பி.எம்.இந்தியா
நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பேயின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம் வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன் மற்றும் பலர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே, பிரதமர் உரையாற்றினார். பிரதமர் தனது பல ட்விட்டுகளில் தெரிவித்ததாவது:
“இன்று முதல், அடல்ஜி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நம்முடனே இருப்பார், நம்மை ஊக்குவிப்பார், நம்மை ஆசீர்வதிப்பார்.
அடல்ஜியின் நற்பண்புகளைப் பற்றி நாம் பேச ஆரம்பித்தால், அது பல மணி நேரத்திற்கு தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அடல்ஜி அரசியல் வாழ்வில் நீண்ட காலம் தொண்டாற்றியவர். தனது பெரும்பான்மை காலத்தை எதிரணியில் கழித்தவர்.
இருப்பினும், பொதுமக்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். தனது சித்தாந்தத்திலிருந்து எப்பொழுதும், என்றும் விலகாதவர்.
அடல்ஜியின் உரையில் ஒரு ஆற்றல் இருந்தது. அதற்கு சமமான ஆற்றல் அவரது மவுனத்திலும் இருந்தது.
அவரது தகவல் தொடர்பு திறன்களுக்கு ஈடு இணையே இல்லை. அவர் சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்” இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
——–