டங்கள், பெரிய இயக்கங்கள், பெரியபெரிய அமைப்புகள் பற்றியே சிந்தனை எழும். ஆனால் பல வேளைகளில் மாற்றத்தின் தொடக்கம் மிகவும் சாதாரணமான முறையிலே நடக்கிறது. ஒரு தனிநபரால், ஒரு பகுதியால், ஓர் முன்னெடுப்பால், மேலும் தொடர்ந்து செய்யப்பட்டுவரும் சின்னச்சின்ன முயற்சிகளாலும் மாற்றம் ஏற்படுகிறது. மேற்கு வங்கத்தின் கூச் பிஹாரில் வசிக்கும் பேனாய் தாஸ் அவர்களின் முயற்சி இதற்கான எடுத்துக்காட்டு. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் தங்களுடைய மாவட்டத்தைப் பசுமையாக்கும் பணியை தனியொரு மனிதனாக செய்திருக்கிறார். பேனாய் தாஸ் அவர்கள் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். பலமுறை மரங்களை வாங்குவது முதல் அவற்றை நடுவது, பராமரிப்பது என அனைத்துவகையான செலவினங்களையும் தானே மேற்கொண்டும் இருக்கிறார். எங்கே தேவையோ, அங்கெல்லாம் வட்டார மக்கள், மாணவர்கள், நகர நிர்வாகத்தினரோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவருடைய முயற்சிகள் காரணமாக சாலையோரங்களில் பசுமை மேலும் அதிகரித்து வருகிறது.
நண்பர்களே, மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகதீஷ் பிரஸாத் அஹிர்வார் அவர்களுடைய முயற்சியும் கூட மிகவும் பாராட்டுக்குரியது. இவர் காடுகளிலே beat-guard, அதாவது குறிப்பிட்ட பகுதியின் காவலாளியாக தனது சேவைகளைப் புரிந்து வருகிறார். காட்டில் இருக்கும் பல மருத்துவத் தாவரங்கள் குறித்த தகவல்கள் எங்குமே கூட முறையான வகையிலே பதிவு செய்யப்படவில்லை என்ற எண்ணம் ஒருமுறை பணியின் போது அவருக்கு உதித்தது. ஜகதீஷ் அவர்கள் இந்தத் தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆகையால் அவர் மருத்துவத் தாவரங்களை அடையாளம் கண்டு அவற்றின் பதிவுகளை ஏற்படுத்துவதைத் துவக்கினார். அவர் 125க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களை அடையாளம் கண்டார். ஒவ்வொரு தாவரத்தின் படம், பயன்கள், அவற்றின் இருப்பிடம் பற்றிய தகவல்களைத் திரட்டினார். அவரால் திரட்டப்பட்ட தகவல்களை நெறிப்படுத்தி, புத்தக வடிவிலே வனத்துறை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திலே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் இப்போது ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்து வருகிறது.
நண்பர்களே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற இந்த உணர்வு தான் இன்று பெரிய அளவில் வெளிப்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தோடு தான் நாடெங்கிலும் ஒரு மரம் தாயின் பெயரில் இயக்கமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தோடு நாடெங்கிலும் கோடானுகோடி பேர் இணைந்திருக்கிறார்கள். இதுவரை தேசத்திலே 200 கோடிக்கும் அதிகமானோர் மரங்களை நட்டிருக்கின்றார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் இப்போது மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. மேலும் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் விரும்புகிறார்கள்.
என் கனிவான நாட்டுமக்களே, நான் உங்கள் அனைவரையும் மேலும் ஒரு விஷயத்திற்காக பாராட்ட விரும்புகிறேன். ஸ்ரீ அன்னம் அதாவது சிறுதானியங்கள் தான் அதற்கான காரணம். சிறுதானியங்களின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 2023ஆம் ஆண்டினை சிறுதானிய ஆண்டாக நாம் அறிவித்திருந்தோம். ஆனால் இன்று மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட, இது தொடர்பாக நாட்டிலும் சரி, உலகிலும் சரி, இருக்கின்ற பேரார்வமும், அர்ப்பணிப்பும் மிகவும் உற்சாகத்தை அளிக்கின்றது.
நண்பர்களே, தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளின் ஒரு குழு உத்வேகக் காரணியாக ஆகிவிட்டது. இங்கே பெரியகல்வராயன் சிறுதானிய எஃப்பிசியுடன் கிட்டத்தட்ட 800 பெண் விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். சிறுதானியங்களின் மீது அதிகரித்துவரும் விருப்பத்தை உணர்ந்து இந்தப் பெண்கள் சிறுதானியப் பதப்படுத்தும் அலகை நிறுவினார்கள். இப்போது இவர்கள் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக சந்தைவரை கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
நண்பர்களே, ராஜஸ்தானின் ராம்ஸரிலும் கூட விவசாயிகள் சிறுதானியங்கள் தொடர்பாக நூதனக் கண்டுபிடிப்பை செய்து வருகிறார்கள். இங்கே இருக்கும் ராம்ஸர் கரிம விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தோடு 900க்கும் அதிகமான விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். இந்த விவசாயிகள் முக்கியமாக கம்பு தானியத்தைப் பயிர் செய்கிறார்கள். இங்கே கம்பு பதப்படுத்தப்பட்டு, உண்ணத் தயாரான லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இதற்கு சந்தையிலே அதிக தேவை இருக்கிறது. இது மட்டுமல்ல நண்பர்களே, இப்போதெல்லாம் பல ஆலயங்கள் பிரசாதங்களை பக்தர்களுக்கு அளிக்கும் போது அதிலே சிறுதானியங்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள். இந்த முன்னெடுப்பிற்காக, நான் இப்படிப்பட்ட ஆலயங்களின் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, சிறுதானியங்களால் அன்னமிடும் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதோடு கூடவே மக்களின் உடல்நலமும் மேம்பாடு அடைவதற்கான உத்திரவாதமும் ஆகிறது. சிறுதானியங்களில் ஊட்டச்சத்துக்கள் செறிவாக இருக்கின்றன, இவை சூப்பர் உணவாக இருக்கின்றன. நமது தேசத்திலே குளிர்காலம் என்பது உணவுக்கான உகந்த பருவமாகக் கருதப்படுகிறது. அந்த வகையிலே இந்த நாட்களில் நாம் சிறுதானியங்களை உட்கொள்வது அவசியமானது.
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை வேறுபட்ட பல விஷயங்கள் குறித்து உரையாடும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்தது. நமது தேசத்தின் சாதனைகளை அனுபவிக்கவும், கொண்டாடவும் ஒரு சந்தர்ப்பத்தை இந்த நிகழ்ச்சி நமக்கு அளிக்கிறது. ஃபிப்ரவரியிலே இப்படிப்பட்ட மேலும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு வருகிறது. அடுத்த மாதம் India AI Impact Summit நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டிலே உலகெங்கிலும் இருந்தும், குறிப்பாக, தொழில்நுட்பத் துறையோடு இணைந்த வல்லுநர்கள் பாரதம் வருவார்கள். இந்த மாநாடு செயற்கை நுண்ணறிவு உலகிலே பாரதத்தின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளை முன்னிறுத்தும். இதிலே பங்கெடுக்கவிருக்கும் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அடுத்த மாதம் மனதின் குரலில் இந்த India AI Impact Summit குறித்து நாம் கண்டிப்பாக பேசுவோம். இதோடு கூடவே நாட்டுமக்களின் வேறுசில சாதனைகள் குறித்தும் உரையாடி மகிழ்வோம். அதுவரை மனதின் குரலிலிருந்து எனக்கு ஓய்வு தாருங்கள். நாளை குடியரசுத் திருநாளுக்காக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துகள்.
நன்றி.
***
AD/PLM/RJ
#MannKiBaat has begun. Do hear! https://t.co/5EAOEXwcV8
— PMO India (@PMOIndia) January 25, 2026
Being a voter is a matter of privilege and responsibility in a democracy. #MannKiBaat #NationalVotersDay pic.twitter.com/vDrWYTSkxA
— PMO India (@PMOIndia) January 25, 2026
A commendable effort in Uttar Pradesh's Azamgarh. #MannKiBaat pic.twitter.com/Ut7SPTW1kV
— PMO India (@PMOIndia) January 25, 2026
People's movement that revived water bodies in Andhra Pradesh's Anantapur. #MannKiBaat pic.twitter.com/UXhAQKbttU
— PMO India (@PMOIndia) January 25, 2026
Today, India has turned into the third-largest start-up ecosystem in the world. #MannKiBaat pic.twitter.com/75knQ43uDs
— PMO India (@PMOIndia) January 25, 2026
PM @narendramodi urges industry and startups to focus on quality. Let excellence become our benchmark.#MannKiBaat pic.twitter.com/mDTXrxuZKd
— PMO India (@PMOIndia) January 25, 2026
Bhajan clubbing is becoming popular among Gen Z. It is a wonderful attempt to merge spirituality with modernity, while maintaining the sanctity of the bhajans.#MannKiBaat pic.twitter.com/1TYnoboJkr
— PMO India (@PMOIndia) January 25, 2026
The efforts of the Indian community in Malaysia are praiseworthy. #MannKiBaat pic.twitter.com/fwJzQnCjbR
— PMO India (@PMOIndia) January 25, 2026
This village in Gujarat has a community kitchen that will amaze you...#MannKiBaat pic.twitter.com/nz8vdmObJ4
— PMO India (@PMOIndia) January 25, 2026
An inspiring development from Anantnag. #MannKiBaat pic.twitter.com/EJPTG3BIaa
— PMO India (@PMOIndia) January 25, 2026
No headlines, no fame... Just 40 years of service by Vivekananda Loksiksha Niketan of West Bengal. #MannKiBaat pic.twitter.com/nNydCztKnc
— PMO India (@PMOIndia) January 25, 2026
From Arunachal Pradesh to Assam, inspiring Swachh Bharat efforts are making a positive difference.#MannKiBaat pic.twitter.com/BMlN3n0RFm
— PMO India (@PMOIndia) January 25, 2026
An encouraging effort to increase green cover in West Bengal.#MannKiBaat pic.twitter.com/8xiGi84lzH
— PMO India (@PMOIndia) January 25, 2026
An inspiring story of a forest beat-guard from Madhya Pradesh. #MannKiBaat pic.twitter.com/XKxNwCPCPR
— PMO India (@PMOIndia) January 25, 2026
The growing awareness and acceptance of millets or Shree Anna reflect a positive shift in food choices. #MannKiBaat pic.twitter.com/QlX37FNPph
— PMO India (@PMOIndia) January 25, 2026