Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களவையில் பணி நிறைவு செய்யும் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை


மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,

மதிப்பிற்குரிய மேலவையின் உறுப்பினர்களே,

நமது அவையின் சில சகாக்கள் போதிய அனுபவத்தைப் பெற்றதை அடுத்து, சமூகப் பணியில் தங்களது பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவர் என்று திடமாக நம்புகிறேன். இந்த மாநிலங்களவையில் தமது பணியை நிறைவு செய்யும் ஒவ்வொரு உறுப்பினரும் அவர்களுக்கே முக்கியமான வகையில் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் வகையில் ஒவ்வொருவரும் உறுப்பினராக இருந்த காலத்தில் தங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டனர். அதை மறக்க முடியாது.

எல்லோரும் மிகச் சிறந்த சேவையை வழங்கியதற்காக நான் பாராட்டு தெரிவிக்கிறேன். அத்துடன் உங்களது எதிர்கால வாழ்வு சிறந்து விளங்கவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் அவைக்கு மதிப்பைக் கூட்டும் மூத்த உறுப்பினர்களுக்கு உரியதாக மாநிலங்களவை உள்ளது. இந்த மாநிலங்களவையின் மூத்த உறுப்பினர்கள் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் எடைபோட்டு எதிர்காலத்தில் சமூகத்திற்கு எது நல்லது, எது நல்லதல்ல என்பதைப் பாரபட்சமில்லாமல் கணிக்க முடிந்தவர்கள் அதன் காரணமாக இந்த அவையில் என்னவெல்லாம் பேசப்பட்டனவோ அவற்றுக்கெல்லாம் தனி மதிப்பும் தனி முக்கியத்துவமும் உண்டு. அது நமது கொள்கைகளை வகுப்பதற்கு மிக முக்கியப் பங்கை அளிக்கிறது.

நம்மிடையில் மதிப்பிற்குரிய பராசரண் போன்ற புகழ்மிக்கவர்கள் உள்ளனர். அவர்கள் தொழில் திறமையுடன் துறவியைப் போன்ற வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அத்தகைய மனிதர்கள் நம்மிடையில் இருந்தார்கள். ஆனால், இனிமேல் அவர்களது ஆற்றலை இந்த அவையால் பயன்படுத்திக்கொள்ள இயலாது.

இந்தியாவின் பெருமைக்கு உரிய இருவரான திருவாளர்கள் திலீப் மற்றும் சச்சின் ஆகியோரும் வருங்காலத்தில் நம் அவையை அலங்கரிக்க மாட்டார்கள். அவர்களாலும் இந்த அவைக்குக் கிடைக்க வேண்டிய பயன் கிடைக்காமல் போகும்.

பேராசிரியர் குரியனை மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பர். அவரது புன்னகை முகத்தை மறக்க முடியாது. எதைச் சொல்லும்போதும் புன்னகை மாறாமல் இருப்பதைக் கற்றுக் கொள்ளவேண்டும். இது அவரது தனிக் குணம். அதனால்தான் இந்த அவையில் சிக்கலான நேரத்தில் கூட ஒழுங்குமுறையில் அவர் காட்டும் பங்களிப்பு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.

இன்னும் சிலர் எந்தக் கட்சியின் பின்னணியும் இன்றி, எந்தக் கட்சியின் கோட்பாடும் இல்லாமல் இருக்கிறார்கள். அவ்வாறு இருப்போர் மிகக் குறைவுதான். நம்மில் பெரும்பாலானோர் ஏதாவது பின்னணி கொண்டவர்களாக இருக்கிறோம். அதனால்தான் அத்தகைய கோட்பாடு சார்ந்த கருத்துகளை முன்வைக்க முயல்கிறோம். இது மிகவும் இயல்பானது.

மக்களவையில் என்னென்ன நிகழ்கின்றனவோ அவையெல்லாம் மாநிலங்களவையிலும் நடைபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அது தேவையில்லை. அதனால், ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய பங்களிப்பை இந்த அவைக்குச் செலுத்துகிறார்கள். காரணம், மாநிலங்களவைக்கு என்று தனி முக்கியத்துவம் இருக்கிறது.

உங்களில் சிலர், இது நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசித் தொடர்; எனவே, நாம் இந்தப் பிரச்சினையை எழுப்ப வேண்டும்; நாம் இது குறித்து உரிய வகையில் தயார் செய்துகொண்டு பேசவேண்டும்; இந்த வரலாற்றுச் சிறப்புள்ள உரையை நிகழ்த்திவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிறைவு செய்வோம்; நாட்டுக்குத் தேவையான மிக முக்கியமான கருத்துகளைப் பதிவு செய்த பிறகு ஓய்வு பெறுவோம் என்றெல்லாம் திட்டமிட்டிருக்கலாம். இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு முன் அதற்கு உரிய வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கக் கூடும். இதற்கு வெளியே யாரும் பொறுப்பல்ல. நம் எல்லோருமே பொறுப்பாளிகள்தான். ஓய்வு பெறுவதற்கு முன் மிக முக்கியமான முடிவுகளில் பங்கேற்கும் வாய்ப்பு உங்களுக்குத் தரப்பட்டிருந்தால், ஓய்வுபெறும்போது சில நல்ல மரபுகளை விட்டுச் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் தனிப் பொறுப்பை ஏற்றிருக்கக் கூடும்.

இவையெல்லாம் அவையில் நிகழும் சில சம்பவங்களால் உங்களைப் போன்றோர் போதிய வாய்ப்பைப் பெறாமல் நல்ல வாய்ப்பு இழந்திருக்கக் கூடும். எனினும், மாண்புமிகு அவைத் தலைவர் இதற்காகக் கடும் முயற்சிகளை எடுத்தார். ஒவ்வொருவரையும் கேட்டுக்கொண்டார். எல்லோரையும் அரவணைத்துச் செல்ல முயன்றார். திரு. விஜய் கூட கேட்டுக்கொண்டார்.

இறுதியில், இன்று ஓய்வு பெறுவோர் அனைத்து உறுப்பினர்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவது நிறைவேறுகிறது. அப்படி இருந்தாலும், சிலர் கடைசி வாய்ப்புக்கான நேரத்திலும் தங்களது கருத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டதை வரலாறு மறக்காது. உங்களது பதவிக் காலத்தில் வாய்ப்புகள் பெற்றீர்கள். அதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள். இருந்தாலும் கடைசி வாய்ப்பை இழந்தீர்கள்.

இந்திய வரலாற்றில் எதிர்காலத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தப் போகும் முத்தலாக் போன்ற பல முக்கியமான முடிவுகளில் உங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. உங்களில் மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். எனினும், இன்று ஓய்வு பெறுவோர் அந்த வாய்ப்பை இழக்கிறார்கள். இது உங்களுக்குச் சிறிது மனவருத்தம் அளிக்கும் என்பதை அறிவேன். இப்போது வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அடுத்து 10, 20, 25, 30 ஆண்டுகளில் நிச்சயம் வாய்ப்பு கிட்டும். அவையெல்லாம் நிறைவேறியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கும் மீண்டும் நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சகா என்ற முறையில் நான் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த அவையின் ஒரு கதவு உங்களுக்கு மூடப்படுகிறது என்பதற்காக அவையின் எல்லாக் கதவுகளும் மூடப்படுவதாகக் கருதிவிட வேண்டாம். இந்த நாடாளுமன்ற வளாகத்தின் கதவுகள் உங்களுக்காகத் திறந்தே இருக்கும். அதைப் போல் பிரதமரின் அலுவலகக் கதவுகளும் உங்களுக்காகத் திறந்திருக்கும்.

நாட்டுநலன் கருதி, உங்களுக்கு என்ன சிந்தனைகள் தோன்றுகின்றனவோ எப்போதும் வரவேற்றுக் காத்திருக்கிறோம். உங்களது கருத்துகளைக் கேட்டுக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். உங்களது கருத்துகள், யோசனைகளைப் புரிந்துகொள்வதில் மகிழ்வேன். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது கருத்துகளையும் உங்களது பங்களிப்பையும் முன்னெடுத்துச் செல்ல நிச்சயம் முயல்வேன்.

மீண்டும் உங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.